ஏ.ஆர்.ஏ.பரீல்
பெரும்பான்மை சமூகத்துடன் மிகவும் நெருங்கிப் பழகி, தமிழ் சமூகத்தையும் அரவணைத்து அரசியல் செய்து இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்ட அரசியல்வாதியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் யு.எல்.எம்.பாரூக் கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை வபாத்தானார். இவர் 1941ஆம் ஆண்டு பிறந்தவர்.
யு.எல்.எம்.பாரூக் கேகாலை மாவட்டத்தின் முதலாவது சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினராகும்.ருவன்வெல்ல தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஆர்.பிரேமதாசவின் அரசாங்கத்தில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும் இலங்கை மத்திய போக்குவரத்துச் சபை தலைவர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்தவராவார்.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச 1956ஆம் ஆண்டு ருவன்வெல்ல தொகுதியில் போட்டியிட்ட போது பாரூக் 15 வயது இளைஞராக இருந்தார். அன்று பிரேமதாசவின் தேர்தல் பிரதான அலுவலகம் பாரூக்கின் தந் தையின் கட்டிடமொன்றிலே இயங்கியது. அக்காலத்தில் இந்த அலுவலகத்துக்கு அவர் அடிக்கடி சென்று வந்தார். இதனால் அவருக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. மாணவர் பருவத்திலே அரசியலில் ஈடுபட்டார். முன்னாள் தொழில் அமைச்சரும், ருவன்வெல்ல பாராளுமன்ற உறுப்பினருமான பி.சி. இம்புலானவுடன் நெருங்கிய உறவினைப் பேணிய பாரூக் அவரது வழிகாட்டலுடன் ஐ.தே. கட்சியூடாக அரசியலில் பிரவேசித்தார்.
1964 ஆம் ஆண்டு ருவன் வெல்ல கிராமசபைக்கு கன்னத்தோட்டை வட்டார ஐ.தே.க. அபேட்சகராக போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்துவந்த கிராம சபைத் தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றதுடன் சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ருவன்வெல்ல தொகுதியின் ஐ.தே.க. மத்திய அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் வெற்றி பெற்றார். பெரும்பான்மை மக்கள் இவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையே இதற்குக் காரணமாகும்.
1988ஆம் ஆண்டு ருவன்வெல்ல தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தொழீல் அமைச்சர் பி.சி. இம்புலான ஊவா மாகாண ஆளுநராக பதவியேற்றதனால் ஏற்பட்ட ருவன்வெல்ல தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இவ்வாக்கெடுப்பில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவானார்.
இதனடிப்படையில் ஐ.தே.க. செயற்குழு அவரை ருவன்வெல்ல தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு தீர்மானித்தது. 1988.06.20 ஆம் திகதி பாரூக் தனது 47ஆவது பிறந்த தினத்தில் ருவன்வெல்ல பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார். 1989 வரை பதவி வகித்த இவர் 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறை மூலம் கேகாலை மாவட்ட அபேட்சகராகப் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார்.
1990ஆம் ஆண்டு போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் போக்குவரத்து துறையில் பல மாற்றங்களைச் செய்தார். புகையிரத நிலையங்களுக்கும் பஸ் டிப்போக்களுக்கும் திடீர் விஜயங்களை மேற்கொண்டு போக்குவரத்து சேவையில் நிலவிய ஊழல், மோசடி, வீண்விரயம் என்பனவற்றைக் கண்டறிந்து அவற்றை களைய நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
வடகிழக்கு மாகாணத்தின் பஸ் சேவைகளைப் புனரமைக்கும் பொறுப்பு பாரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், மன்னார் தவிர்ந்த வடக்கு,கிழக்கின் சகல இ.போ.ச. டிப்போக்களும் இவரது தலைமையிலே மக்கள் மயப்படுத்தப்பட்டன. மட்டக்களப்பு டிப்போ மக்கள் மயப்படுத்தப்படும் நிகழ்வுக்கு சென்று திரும்பும் போது இவர் பயணித்த பாதையில் கண்ணிவெடி வைக்கப்பட்டிருந்தது. அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
கேகாலை மாவட்டத்தில் முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம் ஒன்றை நிறுவி சப்ரகமுவ மாகாண சபை மூலம் கெகாலை மாவட்டத்தின் பல முஸ்லிம் பாடசாலைகளின் கட்டிடப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார். ஒரே வருடத்தில் 19 முஸ்லிம் பாடசாலைகளுக்கு கட்டிடங்களைப்பெற்றுக் கொடுத்தார்.
2000 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் கட்சியின் வேண்டு கோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமுக்கு இடமளித்து தேர்தலில் போட்டியிருவதிலிருந்தும் விலகிக் கொண்டார்.
யு.எல்.எம்.பாரூக்கிற்கு பெரும்பான்மை சமூகத்தின் பெரும் ஆதரவு இருந்தது. நெருங்கிய நல்லுறவு இருந்தது. கேகாலை மூன்று கோறளையைச் சேர்ந்த சிங்கள மக்களின் எல்லையற்ற அன்பைப் பெற்றுள்ள பாரூக் அரசியலில் இல்லாமை இம்மக்களுக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டமாகும். அவர் எனது நெருங்கிய நண்பர். இவரது நல்லுறவினாலே பெரும்பான்மை மக்கள் இவரை தங்களது பிரதி நிதியாக தேர்ந்தெடுத்தார்கள். இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் தங்கள் பேதங்களிலிருந்தும் வெளியேறுவதற்கு இவர் முன்னுதாரணமாகும்’ என இவருக்கு இவர் அரசியலிலிருந்து விலகிக் கொண்டதன் பின்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் வெளியிடப்பட்டுள்ள நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூலில் இவரைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்திருந்த ருவன்வெல்ல சாசன பாதுகாப்பு சபையின் தலைவரும் மூன்று கோறளையின் பிரதான சங்க நாயக்கருமான ஹால்யாலே ஆரியவன்ச அபிமான நாயக்க தேரரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவர் இன ஐக்கியத்துக்காக பெரிதும் பாடுபட்டவர்.
பாரூக்கின் ஜனாஸா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கன்னத்தோட்டை மஸ்ஜிதுல் முனவ்வரா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் கேகா வை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி சபாநாயகர் உட்பட பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
ருவன்வெல்ல தொகுதியின் பிர தான நகரங்களில் வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் பெரும்பான்மை மக்கள் வெள்ளை கொடி ஏற்றியிருந்தனர். அவருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் கிட்ட நாமும் பிரார்த்திப்போம்.- Vidivelli