நாட்டில் கொவிட் 19 தொற்றுப்பரவல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. ஒரு புறம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 124 பேர் மரணித்ததாக நேற்று இரவு அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 95 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
எதிர்வரும் வாரங்களில் மரண எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். உடனடியாக நாடு முடக்கப்படாவிட்டால் அடுத்த 20 தினங்களில் மேலதிகமாக 1200 பேரை இழக்க வேண்டி வரும் என ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர் சுனேத் அகம்போடி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மரண வீதம் அதிகரித்துச் செல்கின்ற போதிலும் அரசாங்கம் இதனைக் கட்டுப்படுத்தி நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். “அரசாங்கத்தின் கொவிட் 19 முகாமைத்துவம் தொடர்பான கொள்கைகளில் உடனடி மாற்றங்கள் கொண்டுவரப்படாவிடின் இவ்வருட இறுதிக்குள் சுமார் 20 ஆயிரம் பேர் மரணிக்க வேண்டி ஏற்படும்” என சுகாதார கொள்கைகள் தொடர்பான நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் ரவீந்திர ரன்னன் எலிய தெரிவித்துள்ளார்.
“தற்போதைய நிலையில் மாதாந்தம் சுமார் 3000 பேர் இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் மரணிக்கின்றனர். இது 1987 களில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி காலகட்டத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக மாறும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் கொவிட் தொற்றாளர்களால் நிரம்பி வழிகின்ற நிலையில் அரசாங்கம், புதிய திரிபுடனான வைரஸை கட்டுப்படுத்துவதற்கான எந்தவித முயற்சிகளையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரதான வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களின் கூற்றுகளுக்கமைய, நிலைமைகள் கைமீறிச் சென்றுள்ளதை உணர முடிகின்றது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சாதாரண நோயாளர்களுக்கான சிகிச்சைகள், சத்திர சிகிச்சைகள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன. சாதாரண நோயாளர்களும் கொவிட் தொற்றாளர்களும் ஒரே விடுதிகளில் தங்க வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. உடனடியாக நாட்டை முடக்கி நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தாவிடின் சேவைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போவதாக சுகாதாரத்துறை ஊழியர்கள் எச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில்தான் அரசாங்கத்தின் கொவிட் முகாமைத்துவம் சீர்குலைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவை விடவும் மோசமானதொரு ஆபத்தை நாடு சந்தித்துள்ளதாக பலர் புள்ளி விபரங்களை ஒப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நாட்டின் கொவிட் முகாமைத்துவ செயலணியில் உடனடியாக முழுமையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளைப் புறந்தள்ளி இராணுவ அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் கருத்துக்களுக்கமையவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை தான் ஆமோதிப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் தெரிவித்துள்ளார்.
“மூளை பகுதியளவில் மரணித்துள்ள அதிகாரிகளினால் நாடு நிர்வகிக்கப்பட்டால் ஏற்படும் சவால்களை நாட்டு மக்கள் எதிர்கொள்ள நேரிடும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் விசேட வைத்திய நிபுணர்களின் கருத்துக்களுக்கு உரிய தரப்பினர் செவிசாய்க்க வேண்டும். இல்லாவிடின் பாரிய விளைவுகள் ஏற்படும்” என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ள கருத்தும் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கதாகும்.
இவ்வாறு நாட்டின் சுகாதாரத்துறையும் இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் தலைமைத்துவம் வழங்க வேண்டிய ஏனைய தரப்பினரும் தோல்வியடைந்துள்ள நிலையில் நாடு மிக மோசமானதொரு சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் ‘நாட்டை முடக்கினால் மக்கள் பட்டினிச்சாவையே எதிர்கொள்ள நேரிடும். நாட்டை முடக்காவிட்டால் மக்கள் கொரோனாவினால் செத்து மடிய நேரிடும்’ என்ற திரிசங்கு நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ளம் தலைக்கு மேலால் சென்று விட்ட நிலையில் அரசாங்கம் இப்போதுதான் சுகாதாரத்துறை அமைச்சரை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் தொற்றுக்கு தம்மிக்க பாணியை அருந்தி நிவாரணம் தேடிய ஒரு சுகாதார அமைச்சரைக் கொண்ட நாட்டில், முட்டியில் தண்ணீரைக் கொண்டு சென்று ஆற்றில் வீசி நிவாரணம் தேடிய ஒரு சுகாதார அமைச்சரைக் கொண்ட நாட்டில் இவ்வாறு மக்கள் செத்து மடிவதில் ஆச்சரியமடைய ஒன்றுமில்லைதான்.
எது எவ்வாறு இருப்பினும் நமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நமது ஒவ்வொருவரினதும் கைகளிலேயே உள்ளது. உரிய சுகாதார பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதுடன் அல்லாஹ்வின் உதவியைத் தேடுவதன் மூலமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும்.- Vidivelli