சர்வதேச அமைப்புகளே உதவியே ரணிலின் பலம்

வடகிழக்கை  இணைக்க முயற்சி என்கிறார் கோத்தாபய

0 635

மக்களால்  நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு  சர்வதேச அழுத்தங்கள் எழுந்துள்ளன.  தூதரகங்களின் உதவியுடனும், புலம்பெயர் புலி அமைப்புகளின் உதவியுடனும்  தன்னை  பிரதமராக  நியமிக்க ரணில் அழுத்தம் கொடுத்துவருகின்றார். இதுவே ரணிலின் பலமாகும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பினை கொண்டுவந்து வடக்கு கிழக்கினை இணைக்க தமிழ் தரப்பு சந்தர்ப்பம் பார்த்து காத்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எலிய அமைப்பின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நேற்று முன்தினம் மொரட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே  கோத்தபாய ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தம் நிலவிய  நிலையில் ஆட்சியை அமைத்த எமது அரசாங்கம் அப்போதும் நாட்டினை பலப்படுத்தி தேர்தலை சரியாக நடத்தி அதன் பின்னர் யுத்தத்தையும் முடிவுக்கு கொண்டுவந்ததுடன் நாட்டினை சரியான பாதைக்கு கொண்டு சென்றது. நிலையான நாட்டினை உருவாக்கினோம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் 19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்து நாட்டை நாசமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டார். 19 ஆவது திருத்தம் மூலம் இன்று பிரதமர் இல்லாத, அரசாங்கம் இல்லாத, தீர்மானம் எடுக்க முடியாத நாட்டினை உருவாக்கியுள்ளனர்.

இந்த நாட்டில் எப்போதுமே பார்க்க முடியாத அடிப்படை வசதிகளை உருவாக்கி, எப்போதும் இல்லாத அளவு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிகண்டு சர்வதேச ஒத்துழைப்பு இருந்த நிலையில் இவர்கள் பொய்யான கதைகளை கூறி சர்வதேசத்தை எமக்கு எதிராக திருப்பி மஹிந்த ராஜபக் ஷவை ஆட்சியிலிருந்து  வீழ்த்தி இன்று நாட்டை நாசமாக்கியுள்ளனர்.

நல்லாட்சி என்ற பெயரில் பொருளாதாரம் நாசமாகியுள்ளது. பாதுகாப்பு நாசமாகியுள்ளது. இனவாதத்தை தூண்டி, சர்வதேச சக்திகளை ஒன்றிணைத்து  இன்று அரசியலமைப்பினை கொண்டுவந்து அரசியலை பலவீனப்படுத்தியுள்ளனர். இப்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது குறித்துப் பேசுகின்றனர்.   நல்லாட்சி உருவாக்கப்பட்ட நாளில் இருந்து எதிர்க்கட்சி அரசியல் வாதிகளை பழிவாங்கும் நடவடிக்கை எடுத்தார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை.

அதுபோல் இந்த அரசியலமைப்பு திருத்தத்தால்  எப்போதும் கண்டிராத மோசமான நிலைமைக்கு நாட்டினை தள்ளியுள்ளனர். புதிய அரசியலமைப்பினை கொண்டுவர இவர்கள் முயற்சித்தனர். இதன் பிரகாரம் மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்தின் மூலமாக தெரிவு செய்யும் ஜனாதிபதியை நியமிக்கத் திட்டமிட்டனர். பாராளுமன்றம் மற்றும் இரண்டாம் மன்றம் ஒன்றினை அமைத்து அவற்றின் மூலமாக பலவீனமான ஜனாதிபதியை நியமிப்பார்கள். இதன் மூலமாக நிறைவேற்று அதிகாரம் முழுமையாக பறிக்கப்படும். அதேபோல் பாராளுமன்றமும் அதன் பலத்தினை இழக்கும். ஏனெனில் இரண்டாம் சபை ஒன்று செயற்படுவதன் காரணத்தினால் பாராளுமன்றமும் கட்டுபடுத்தப்படும். அதேபோல் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நிறைவேற்று சபை ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

அத்துடன் மாகாண சபைகள் அனைத்திற்கும் அதிகாரத்தை கொடுப்பது. பொலிஸ், காணி அதிகாரங்களையும் அதேபோல் இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் இணங்கினால் அப்பகுதி மக்களின் அனுமதியுடன் ஒரு மாகாணமாக்கி ஒரு முதல்வர் மற்றும் அமைச்சரவையை  நியமிக்க முடியும். வடக்கு, கிழக்குக்கு இந்த நிலைமை சாதகமாக பயன்படும். அவர்கள் ஆரம்பத்திலிருந்து எதிர்பார்க்கும் வடக்கு, கிழக்கு இணைப்பினை உருவாக்கி ஒரு முதல்வரை உருவாக்கி சகல அதிகாரங்களை  கொண்ட ஒருவரை உருவாக்கினால் பலவீனமான அரசாங்கமும் உருவாகினால் நிலைமை எவ்வாறு இருக்கும்.

எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் உருவாக்க முயற்சித்து வரும் புதிய அரசியலமைப்பின் திட்டங்கள் தான் இவை. அதேபோல் எந்தக் காரணத்தினாலும் இந்த அரசியலமைப்பினை மாற்ற முடியாது. அவ்வாறு மாற்ற வேண்டும் என்றால் ஒன்பது மாகாணங்களின் அங்கீகாரம் வேண்டும். அதில் ஒன்று மறுத்தாலும் அரசியலமைப்பினை  மாற்ற முடியாது என்ற கட்டளைகளும் இதில் உள்ளன.  அதனை செய்யவே  எதிர்பார்த்துள்ளனர். புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அந்த இலக்கினை அடையவே முயற்சித்து வருகின்றனர்.

ஆகவே ஒரு நாட்டின் மிகவும் முக்கியமான அம்சம் நாட்டின் பாதுகாப்பாகும். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தெற்கை போலவே வடக்கையும் அமைதியாக்கினோம். முன்னர் ஒரு காலம் வடக்கு தொடக்கம் கொழும்பு வரை எத்தனை தடைகள், பாதுகாப்பு நெருக்கடிகள் இருந்தன. எனினும் 2009 ஆம் ஆண்டில் இருந்து அவ்வாறு எந்த பாதுகாப்பு தடையும் இருக்கவில்லை. மக்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்காது சுதந்திரமாக பயணிக்க இடமளித்தோம். எமது புலனாய்வு அதிகாரிகள் மூலம் மற்றும் பாதுகாப்பு படைகளின் உதவியுடன் பாதுகாப்பு உறுதிப்படுத்தி வந்தோம். ஈழம் என்ற துண்டுப் பிரசுரம் கூட பிரசுரிக்க முடியாத அளவிற்கு நாம் பாதுகாப்பை பலப்படுதினோம். இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன்  புலனாய்வு பிரிவின் பிரதானியை மாற்றினர். பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பலரை கைது செய்தனர். இன்று நாட்டின் பாதுகாப்பை பலவீனமாகிவிட்டது.

இன்று மீண்டும் வடக்கு, கிழக்கில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதே நிலையில் புதிய அரசியலமைப்பினையும் உருவாக்கி சர்வதேச புலம்பெயர் அமைப்புகள், சர்வதேசத்தில் இயங்கும் புலிகள், சர்வதேச நாடுகளை இணைத்து புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

ஜனாதிபதிக்கு அழுத்தம்

இந்த நாட்டின் மக்களால்  நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாதளவு சர்வதேச அழுத்தம் எழுவதாகக் கூறுகின்றார். தூதரகங்களின் மூலமாக தமக்குத் தேவையான பிரதமர் ஒருவரை நியமிக்க அழுத்தம் கொடுப்பதாக கூறுகின்றார். இன்று நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு, ஊழல் குற்றங்களை தடுக்க ஜனாதிபதி எடுக்கும் ஆரோக்கியமான நடவடிக்கைகளை  சர்வதேச நாடுகள் தடுக்கின்றன.

ஆகவே ரணில் விக்கிரமசிங்கவை யார் நியமித்தனர். எதற்காக நியமித்தனர். நோக்கம் என்ன என்பது இன்று எமக்கு நன்றாகவே தெரிகின்றது. இந்த நாட்டின் தலைமையை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். எமது ஆட்சியில் சகல தேர்தல்களும் உரிய நேரத்தில் அல்லது அதற்கு முன்னரே நடத்தப்பட்டன. 2014 ஆம் ஆண்டு எமது ஆட்சியை வீழ்த்த முன்வந்த சக்திகள் இன்று மீண்டும் இயங்க ஆரம்பித்துவிட்டன.  19ஆவது  திருத்தம் கொண்டுவரப்பட்ட போது எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அதனை ஒழுங்காக வாசித்துப்பார்க்கவில்லை. வாசித்திருந்தால் அனுமதித்திருக்க முடியாது. நாட்டின் என்ன நடந்தாலும் அரசாங்கம் என்ன குற்றம் செய்தாலும் அவர்களை ஆட்சி முழுமையாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்றால் மக்களுக்கு ஆரோக்கியமான ஆட்சியை உருவாக்க அதிகாரம் இல்லையா? ஆட்சி மாற்றம் என்பது நாட்டின் ஆரோக்கியமான செயற்பாடு, ஆகவே மக்கள் மத்தியில் நாம் எமது நிலைப்பாட்டினை தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.