தற்போது உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல் நிலை காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக திருமணம் முடிப்பதற்கு உத்தேசித்திருக்கின்ற இளைஞர்கள் தமது நாட்டிற்கு வந்து திருமணம் முடிக்க முடியாத அவல நிலை தோன்றியுள்ளது. அதனால் நவீன இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் திருமண ஒப்பந்தங்களை நடாத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமணம் எனபது இறைத் தூதர்களது வழிகாட்டல்களில் ஒன்றாகும். அதற்கான நெறிமுறைகள் மற்றும் விதிகள் எனபன தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற இலக்குகள், அடைவுகள் என்ற விடயத்தில் இஸ்லாம் கூடுதல் கரிசனை காட்டுகின்றது. இஸ்லாத்தில் திருமண உடன்படிக்கை செல்லுபடியாவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவையாவன
- ஈஜாப் : இது மணமகளின் பொறுப்புதாரியான வலியால் சொல்லப்படும் வார்த்தை
- கபூல் : இது மணமகனால் சொல்லப்படும் வார்த்தை. இது மணமகளை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிடுவதைக் குறிக்கும்.
- வலி
- சாட்சிகள் : இரண்டு நீதியான சாட்சிகள் இருக்க வேண்டும்.
நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் இடம்பெறுகின்ற திருமண ஒப்பந்தங்களைப் பொறுத்தவரையில் அதற்குரிய நிலைப்பாட்டை பின்வருமாறு பார்க்க முடியும். திருமண ஒப்பந்தம் இடம்பெறுகின்ற போது மணமகன், மணமகளின் பொறுப்புதாரி மற்றும் சாட்சிகள் ஆகியோர் ஓரிடத்தில் நேரடியாக ஒன்று சேர்ந்து உடன்படிக்கையில் ஈடுபடுவது தான் அடிப்படையாகும்.
குறிப்பாக நவீன ஊடகங்களின் மூலமாக இடம்பெறுகின்ற திருமண ஒப்பந்தங்களின் அங்கீகாரம் தொடர்பில் அறிஞர்களுக்கு மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இலத்திரனியல் ஊடகங்களினூடாக இடம்பெறும் திருமணங்கள் பல வழிகளில் இடம்பெறலாம். குறுஞ்செய்திகள் (SMS) மூலம், மின்னஞசல் (E mail) மூலம், குரல் செய்தி (Voice Message) மூலம், தொலைபேசி மூலம் அல்லது காணொளி அழைப்பு (Video Call) மூலம் திருமணங்கள் இடம்பெறலாம்.
குறிப்பாக கடிதத்தின் மூலம் அல்லது குரல் செய்திகள் மூலம் இடம்பெறும் திருமணத்தை பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சில அறிஞர்கள் திருமணத்தை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கையாக இது அனுமதிக்கப்படக்கூடாது என்று கருதுகின்றனர். ஏனென்றால் ஒரு நபரின் குரலைப் பின்பற்றி மற்றவர்களை ஏமாற்ற முடியும். இவர்களது பார்வையில் ஈஜாப் மற்றும் கபூல் ஆகியன கட்டாயம் வாய் மொழி மூலமே இடம்பெற வேண்டும் என்பதாகும். இந்த நிலைப்பாட்டில் இமாம் நவவி (றஹ்) அவர்கள் இருக்கின்றார்கள். குரல் பதிவு மூலம் திருமணங்கள் இடம்பெறுவதையும் மேற்குறிப்பிட்ட இமாம்களின் குழு ஏற்றுக் கொள்ளவில்லை. திருமண உடன்படிக்கை இடம்பெறும் போது வலி மற்றும் சாட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இந்த கட்டத்தில் அற்றுப் போகின்றது.
இப்னு குதாமா (றஹ்) அவர்கள் திருமண ஒப்பந்தம் வியாபார ஒப்பந்தத்தைப் போன்றது. ஈஜாப் கூறப்படுகின்ற அதே சபையில் கபூலுக்குரிய வார்த்தையும் பகிரப்பட வேண்டும். ஈஜாபுக்கான வார்த்தை பகிரப்படுகின்ற போது கபூலுக்கான வார்த்தை குறிப்பிடப்படாத போது அந்த உடன்படிக்கை நிறைவேறாது.
அதேபோல தொலைபேசி மூலம் இடம்பெறும் திருமண உடன்படிக்கையை சில இமாம்கள் அங்கீகரிக்கவில்லை. இதில் சந்தேக நிலை தோன்றுவதற்கான வாய்ப்புள்ளது என்பதனாலாகும். ஆனால் காணொளி அழைப்பு மூலம் திருமண உடன்படிக்கை இடம்பெறுவதை பெறும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில் திருமண ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படுவதற்கான அனைத்து நிபந்தனைகளும் முழுமை பெறுகின்றது. ஈஜாபுக்கான வார்த்தையை மணமகன் செவிமெடுக்கின்றார். கபூலுக்கான வார்த்தையினை மணமகளின் வலி செவிமெடுக்கின்றார். அந்த சபையில் திருமணத்திற்கான அனைத்து நிபந்தனைகளும் ஒரே சபையில் இருக்கின்றனர். ஆகவே இத்தகைய திருமண ஒப்பந்தத்தை இமாம்கள் அங்கீகரிக்கின்றனர். காணொளி அழைப்பு (Video Call) மூலம் திருமண ஒப்பந்தங்களை அனைத்து வரையறைகளையும் பேணி நடாத்துவது வரவேற்கத்தக்கதாக அமைகின்றது. மேலும் காணொளி அழைப்பு (Video Call) மூலம் இடம்பெறுகின்ற திருமணங்களில் ஏமாற்றும் நிலமை தோன்றுவது அரிதானதாகும். இதன் மூலம் ஒப்பந்தத்தில் பங்குபற்றும் ஒவ்வொருவரினதும் உண்மைத் தன்மையை நேரடியாக அவதானிக்க முடியும். இவ்வாறு உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் இவ்வொப்பந்தத்தை அங்கீகரிக்க முடியும் என இமாம் இப்னு பின் பாஸ் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அதேநேரம் ஒரு பெண்ணின் வலி வெளிநாட்டில் இருக்கிறார், அவரால் தற்போது நாட்டிற்கு வந்து வலி சொல்ல முடியாத நிலை ஏற்படுமாயின் அந்த நிலையிலும் இவ்வாறு காணொளி அழைப்பு (Video Call) மூலம் அந்த திருமண ஒப்பந்தத்திற்கு வலி சொல்ல முடியும் என்பதை நாம் பார்க்கலாம்.
ஆகவே காணொளி அழைப்பு (Video Call) மூலம் இடம்பெறும் திருமண ஒப்பந்தங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைகின்றது. மாற்றமாக குரல் பதிவு அல்லது மின்னஞ்சல் மூலம் இடம்பெறும் திருமண ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. காணொளி அழைப்பு மூலம் இடம்பெறும் திருமண ஒப்பந்தங்கள் கீழ்வரும் நிபந்தனைகளை பூரணப்படுத்தி இருந்தாலே அவ்வொப்பந்தம் செல்லுபடியானதாக கருதப்படும்.
• மணமகன், மணமகளின் வலி மற்றும் சாட்சிகள் ஒருவரை ஒருவர் முகம் பார்க்க கூடிய நிலையில் இருத்தல்
• அந்த அமர்வில் இருக்கின்ற சாட்சிகள் நம்பிக்கை விடயத்தில் உயர் தரத்தில் இருப்பவர்களாக அமைதல் வேண்டும்.
• ஈஜாபுக்கான வார்த்தையை மணமகனும் கபூலுக்கான வார்த்தையை வலியும் தெளிவான முறையில் (எவ்வித தடையும் இன்றி) செவிமெடுத்தல்
• திருமண ஒப்பந்தம் என்பது முக்கியமான ஒப்பந்தம் என்ற அடிப்படையில் அதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதனால் அந்த இடத்தில் ஒரு பதிவாளரை வைத்திருப்பது கட்டாயமாகும்.
• இவ்வொப்பந்தத்தில் எவ்வித விளையாட்டும் அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்களும் இடம்பெறாதிருத்தல்.
எனவே இந்த விடயத்தைப் பொறுத்தவரை மிகவும் சரியான கருத்து என்னவென்றால் காணொளி அழைப்பு மூலம் திருமண ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது, இதில் எந்த ஆபத்தும் இல்லை. ஏனென்றால், மணமகன் மற்றும் வலியின் அடையாளம் நிரூபிக்கப்படுகிறது. மேலும் இரண்டு சாட்சிகளும் ஈஜாப் மற்றும் கபூலை கேட்க முடியும். மேலே கூறியது போல் ஷேக் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் வழங்கிய பத்வாக்களில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.- Vidivelli