கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
சில வாரங்களுக்கு முன்னர் சுமார் பதினாறு வயது நிரம்பிய ஹிஷாலினி என்ற மலையகத் தமிழ் சிறுமி ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலே பணிப் பெண்ணாகத் தொழில்புரிந்து வரும்வேளையில் தீயினால் எரியுண்டு அகால மரணம் எய்தியமை பல சர்ச்சைகளையும் வதந்திகளையும் தோற்றுவித்து அரசாங்கப் பாதுகாவல் துறையினரின் விசாரணைக்கும் ஆளாகியுள்ளது. இந்தத் துயர்படிந்த சம்பவம் இலங்கையின் தீராத இனவாத நோய்க்குக் கிடைத்த ஒரு புதிய கிருமியாக மாறியுள்ளதிலும் ஆச்சரியமில்லை.
எனினும் இச்சம்பவம் பற்றிய உண்மைகள் இனித்தான் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். அப்பெண்ணின் மரணம் திட்டமிடப்பட்ட கொலையாக இருந்தால் அக்கொலைஞர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சட்டப்படி தண்டிக்கவேண்டும் என்பதோடு இச்சம்பவம்பற்றிய விபரங்களை நிறுத்திக்கொண்டு, இளம்வயதுச் சிறுவர்களும் சிறுமியர்களும் பாடசாலையிற் கழிக்கவேண்டிய பொன்னான காலத்தை வறுமையினால் பீடிக்கப்பட்டுள்ள அவர்களின் குடும்பங்களின் கஷ்டங்களைப் போக்குவதற்காக அடிமைத் தொழில் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்ற ஒரு நாட்டின் பொருளாதார அவலட்சணங்களைப் பற்றியும் அதனை எவ்வாறு அரசியல்வாதிகள் தேர்தல் வேட்டைக்காகப் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றியும் சில சிந்தனைகளை இக்கட்டுரை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
மறுக்கமுடியாத ஓருண்மை
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த நாள் தொடக்கம் இன்று வரை இலங்கை அரசுகளோ சர்வதேசத் தாபனங்களோ வரைந்த வறுமைக் கோடுகளுக்குக் கீழே இந்த நாட்டில் வாழும் மிகப்பெரும் வர்க்கம் மலைநாட்டுத் தமிழர் என்பதை யாரும் மறுக்க முடியாது. சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக பிரத்தானியரால் தோட்டத் தொழிலாளிகளாகக் கொண்டுவரப்பட்டு உருவாகிய இத்தமிழ்ச் சமூகம் அன்று தொடக்கம் நாடு சுதந்திரம் அடையும்வரை தோட்டத் துரைமாரின் சுரண்டல்களுக்குள்ளாகி உரிமைகளற்ற ஓர் இனமாகவே வளர்ந்துவந்தது. சுதந்திரத்துக்குப்பின்னர் அவர்களுள் ஒரு பகுதியினர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட ஏனையோர் பிரஜா உரிமை பெற்று இலங்கை அரசுகளாலும் தமிழ் தலைமைத்துவத்தினாலும் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே வழிநடாத்தப்பட்டு வந்துள்ளமை கண்கூடு. மலையகத் தமிழர்களுக்குள்ளேயே தொழிற்சங்கவாதிகளாக சிலர் உருவெடுத்து அம்மக்களின் நலனுக்காகப் பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு முன்வந்தவர்களும் அவர்களின் குடும்பங்களும் அரசியற் செல்வாக்கால் தமது சொந்த நலன்களையே பெரிதும் வளர்த்துக் கொண்டார்களேயன்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை வளர்ப்பதற்குத் தவறிவிட்டனர்.
வறுமையால் பீடிக்கப்பட்டு பிறந்த நாட்டைவிட்டு ஓடிவந்த இத்தமிழ்ச் சமூகத்தின் மூதாதையர்கள் அனுபவித்த அதே கஷ்டங்கள் அவர்களின் இன்றைய சந்ததிகளையும் இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் வாட்டிக் கொண்டிருக்கின்றன என்ற அவலட்சணத்தை உலகு உணர வேண்டாமா? தோட்டத் தொழிலாளிகளின் குறைந்தபட்ச அற்ப வேதனத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துவதற்கு அண்மையில் நடந்த அரசியல் நாடகம் எப்படியெல்லாம் இச்சமூகம் அரசியல்வாதிகளின் பகடைக்காயாகிவிட்டது என்பதை தெளிவுபடுத்தவில்லையா? சுருங்கச் சொல்வதாயின் மலையகத் தமிழர் வறுமையின் பிறப்பிடமாகிவிட்டனர். அவர்களுக்குள்ளே ஒரு சிறுபான்மை கல்வியிலுயர்ந்தும் உழைப்பினால் உயர்ந்தும் பேராசிரியர்களாகவும் அரசாங்க நிர்வாகிகளாகவும் கவிஞர்களாகவும் கலைஞர்களாகவும் முதலாளிகளாகவும் வளர்ந்துள்ள போதிலும் பெரும்பான்மையான மலையகத் தமிழ் குடும்பங்கள் வறுமையால் வாடுகின்றன. அந்தக் குடும்பங்களின் இளம் வாரிசுகளில் ஒன்றுதான் தீயினால் மரணித்த ஹிஷாலினி. அந்த மரணம் தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் வறுமையின் பிரதிபலிப்பு என்பதைவிட இலங்கைப் பொருளாதார அவலட்சணத்தின் பிரதிபலிப்பு என்பதே பொருந்தும்.
இலங்கையின் பொருளாதாரம்
தோற்றுவிக்கும் ஹிஷாலினிகள்
ஜெயவர்த்தன ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகள் கடந்த நாற்பது வருடங்களாகச் சாதித்த ஒரு முக்கிய சாதனை உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுபோன்று நாட்டின் புருஷர்களையும் பெண்களையும் வெளிநாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக எண்ணெய் வள வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது. இலங்கையின் வேலையற்றோர் பிரச்சினையைத் தீர்க்க திறந்த பொருளாதாரக் கொள்கை காட்டிய வழி இதுதான். அவ்வாறு தொழில் தேடிச் சென்ற ஆண்களும் யுவதிகளும் என்னென்ன சூழ்நிலைகளில் எவ்வித கஷ்டங்களை அனுபவித்து அங்கு வேலை செய்கிறார்கள், அவர்கள் படும் இன்னல்களென்ன, அவர்களுக்கு அங்கே என்ன பாதுகாப்பு என்பன பற்றியெல்லாம் பேச்சளவில் மட்டும் கவனம் எடுத்துக்கொண்டு அந்தத் தொழிலாளிகள் அனுப்பும் அந்நியச் செலாவணியிலேயே அரசு கண்ணாயிருந்தது. இன்றைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் அந்தச் செலாவணியையே ஒரு வரப்பிரசாதமாக நம்பி இருக்கிறது. இலங்கைப் பொருளாதாரத்தின் கறைபடிந்த ஒரு பக்கம் இது.
வளைகுடா நாடுகளுக்குப் பெண்கள் போவதன் ஆபத்துகளை 1980களிலேயே பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரா போன்றவர்கள் விரிவாக எடுத்துக்காட்டினர். அதனால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள், பெண்களின் திருமணப் பிரச்சினைகள், ஒழுக்கக்கேடுகள் என்றெல்லாம் பல விடயங்களை ஜெயவர்த்தன அரசுக்கு விளக்கி அவரின் திறந்த பொருளாதாரக் கொள்கையை கண்டனம் செய்தனர். அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. பூகோளவாதத்தினதும் அதன் தாராண்மைப் பொருளியல்வாதத்தினதும் மகுடியில் மயங்கிய இலங்கை அரசு, சிங்கள, தமிழ், முஸ்லிம் கன்னியரும் மனைவியரும் பணிப்பெண்களாக அரபு நாடுகளுக்குப் படையெடுத்ததை ஊக்குவித்ததேயன்றி தடைசெய்யவில்லை. இந்தப் படையெடுப்பால் நன்மையடைந்தவர்களுள் ஒரு தரகர் வர்க்கம் மேலோங்கி நின்றது வேறு விடயம்.
முஸ்லிம் பணிப்பெண்கள்
இலங்கை முஸ்லிம் பெண்கள் பிற இன அல்லது பிற மதத்தவர்களின் மனைகளில் பணிப்பெண்களாக வேலைசெய்வது அபூர்வம். முஸ்லிம் வீடுகளிற்கூட பெரும்பாலும் வயது முதிர்ந்த பெண்கள்தான் பணிப்பெண்களாகக் கடமையாற்றுவர். இளம்பெண்கள் கூண்டுக் கிளிகள் போல் தத்தம் வீடுகளிலேயும் குடிசைகளிலேயுமே அடைபட்டு வாழ்ந்துவந்தனர். திறந்த பொருளாதாரம் அந்த நிலைமையை மாற்றிவிட்டது. அரபு நாட்டு நோக்கிய பெண்கள் படையெடுப்பில் முஸ்லிம் பெண்கள் கணிசமாக அடங்குவர். வறுமை முஸ்லிம் கன்னியரையும் மனைவியரையும் தொழில் வாய்ப்புத் தேடி ஓடுமாறு விரட்டியது. அரபு முஸ்லிம் நாடுகள் அவர்களுக்காகத் தமது கதவுகளைத் திறந்துவிட்டன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் முஸ்லிம் அரசியல்வாதிகளோ மதத்தலைவர்களோ இதன் விளைவுகளைப்பற்றியோ முஸ்லிம் குடும்பங்களின் வறுமையைப்பற்றியோ எந்த ஒரு மேடையிலும் வாய்திறவாமல் மௌனிகளாக இருந்தமையே. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலாமா இப்பிரச்சினையைப்பற்றி ஏன் இன்னும் வாய்திறவாமல் இருக்கிறது? முஸ்லிம் சமூகத்தில் ஹிஷாலினிகள் தோன்றவில்லையா? அன்று மரணமடைந்த ஹிஷாலினி ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் முஸ்லிம் அரசியல்வாதிகளோ மதத்தலைவர்களோ வாய் திறந்திருப்பார்களா?
மலையகம் ஒரு விதிவிலக்கு
இந்தப் படைக்கு ஒரு விதிவிலக்காய் அமைந்தது மலையகம். இதற்குக் காரணம் அதன் கொடிய வறுமை. ஏற்கனவே வறுமையில் உழன்று ஒரு ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்த மலைநாட்டுப் பெண்கள், தரகர்களுக்குப் பணம்கொடுத்து, அவர்களது இச்சைகளுக்கும் ஆளாகி, விமானமேறிச் சென்று அங்காவது சிறிது பணம் உழைக்கலாமென்றால் அதற்குரிய சேமிப்பு அவர்களிடம் இருக்கவில்லை. அதற்காக அப்பெண்களுக்குக் கடன் கொடுப்போரும் அந்தச் சமூகத்தில் இருக்கவில்லை. ஆகையால் மலையக இளவல்களுக்கு உள்ள ஒரேயொரு வாய்ப்பு நாட்டுக்குள்ளேயே தொழில் தேடுவதாகும். பள்ளிவயதுச் சிறுவரும் சிறுமியரும் பணிப்பெண்களாகவும் கூலிகளாகவும் தனவந்தர்களின் வீடுகளிலும் வேலைத்தலங்களிலும் தஞ்சம் புகுந்தனர். இவ்வாறானவர்களின் ஏக விநியோகத்தர்களாக மாறியது மலைநாட்டுத் தமிழ்ச்சமூகம். அவ்வாறு உருவாகிய இளம் பெண்களே ஹிஷாலினிகள். அரசியல்வாதிகள் உட்பட அநேகமான தனவந்தர்களின் வீடுகளில் பணிப்பெண்களாகப் பணிபுரியும் பெரும்பான்மையானவர்கள் மலைநாட்டு யுவதிகளே.
எந்த ஒரு தாயோ தகப்பனோ தன்பிள்ளை தரக்குறைவான தொழில்புரிந்து அப்பிள்ளையின் உழைப்பால் குடும்பத்தின் பசி ஆற்றப்பட வேண்டுமென்று எப்போதுமே விரும்புவதில்லை. ஆனால் ஒரு பக்கத்தில் நாடும் சமூகமும் அவர்களுக்கு வேறு வாய்ப்புகளை அளிக்க மறுக்க மறுபக்கத்தில் பசி குடும்பத்தை வாட்டி வதைக்க அப்பெற்றோருக்கு வேறு வழிகள் தெரியாததால் தோற்றுவிக்கப்பட்டவர்களே ஹிஷாலினிகள். இது யார் குற்றம்?
அரசியல்வாதிகளும் மலையக மக்களும்
இன்றுள்ள அரசியல் நிலைமையில் அரசியல்வாதிகளுக்குத் தேவை மலையக மக்களின் வாக்குகள் மட்டுமே. அவர்களுக்கு வாக்குரிமை இல்லையென்றால் அவர்களின் பக்கமே தலைவைத்தும் படுக்கமாட்டார்கள் இலங்கையின் இன்றைய அரசியல்வாதிகள். கொவிட் நோயின் மத்தியிலும் எவ்வாறு ஆறுமுகம் தொண்டமானின் மரணத்தையும் அரசியல்மயப்படுத்தி ராஜபக்ச அரசு தேர்தல் வேட்டையாடியது என்பது யாவரும் அறிந்ததே. அவ்வாறானதொரு அரசியல் வேட்டை ஹிஷாலினியின் மரணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவதானிகள் அறிவர்.
வயது குறைந்த பெண்களையும் ஆண்களையும் தொழிலுக்கு அமர்த்துவதைத் தடைசெய்யும்வகையில் சட்டமியற்றுவது பற்றி நாடாளுமன்றத்தில் கூக்குரல்கள் எழுகின்றன. அது உண்மையிலேயே நிறைவேறினாலும் அந்தப் பிரச்சினையைத் தோற்றுவிக்கும் மலையக மக்களின் வறுமையை ஓட்ட என்ன வழி என்பதை இந்த அரசியல்வாதிகள் கூறுவார்களா? அந்த வறுமை நிலைக்குமட்டும் ஹிஷாலினிகளும் பெருகிக்கொண்டே இருப்பர். இது ஒரு பொருளாதாரப் பிரச்சினை. நாடு வங்குறோத்து நிலைக்குச் சரிந்து செல்லுகையில் இன்னும் எத்தனை ஹிஷாலினிகள் எவ்வாறு செத்து மடியப் போகிறார்களோ?
தமிழ் அரசியல் தலைமைத்துவம்
சுதந்திர இலங்கையின் வரலாற்றிலே மலையகத் தமிழர்களுக்கு மிகப் பெரும் அநீதி இழைத்தவர்கள் தமிழ் தலைவர்களே. 1948ஆம் ஆண்டு இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டத்துடன் அந்த அநீதி ஆரம்பமாகி இன்னும் தொடர்கிறது. இதைப்பற்றி இங்கு விளக்குவது இக்கட்டுரைக்குப் பொருத்தமாகாது. இனியாவது தமிழ் தலைமைத்துவம் மலையக மக்களின் நலனில் ஆழ்ந்த கவனம் செலுத்துவார்களா? மலையக மக்களிடையே வளர்ந்துள்ள தலைமைத்துவமும் முஸ்லிம் அரசியல்வாதிகள்போன்று காற்றடிக்கும் பக்கம் தலை சாய்பவர்களாகவே செயற்படுகின்றனர். இந்த நிலைமாறி சிங்கள மக்களிடையே துளிர்விட்டுள்ள முற்போக்கு அரசியல் சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படாவிட்டால் மலையக ஹிஷாலினிகள் பெருகுவதைத் தடுக்க முடியாது.
ஓர் எச்சரிக்கை
இறுதியாக ஓர் எச்சரிக்கை! இந்த அரசு எவ்வழியிலாவது சுற்றுலாத்துறையை ஊக்குவித்து அந்நியச் செலாவணியைத் திரட்ட முனைகிறது. சுற்றுலாத்துறை எவ்வாறு கன்னியர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் தொழில் வழங்கியுள்ளது என்பதை பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளின் அனுபவங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஹிஷாலினிகள் பணிப்பெண்களாகத் தொழில் புரிவதைத் தடுக்கும் சட்டம் அவர்கள் சுற்றுலாத்துறையில் தொழில் புரிவதையும் தடுக்குமா?- Vidivelli