வழிதவறிச் செல்லும் இளையோரை கால்பந்தாட்டத்தின்பால் ஈர்ப்பதே குறிக்கோள்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர்
இளம் தலைமுறையினரை கால்பந்தாட்டத்தின்பால் ஈர்க்கச் செய்து இலங்கையில் கால்பந்தாட்டத்தை உயரிய நிலைக்கு கொண்டு செல்வதே தனது குறிக்கோள் என ‘கால்பந்தாட்ட மீள் ஆரம்பம்’ என்ற திட்டத்துடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றியீட்டிய ஜஸ்வர் உமர் தெரிவிக்கின்றார்.
“இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன வரலாற்றில் கிழக்கு மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர் தலைவராகத் தெரிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.”
இலங்கை கால்பந்தாட்டத்தின் தரத்தை உயர்த்துவதாக இருந்தால் முதலில் வயதுவேறுபாடின்றி சிறுவர்கள் முதல் பெரியோர்வரை அனைவரையும் கால்பந்தாட்டத்தில் ஆர்வம், அக்கறை கொள்ளச் செய்யவேண்டும். அதுதான் தனது பிரதான முயற்சியாகவும் முதல் நகர்வாகவும் இருக்கும் என ‘விடிவெள்ளி’யுடனான நேர்காணலில் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் அக்கரைப் பற்றில் பிறந்த ஜஸ்வர் உமர், றோயல் கல்லூரியில் கல்வி பயின்றதுடன் கல்லூரி கால்பந்தாட்ட அணியிலும் இடம்பெற்றார். இங்கிலாந்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஜஸ்வர், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளார். ஜஸ்வர் ஒரு சிறந்த ஆளுமைமிக்கவராவார்.
கல்விமானான அவரது தந்தை கல்வி அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் ஆவார். ஜஸ்வர் தற்போது தொலைத்தொடர்பாடல் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உரிமையாளராகவும் விளங்குகிறார்.
அவருடனான முழுமையான நேர்காணல் வருமாறு:
கேள்வி: க்ராஸ்ரூட் எனப்படும் அடிமட்ட கால்பந்தாட்ட அபிவிருத்தி பற்றி கடந்த 20 வருடங்களாக இலங்கையில் பேசப்பட்டு வந்தபோதிலும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அத்துடன் பாடசாலை மட்ட கால்பந்தாட்டமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த இரண்டு விடயங்கள் குறித்து உங்களது தலைமையில் என்ன திட்டம் வகுத்துள்ளீர்கள்?
பதில் : ‘கால்பந்தாட்ட மீள் ஆரம்பம்’ என்ற எண்ணக்கருவிலேயே நான் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். அதனை செயற்படுத்துவதே என் முன்னே உள்ள தலையாய கடமையாகும். அதன் வரிசையில் சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரையும் கால்பந்தாட்டத்தின்பால் ஈர்த்தெடுப்பதே எனது முதலாவது அணுகுமுறையாக இருக்கின்றது. வழிதவறிச் செல்லும் இளையோரையும் கால்பந்தாட்டத்தில் ஈடுபடச் செய்து நல்வழிப்படுத்துவதும் எனது திட்டங்களில் ஒன்றாகும். சிறுவர்கள், பெற்றோர்கள், பெரியோர் அனைவரையும் கால்பந்தாட்டத்தில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொள்ளச்செய்யவேண்டும். இதனை முன்னிட்டு ‘சமூக கால்பந்தாட்டம்’ என்ற எண்ணக்கருவின்கீழ் மினி மைதான கால்பந்தாட்டம், வீதி கால்பந்தாட்டம், கடற்கரை கால்பந்தாட்டம், குடும்ப கால்பந்தாட்டம் ஆகியவற்றை நாடு முழுவதும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன். முதல் 2 வருடங்களில் கால்பந்தாட்டத்தை பிரசித்தி பெறச் செய்த பின்னர் இரண்டாவது கட்டமாக கால்பந்தாட்டத்தில் ஆர்வம், திறமை மற்றும் ஆளுமைகொண்ட பிள்ளைகளை இனங்கண்டு அவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்.
கவர்தல், முதலீடுகளுடன் அபிவிருத்தி, பெறுபேறுகள் ஆகிய 3 படிநிலைகளிலேயே எனது எதிர்கால கால்பந்தாட்ட திட்டங்கள் அமைந்துள்ளன. சமூக கால்பந்தாட்டம் மிக முக்கியமானது. திறமைசாலிகளை இனங்காண்பது மட்டுமல்ல தவறான வழிகளில் செல்பவர்களை மீட்டு நல்வழிப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
அதனைத் தொடர்ந்து சம்மேளனத்தின் அனுசரணையுடன் 50 கனிஷ்ட கால்பந்தாட்ட பயிற்சி நிலையங்கள், 100 கால்பந்தாட்டப் பாடசாலைகள், 50 மினி கால்பந்தாட்ட மைதானங்கள் ஆகியன அமைக்கப்பட்டு முறையான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படும்.
பல வருடங்களுக்கு முன்னர் பாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டிகள் நிறைய நடைபெற்றன. ஆனால் இப்போது இல்லை. கல்வி அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து அவற்றை மீண்டும் ஆரம்பிப்பதுடன் கிராம மட்ட, மாவட்ட மட்டப் போட்டிகளும் தொடராக நடத்தப்படும்.
அத்துடன் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மேற்கு (கொழும்பு), வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய பிரதேசங்களில் உயர் ஆற்றல் வெளிப்பாட்டு கால்பந்தாட்ட நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும்.
கேள்வி: செயலாளர் நாயகமாக பதவி வகித்த காலத்தில் சில பிரச்சினைகளை, தடைகளை எதிர்கொண்ட நீங்கள் தற்போது தலைவராக சுதந்திரமாக செயற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. அது பற்றி கூறுவீர்களா?
பதில்: இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன யாப்பில் செயலாளர் நாயகத்துக்கு கூட்டங்களை நடத்துவதற்கு அழைப்பு விடுப்பதற்கும் லீக் போட்டிகளை நடத்துவதற்கும் மாத்திரமே அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அது விரைவில் மாற்றியமைக்கப்படும். இப்போது தலைவர் என்ற வகையில் கால்பந்தாட்டத்தைக் கட்டியெழுப்பும் குறிக்கோளுடன் நான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எனது தலைமையிலான நிருவாக உத்தியோகத்தர்கள் அனைவரும் சுதந்திரமாகவும் தொலைநோக்குடனும் செயற்படவுள்ளோம்.
முதல் கட்டமாக சம்மேளனத்தில் நிலவிவந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிருவாக சபை உறுப்பினர்களும் நிறுவனத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் தங்களது கடமைகளை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்பட இணங்கியுள்ளனர். சுருங்கச் சொல்லின் தேசிய நலநோக்குடன் கூட்டாண்மை முயற்சியுடன் அனைவரும் செயற்படவுள்ளோம். மேலும் முன்னர் இருந்த நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 28 இலிருந்து 10 ஆகக் குறைத்து நியமன உறுப்பினர்கள் இருவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கேள்வி: தேர்தலில் கடும் போட்டிக்கு மத்தியிலேயே நீங்கள் வெற்றி பெற்றீர்கள், உங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களை எவ்வாறு அனுசரிக்கப் போகின்றீர்கள்?
பதில்: எனக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நான் சொல்லும் ஒரே ஒரு பதில் என்னவெனில் தேர்தல் என்பது வருவதும் போவதுமாக இருக்கும். இப்போது நான் இலங்கையிலுள்ள சகல லீக்குகளுக்கும் பொதுவான தலைவர். கால்பந்தாட்ட அபிவிருத்திக்காக என்னோடு இணைந்து பயணிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அவர்களும் என்னோடு இணைந்து செயற்பட சம்மதித்துள்ளனர்.
எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பொறுப்புக்ளை வழங்கியுள்ளேன். அபிவிருத்தியை நோக்கி நாம் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே கால்பந்தாட்டம் செழிப்புறும். அவர்களுக்கு எதிரியாக அல்லாமல் தலைவனாக, நண்பனாகவே இந்தப் பொறுப்புக்களை வழங்கியுள்ளேன்.
நான் பதவிக்கு வந்த முதலாவது மாதத்தில் 20 இடங்களுக்குச் சென்று 20 லீக் பிரதிநிதிகளை சந்தித்து அவற்றில் நிலவும் குறைநிறைகளை அறிந்த பின்னரே அவர்களுக்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.
சம்மேளனத்தின் கீழ் இயங்கும் மாவட்ட அபிவிருத்திக் குழு பணிகளை அவர்கள் செய்வார்கள்.
கேள்வி: இடைநிறுத்தப்பட்டுள்ள சுப்பர் லீக், எவ்.ஏ.கிண்ணம் ஆகியவற்றுடன் சம்பியன்ஸ் லீக், முதலாம் பிரவு போட்டிகளை எப்போது ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்? சுப்பர் லீக்கில் போன்று மற்றைய போட்டிகளிலும் வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா?
பதில்: இடைநிறுத்தப்பட்ட சுப்பர் லீக் போட்டிகளை இந்த மாதம் 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை முன்னரைவிட மிக சிறப்பான முறையில் குதிரைப்பந்தயத் திடலில் நடத்தவுள்ளோம். அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் தேசிய மற்றும் 23 வயதின்கீழ் அணிகளின் பயிற்சிகளுக்காக போட்டி இடைநிறுத்தப்படும். மூன்றாம் கட்ட சுப்பர் லீக் நவம்பர் மாதம் மீண்டும் ஆரம்பித்து நிறைவுசெய்யப்படும். அதனைத் தொடர்ந்து முதல் தடவையாக சுப்பர் கிண்ண நொக் அவுட் போட்டி நடத்தப்படும்.
அத்துடன் இடைநிறுத்தப்பட்ட எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்டமும் விரைவில் தொடரவுள்ளது. அதேபோன்று சம்பயின்ஸ் லீக், முதலாம் பிரிவு கால்பந்தாட்டப் போட்டிகளும் நடத்தப்படும். சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக இப் போட்டிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் நடத்தப்படும்.
சுப்பர் லீக்கில் பங்குபற்றும் கழகங்களைச் சேர்ந்த 10 வீரர்களுக்கு அவர்கள் அக் கழகங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு அமைய 4 மாதங்களுக்கு சம்மேளனம் நேரடியாக சம்பளம் வழங்கும். பயிற்றுநர்கள், உதவி பயிற்றுநர்களுக்கு 50 வீத சம்பளம் வழங்கப்படும். அதேபோன்று சம்பியன்ஸ் லீக் உட்பட ஏனைய போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் சுமாரான சம்பளம் வழங்கப்படும்.
கேள்வி: சம்மேளனத்தினால் கால்பந்தாட்ட விருதுவிழா நடத்த திட்டம் ஏதேனும் உள்ளதா?
பதில்: விருது விழாவுக்கு முன்பதாக 1995 இல் சார்க் தங்கக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை அணியினருக்கு பாராட்டு விழாவுடன் பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. பாராட்டு விழாவை இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
வருட இறுதியில் கால்பந்தாட்ட இரவு (விருது) விழா நடத்தப்படும். சிறந்த வீரர், சிறந்த பயிற்றுநர், சிறந்த மத்தியஸ்தர், சிறந்த கழகம், சிறந்த லீக், வாழ்நாள் சாதனையாளர், சிறந்த ஊடகவியலாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
கேள்வி: இறுதியாக கால்பந்தாட்ட சமூகத்துக்கு வேறு ஏதேனும் கூறவிரும்புகின்றீர்களா?
பதில்: நாங்கள் கஷ்டப்பட்டது, கடுமையாக உழைத்ததெல்லாம் ஒரு வருட பதவிக் காலத்துக்காக அல்ல. எனவே ஒரு வருடத்துக்குள் யாப்பில் உள்ள குறைபாடுகளைத் திருத்தி சம்மேளன பொதுச்சபை மற்றும் பீபாவின் அங்கீகாரத்துடன் நான்கு வருட பதவிக் காலத்தைக் கொண்டுவரவேண்டும். அதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. எனவே யாரும் இடையில் புகுந்து குழப்பக்கூடாது. சுய லாபங்களையும் தீய நோக்கங்களையும் புறந்தள்ளிவைத்துவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து கால்பந்தாட்டத்தின் ஆரோக்கியத்துக்காக, வளர்ச்சிக்காக எங்களது ‘கால்பந்தாட்ட மீள் ஆரம்பம்’ திட்டத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.- Vidivelli