றிப்தி அலி
“அகில இலங்கை ஐம்இய்யது அன்சாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யாவினால் (JASM) வழங்கப்பட்ட அநாதை பராமரிப்பு நிதியுதவி இடைநிறுத்தப்பட்டமையினால் எனது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது” என்கிறார் கொழும்பு – 14 கிரோண்ட்பாஸ் பிரதேசத்தினைச் சேர்ந்த 41 வயதான பாத்திமா பர்சானா.
மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளின் தாயாரான இவரது கணவர் சிறுநீரக நோய் காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டு காலமானார். இதனையடுத்து தையல் தொழில் மேற்கொண்டு இவர் குடும்பத்தினை பராமரித்து வருகின்றார். எனினும் கொவிட் மூன்றாவது அலையினை அடுத்து இவரது தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமையினால் எந்தவித வருமானமும் இந்த குடும்பத்திற்கு கிடைப்பதில்லை.
சுமார் 1.5 பேர்ச் அளவுடைய காணித் துண்டொன்றில் அறையொன்று கூட இல்லாது நிர்மாணிக்கப்பட்ட சிறிய வீட்டிலேயே இந்த குடும்பம் வாழ்ந்து வருகின்றது.
கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து JASM இன் ‘அநாதைகள் பராமரிப்பு’ திட்டத்தின் கீழ் பர்சானாவின் மூன்றாவது மகள் நிதியுதவி வருகின்றார். ஆரம்பத்தில் ஒரு முறை 7,000 ரூபா பெற்ற குறித்த சிறுமி இறுதியாக கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் பல மாதங்களுக்குரிய பணத்தைச் சேர்த்து மொத்தமாக 45,000 ரூபா பெற்றுள்ளார்.
“ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகளில் எனது மகளிற்கான நிதி கிடைக்கும். இந்த நிதியினை அனைத்து பிள்ளைகளின் கல்விச் செலவிற்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் பயன்படுத்துவேன். தற்போது இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளமையினால் அவர்கள் நிதியுதவியினை நிறுத்திவிட்டனர். இதனால் மிகவும் கஷ்டமாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.
இந்த நிதியுதவி நிறுத்தப்பட்டமையினால் எங்களைப் போன்ற பல தேவையுடைய குடும்பங்கள் இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளன என பர்சானா மேலும் கூறினார்.
இது போன்ற சுமார் 1,100 அநாதை பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிதியுதவி வழங்கி வந்ததாக JASM அமைப்பு கூறுகிறது.
முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை
11 அமைப்புக்கள் கடந்த ஏப்ரல் 13ஆம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் ஊடாக தடை செய்யப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் விபரம்
01.அகில இலங்கை ஐம்இய்யது அன்சாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யா (JASM)
02.அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)
03.ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ)
04.ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM)
05.ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)
06.சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ)
07.தாருல் அதர் அல்லது ஜாமிஉல் அதர் பள்ளிவாசல்
08.சேவ் த பேர்ள்ஸ்
09.ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு
10.அல்கைதா அமைப்பு
11.சுப்பர் முஸ்லிம்
இவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்புக்களில் JASM மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியன நீண்ட வரலாற்றினைக் கொண்ட அமைப்புக்களாக காணப்படுகின்றன.
JASM
அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் அல் பகரி என்பவரினால் 1947ஆம் ஆண்டு குருநாகல் மாவட்டத்தின் பறகஹதெனியா கிராமத்தில் இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த அமைப்பின் தலைவராக 1983ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்படும் வரை அஷ்ஷெய்க் என்.பீ.எம். அபூபக்கர் சித்தீக் செயற்பட்டு வந்தார்.
ஏற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த இந்த அமைப்பு, கடந்த 2005.06.02ஆம் திகதி கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட கம்பனியாக பதிவுசெய்யப்பட்டது.
இதற்கு மேலதிகமாக 2009ஆம் ஆண்டின் 59ஆம் இலக்க சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி இந்த அமைப்பு பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டது.
இந்த அமைப்பினால் அநாதை பராமரிப்பு நிதியுதவி, உயர் கல்விக்கான புலமைப்பரிசில், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள் நிர்மாணம், சுயதொழில் உதவி என பல கோடி ரூபா பெறுமதியான பல்வேறு செயற்திட்டங்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இதேவேளை, 1990ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்படும் வரை நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களுக்கு JASM இனால் வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான புலமைப்பரிசில் திட்டமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
“எமது அமைப்பினை தடை செய்வார்கள் என ஒரு போதும் நாங்கள் நினைக்கவில்லை. எனினும் ரமழான் மாதத்தின் முதல் நாள் எமது அமைப்பினை தடை செய்தமை மிகவும் கவலையளிக்கின்றது” என தடைசெய்யப்படும் வரை அமைப்பின் பொதுச் செயலாளராக பணியாற்றிய ஏ.எல் கலீலுர் ரஹ்மான் தெரிவித்தார்.
“எமது பக்க நியாயங்களை கூறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் வழங்கப்படாமலேயே எமது அமைப்பினை தடை செய்துள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அமைப்பு மாத்திரமல்லாமல், தடை செய்யப்பட்ட ஏனைய பல அமைப்புக்களும் நாட்டில் பல்வேறு வகையான செயற்திட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தன. இரத்த தானம் வழங்கல், வெள்ள நிவாரணப் பணி, கொவிட் நிவாரணப் பணி என பலவற்றினை இதற்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
இரத்த தான நிகழ்வுகளை தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்தமைக்காக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சுகாதார அமைச்சிடமிருந்து பல தடவைகள் விருதுகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்
பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் இணைந்து 1980.05.03ஆம் திகதி இந்த அமைப்பை உருவாக்கினர். பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை கல்வி மற்றும் ஆன்மிக ரீதியாக கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
சுமார் 41 வருட கால வரலாற்றினைக் கொண்ட இந்த அமைப்பின் தலைவர்களாக இதுவரை சுமார் 23 பேரும் பொதுச் செயலாளர்களாக சுமார் 30 பேரும் மாறி மாறிச் செயற்பட்டுள்ளனர்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கீழ் செயற்பட்ட இந்த அமைப்பு 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டது.
மாவனெல்லை சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சாதீக் அப்துல்லாஹ் இப்றாஹீம் மற்றும் சாஹீத் இப்றாஹீம் சகோதரர்கள் இந்த அமைப்பின் முறையே செயற்குழு உறுப்பினர் மற்றும் சப்ரகமுவ பிராந்திய பொறுப்பாளர் ஆகிய பதவிகளில் செயற்பட்டுள்ளனர்.
எனினும், குறித்த அமைப்பின் யாப்பிற்கு முரணாக செயற்பட்டார்கள் என்ற காரணத்தினால் கடந்த 2015/16ஆம் ஆண்டு காலப் பகுதியில் குறித்த இரு சகோதரர்களும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தற்கொலை தாக்குதல்
இவ்வாறான நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முஸ்லிம் பெயர் தாங்கிய குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் காரணமாக 269 அப்பாவி மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் சுமார் 500 பேர் வரை காயமுற்றனர்.
இதனையடுத்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த 435 முஸ்லிம் அமைப்புக்களின் பதிவுகளும் கடந்த 2019.09.23ஆம் திகதி இரத்துச் செய்யப்பட்டு வக்பு சபையின் கீழுள்ள முஸ்லிம் தர்ம நிதியத்தின் கீழ் பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய மேற்படி பட்டியலில் உள்ள முதல் நான்கு அமைப்புக்களின் பதிவுகளும் இரத்துச் செய்யப்பட்டன.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை
இவ்வாறான நிலையில் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் 31ஆவது அத்தியாயமான பரிந்துரைகளில் ‘தடை’ என்ற தலைப்பில் மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன:
1. இலங்கையில் ஐ.எஸ் உள்ளிட்ட மத அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்வதற்கான சட்டங்கள் அல்லது விதிமுறைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
2. இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மற்றும் அதன் மாணவர் அமைப்பான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியன தடை செய்யப்பட வேண்டும். பொருத்தமான சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்யும் பொருட்டு இந்த அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அதன் அங்கத்தவர்கள் தொடர்பில் ஆழமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்
3. பொதுபலசேனா அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்
இதற்கு மேலதிகமாக ஆணைக்குவின் பரிந்துரையில் ‘வஹாபிசம்’ எனும் தலைப்பில் நாட்டில் வஹாபிச கொள்கை தடை செய்யப்பட வேண்டும் எனவும் வஹாபிச அமைப்புக்களான அனைத்து தௌஹீத் அமைப்புக்களும் தடை செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவற்றின் பெயர் விபரங்கள் எவையும் அதில் குறிப்பிடப்படவில்லை.
இஸ்லாமிய அமைப்புக்களின் தடை
நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சியின் நலனில் அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அடிப்படைவாதத்துடன் தொடர்புடையன என்ற காரணத்தை முன்வைத்தே இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் 2021ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஒழுங்கு விதிகளுக்கமைய குறிப்பிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தடையினை அடுத்து குறித்த அமைப்புக்களினால் பராமரிக்கப்பட்டு வந்த பல வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில், JASM இன் சுமார் 80 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கொன்றும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் சிலவற்றின் கீழ் காணப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் விடயத்தில் அரசாங்கத்தினால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எவ்வாறாயினும் தடை செய்யப்பட்ட அனைத்து அமைப்புக்களின் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் வக்பு சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மீது விதிக்கப்பட்ட தடையினை அடுத்து அப்பள்ளிவாசல் முற்றாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் யாராவது பள்ளிவாசல்களின் நிர்வாகிகளாக செயற்பட்டால் உடனடியாக குறித்த பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு வக்பு சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனையடுத்து சுமார் 12 பேர் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் பதவிகளில் இருந்து இதுவரை இராஜினாமாச் செய்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
அடிப்படை மனித உரிமை மீறல் மனு
இதேவேளை, குறித்த தடையினை எதிர்த்து JASM, அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாஅத், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியன உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதில், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு கடந்த செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, JASM இனால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (05) வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எவ்வாறாயினும் ‘‘முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானதாகும்’’ என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தெரிவித்தார்.
“இந்த தடையின் ஊடாக முஸ்லிம் சமூகத்திலுள்ள சிவில் இயக்கங்களை முடக்குவதற்கான மறைமுக திட்டமொன்று காணப்படுகின்றது. இதன் பின்னணியில் பல வெளிநாட்டு சக்திகள் செயற்படுகின்றன” எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த தடை நீக்கப்படாவி்ட்டால் மேற்படி அமைப்புக்களில் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் மாத்திரமல்லாது அவர்களது குடும்பத்தினரும் கூட எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கான விசாக்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி வரலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில் இழப்பு
இந்த அமைப்புக்களின் தடை காரணமாக சுமார் 100க்கு மேற்பட்டோர் இன்று தொழில்களை இழந்துள்ளனர். இவர்கள் குறித்த அமைப்புக்களின் அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள், மார்க்கப் பிரச்சார பணிகளில் ஈடுபட்டவர்களாவார்.
அந்நியச் செலாவணி
அது மாத்திரமல்லாமல், குவைத் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஸகாத் ஹவுஸ், பஸாயிர் செரிட்டி மற்றும் இந்தியன் கொண்டினன் கொமிட்டி ஆகிய மூன்று அமைப்புக்களின் நிதியுதவியின் ஊடாகவே கடந்த பல தசாப்த காலமாக அநாதை பராமரிப்புக்கான நிதியுதவித் திட்டத்தை JASM அமைப்பு முன்னெடுத்து வந்தது. இதற்காக இறுதி மூன்று வருடங்களில் 3.1 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது என JASM அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்களில் சிலோன் தெளஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசீக் தவிர வேறு எவருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தமது பக்க நியாயங்களைச் சொல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், அனைத்து தெளஹீத் அமைப்புக்களையும் தடை செய்யுமாறு சிபாரிசு செய்யப்பட்டமை தொடர்பில் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்ட நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் (ஓய்வு) திருமதி டப்ளியூ.எம்.எம்.ஆர். அதிகாரியினை நாம் தொடர்புகொண்ட போது, இது தொடர்பில் எந்தவித கருத்தினையும் கூற அவர் மறுத்துவிட்டார்.
“ஆணைக்குழுவின் உறுப்பினர் என்ற வகையில் அந்த அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு எந்த கருத்தும் என்னால் கூற முடியாது. தற்போது குறித்த அறிக்கை பொது ஆவணமாக உள்ளமையினால் அதனை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் சரத் வீரசேகர
இதேவேளை “தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பில் நாம் தனிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தோம். இதன்போது, குறித்த அமைப்புக்கள் நாட்டில் அடிப்படைவாதத்தினை பரப்பியதற்கான தெளிவான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்தே குறித்த அமைப்புக்களை தடை செய்தோம்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு குறித்த அமைப்புக்கள் தடை செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தால், அவர்களின் தடை தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து, மேற்படி பட்டியலில் உள்ள முதல் ஆறு அமைப்புக்களும் தங்களின் தடையினை மீளாய்வு செய்யுமாறு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எழுத்து மூலம் விசேட வேண்டுகோளொன்றினை முன்வைத்துள்ளன.
எனினும் நாட்டில் ‘அடிப்படைவாத்தினை பரப்பினார்கள்’ என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை குறித்த ஐந்து தெளஹீத் அமைப்புக்களும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கமும் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுபலசேனா
இதேவேளை, ‘‘கலகொட அத்தே ஞானசார தேரர் பொதுச் செயலாளராக செயற்படும் பொதுபலசேனா அமைப்பின் நடவடிக்கைகள் சமய ஒற்றுமைக்கும், அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்பது விசாரணை ஆணைக்குழுவின் அபிப்பிராயமாகும். இதனால் குறித்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்’’ என ஜனாதிபதி ஆணைக்குழு சிபாரிசு செய்திருந்தது.
அது மாத்திரமல்லாமல் ‘‘ஞானசார தேரரின் சில செயற்பாடுகள் மற்றும் அவர் உரையாற்றிய விதம் முஸ்லிம் இளைஞர்கள் திவீரவாதிகளாக மாறுவதற்கு பங்களிப்பு செய்ததுடன் சஹ்ரானுடன் இணைவதற்கும் வழிகோலின’’ என ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.சீ.சி.பீ.ஆர் சட்டத்தின் 56ஆம் பிரிவின் கீழ் மகரஹம (2013) மற்றும் அளுத்கம (2014) ஆகிய நகரங்களில் ஞானசார தேரர் ஆற்றிய உரைகள் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு விசாரணை ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு சிபாரிசு செய்தது.
அரசாங்கம்
எவ்வாறாயினும், ஆணைக்குழுவின் இந்த சிபாரிசு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் பொது பல சேனா அமைப்புக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளுக்கும் எடுக்காமல், முஸ்லிம் அமைப்புக்களை மாத்திரம் தடை செய்வதற்கு அனுமதி வழங்கியது.
இது தொடர்பில் அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் உறுப்பினருமான அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் வினவியதற்கு,
“குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை விரிவாக ஆராய்ந்த அமைச்சரவை உப குழு, பொதுபலசேனா அமைப்பினை தடை செய்யுமாறு எந்தவித சிபாரிசினையும் முன்மொழியவில்லை.
குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் ஏனைய சட்ட அமுலாக்கல் துறையினர் ஆணைக்குழுவின் அறிக்கையினை புலனாய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் இறுதி முடிவினை அமைச்சரவை உப குழு காத்துக்கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே பொதுபலசேனா அமைப்பினை தடை செய்வதா இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானமொன்றை மேற்கொள்ளும்” என்றார்.
மனித உரிமைசெயற்பட்டாளரின் கருத்து
இதேவேளை, நாட்டில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களை பொறுத்தவரை தடை செய்யப்பட்டதற்கான காரணங்களை வெளிப்படையாக ஆதாரங்களுடன் தெரியப்படுத்தவில்லை என மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.
“ஆகையால் இச்செயல் இந்நிறுவனங்களின் அங்கத்தவரின் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட உரிய செயல்முறை உரிமைகளை (Due Process Rights) மீறுகிறதா என்ற கேள்வி எழுகின்றது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“ஒரு நிறுவனத்தை தடை செய்வதென்றால் அது சட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட தெளிவான ஒரு வழிமுறையினாலேயே செய்யப்பட வேண்டும். மேலும், தடை செய்வதற்கான காரணங்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரியப்படுத்தப்பட வேண்டும்” என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான அம்பிகா தெரிவித்தார்.
இல்லாவிடில் அதிகாரத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கேற்ப நிறுவனங்களை தடை செய்யலாம். முக்கியமாக, தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு அத்தடையை மேல் முறையீடு செய்து சவாலுக்குட்படுத்த வழிமுறை இருக்க வேண்டும்’’ என அவர் மேலும் கூறினார்.- Vidivelli