முஹாபிஸ், கொழும்பு.
‘அச்சுறுத்தல் விடுக்கும் அறிவித்தல்’ எனும் தலைப்பில் கடந்தவாரம் ‘விடிவெள்ளி’ பத்திரிகையில் செய்தி ஒன்று பிரசுரமாகியிருந்தது. குருநாகல் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசலில் ஒன்றில், ஐங்காலத் தொழுகைக்காக வருபவர்களில், தௌஹீத் ஜமாஅத்தினரின் தொழுகை சம்பந்தப்பட்ட கொள்கைகளையும் நடைமுறைகளையும் கொண்டவர்கள் தொழுகையில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்ற தொனியிலான அறிவித்தல் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவே அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்படி செய்தியினை வாசித்தபின்னர் நான் மிகவும் கவலையடைந்தேன். இலங்கை முஸ்லிம் சமூகத்தினுள்ளே ஆழ வேரூன்றியிருக்கும் சமயக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் நிலைமாற்றம் செய்யப்பட வேண்டிய காலகட்டத்தில் அவை மென்மேலும் முரண்பாட்டினை வளர்ப்பதற்கான காரணிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருவதானது மிகவும் அபாயகரமானதும், ஆபத்தானதும் அதிக விலை கொடுக்க வேண்டியதுமாக அமைந்துவிடும் என்று நான் கருதுகின்றேன்.
1990 களில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தௌஹீத் அமைப்புகளின் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டபோது அதனை எவ்வாறு சமய ரீதியாக அணுகுவது, அவர்களது கருத்துக்களின்பால் உள்ள சாதக பாதகங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் அறிவுபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக உணர்வுபூர்வமான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டன. அதனால் தௌஹீத் கருத்துக்களை சரி கண்டவர்கள் மைய நீரோட்டத்திலிருந்து விலகி தனித்தனியாக பள்ளிவாசல்களை அமைத்து தமது பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்நிலை சமூகமட்டத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது. அதன் மிக மோசமானதும் பாதகமானதுமான விளைவுதான் கடும்போக்கு தௌஹீத் சிந்தனைப் பிரிவினர்களின் தோற்றமாகும். இறுதியில் அவர்கள் சமயத்தின் பெயரால் வன்முறைக் கலாசாரத்தினையே தமது இறுதி ஆயுதமாகத் தெரிவு செய்து பாரிய அழிவுகளை இந்நாட்டில் ஏற்படுத்திச் சென்றுள்ளனர்.
இந்தப் பாடங்களில் இருந்து படிப்பினை பெற்று சமய ரீதியான கருத்து வேறுபாடுள்ள அனைவரும் தத்தமது நம்பிக்கைகள், நிலைப்பாடுகளின் அடிப்படையில் பொது நீரோட்டத்தில் செயற்படுவதற்கான சூழல் ஏற்படுத்தப்படாத போது அது தேவையற்ற முரண்பாடுகளையும் அழிவுகளையுமே தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்தும்.
எனவே முஸ்லிம் சமூகத்தின் உள்ளே உள்ள சமய ரீதியான முரண்பாடுள்ள அமைப்புக்கள், இயக்கங்கள் தொடர்பில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களான ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்பு சபை என்பன உடனடிக் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் அவசியம் எனக் கருதுகிறேன்.
கடந்த காலங்களைப் போன்று பொறுப்போடு செயலாற்ற வேண்டிய மேற்படி நிறுவனங்கள் பொடுபோக்காகவும், பக்கச்சார்பாகவும் நடந்து கொள்ள முயலுவார்களாயின் அதற்கான விலையினை அப்பாவிப் பொதுமக்களே கொடுக்க வேண்டி வரும். எனவே இவ்விடயம் தொடர்பில் உடனடிக் கவனமெடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
அத்தோடு பள்ளிவாசல்கள் என்பது வணக்க வழிபாடுகளுக்கான ஒரு பொதுத் தளமாகும். அங்கு வணக்க வழிபாட்டிற்கு ்டிற்கு வரும் அனைவரும் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படாத வகையில் தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும் அல்லது இடமளிக்கப்படல் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. மாறாக தௌஹீத் சிந்தனை முகாமைச் சேர்ந்தவர்களுக்கு வக்காலத்து வாங்குவது எனது நோக்கமல்ல என்பதனையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.- Vidivelli