அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் நீதிமன்ற தீர்மானம் தமக்குப் பாதகமாக அமைந்தால் தமது அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர். இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் முக்கிய சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின் போது தாம் எடுக்கவுள்ள அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இது குறித்து விமல் வீரவன்ச எம்.பி கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி ஜே.வி.பி. மற்றும் சுமந்திரன் கூட்டணி இந்த நாட்டினை எந்த திசைக்கு கொண்டுசென்று இறுதியில் எவ்வாறு நாசமாக்கப்போகின்றனர் என்ற அச்சுறுத்தல் குறித்தும், புலம்பெயர் அமைப்பினர், வேறு அடியாட்களை கொண்டு ஜனாதிபதியை கொலைசெய்யும் சதி அம்பலமாகியுள் நிலையில், இலங்கையை லிபியாவாக மாற்றவுள்ளதாக கூறுகின்ற நிலையில், சர்வதேச நாடுகளின் தேவைக்கமைய இந்த நாட்டினை நாசமாக்கும் நடவடிக்கையை இவர்கள் எடுக்கின்றன நிலையில், இவற்றினை தடுக்கும் நடவடிக்கைகளையே நாம் ஆராய்ந்து வருகின்றோம். எமது அணியினருக்கும் எமது தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கும் இடையில் நேற்று இரவு (நேற்று முன்தினம் ) முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் நாம் அடுத்து எடுக்கவுள்ள தீர்மானங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதேபோல் நாளை (இன்று ) ஜனாதிபதியை சந்தித்து சில முக்கியமான தீர்மானங்கள் எடுப்பது குறித்து ஆராயவுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கூட்டணியின் சூழ்ச்சியை தடுத்து நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எமது நோக்கமாக உள்ளது. பாராளுமன்றத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி ரணில் மீதான நம்பிக்கை பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் பாராளுமன்றத்தில் எதை செய்தாலும் அவர்களின் பெரும்பான்மையை எத்தனை தடவை நிருபித்தாலும் அது மக்களின் நிலைப்பாடல்ல. மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து வாசுதேவ நாணயகார எம்.பி கூறுகையில்,
எம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அதற்கான ஆதரவு எமக்குள்ளது. நேற்று இரவு மஹிந்த ராஜபக் ஷவுடனான சந்திப்பின்போது எமக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் தொகையை நாம் நெருகிவிட்டோம் என்பது தெரிந்தது. இப்போது 111 உறுப்பினர்கள் ஆதரவு எமக்கு உள்ளது. ஆகவே இன்னும் சிறிது காலத்தில் 113 பெரும்பான்மையை இலகுவாக காட்டிவிட முடியும். எவ்வாறு இருப்பினும் ஆட்சியை விட்டுக்கொடுக்க நாம் தயாராக இல்லை. எம்மால் ஆட்சி செய்ய முடியும். வீணாக ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களின் கூட்டணியுமே ஆட்சியை குழப்பிக்கொண்டுள்ளனர். இப்போது நாம் பாராளுமன்றத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை. ஆனால் எப்படியும் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். ஜனவரி மாதத்திலாவது நாம் செல்ல வேண்டும். ஆகவே அப்போது எமது பெரும்பான்மையை நாம் நிரூபிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli