(ஏ.ஆர்.ஏ. பரீல்)
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அந்த வகையில் அரசியல் தலையீடுகள் இல்லாத திணைக்களங்களே இல்லை. அதிலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அளவுக்கு அதிகமான அரசியல் தலையீடுகள் இருந்தன. அதனால் இந்த திணைக்களத்தில் இணைந்து கொள்வதில்லை என்றிருந்தேன். என்றாலும் இந்த திணைக்களத்தில் நான் பதவியேற்றதிலிருந்து ஜனாதிபதியினதும், பிரதமரினதும் தலையீடுகள் இருக்கவில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்திணைக்களத்தில் பணிப்பாளராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்ற ஏ.பி.எம்.அஷ்ரப், பதில் பணிப்பாளராக புதிதாக நியமனம் பெற்ற எம்.எல்.எம்.அன்வர் அலியிடம் தனது பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக கடந்த திங்கட்கிழமை கையளித்தார். அதனையடுத்து அவருக்கு திணைக்கள உத்தியோகத்தர்களால் பிரியாவிடை வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஏ.பி.எம்.அஷ்ரப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கும் தற்போதைய செயலாளருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். அவர்கள் எனக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கினார்கள். அத்தோடு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய திணைக்கள ஊழியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
ஹஜ் விவகாரங்களில் எனது முடிவுகள் தனி முடிவாக இருக்கவில்லை. ஹஜ் குழுவுடன் தொடர்புபட்டே முடிவுகளை மேற்கொண்டேன். ஹஜ் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படும் வரை இருந்த ஹஜ் குழுவுக்கும் அதன் தலைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
பள்ளிவாசல் விடயங்களில் வக்புசபையின் தீர்மானத்தினையே அறிவிப்புச் செய்தேன். வக்புசபையின் தலைவரது சரியான தீர்மானங்களை நான் வரவேற்கிறேன்.நன்றி தெரிவிக்கிறேன்.
மதவிவகாரங்கள் தொடர்பான தீர்மானங்களை அதற்கென ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டிருந்த 9 பேரடங்கிய குழுவின் ஆலோசனைப்படியே மேற்கொண்டேன். கலை, இலக்கிய மேம்பாட்டுக்காக 11 பேரடங்கிய குழுவொன்று உள்ளது. இக்குழுவின் ஆலோசனையின்படி தற்போது 53 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
நீதியமைச்சர் அலிசப்ரி எனது உத்தியோகபூர்வ விடயங்களில் தலையிடவில்லை. ஆலோசனைகளே வழங்கியுள்ளார். மேலும் நகீப் மெளலானா, ஹஸன் மெளலானா ஆகியோர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் அவர்களுக்கும் நன்றிகள்.
நான் பதவியேற்றபோது திணைக்களத்துக்கென 11 மாவட்டங்களிலே கள உத்தியோகத்தர்கள் இருந்தார்கள். நான் ஏனைய 14 மாவட்டங்களுக்கும் கள உத்தியோகத்தர்களை நியமித்துள்ளேன். நான் பதவியேற்றபோது 90 உத்தியோகத்தர்களே திணைக்களத்தின் கீழ் பதவியில் இருந்தார்கள். தற்போது மொத்தம் 120 பேர் பதவியில் இருக்கிறார்கள்.
மற்றும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளிவாசல் நிர்வாகிகள், வக்பு சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் எனது நன்றிகள். எனது பதவிக்காலத்தில் பிறை தொடர்பில் பிரச்சினைகள் எழவில்லை.பிறைக் குழுவுக்கும் எனது நன்றிகள்.
மெளலவிமார்களின் சம்பளம் மற்றும் மேம்பாட்டு வளர்ச்சித்திட்டம் தொடர்பில் அறிக்கையொன்றினை வக்பு சபைக்கு சமர்ப்பித்துள்ளேன். புதிதாக பதில் பணிப்பாளராகப் பதவியேற்றுள்ள அன்வர்அலி அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன். எனது பதவிக்காலத்தில் 100 க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை வகுத்துள்ளேன் என்றார்.
இதேவேளை, ‘முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏ.பி.எம்.அஷ்ரப் சமூகத்தின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து அமுல்படுத்தியுள்ளார். அவர் அமுல்படுத்தியுள்ள திட்டங்கள் மற்றும் அமுல்படுத்த வேண்டியுள்ள அவரது திட்டங்கள் அனைத்தும் எவ்விததடைகளுமின்றி முன்னெடுக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதில் பணிப்பாளராக கடமையேற்றிருக்கும் எம்.எல்.எம். அன்வர் அலி ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை இடம்மாற்றம் பெற்றுச்சென்ற திணைக் களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரபுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகை யில் திணைக்களத்தின் மூலம் பல்வேறு முன்னேற்றகரமான திட் டங்களை அமுல்படுத்திய முன்னாள் பணிப்பாளர் பாராட்டுக்குரியவர்.அவரது பிரிவு எம்மை கவலையில் ஆழ்த்தியுள்ளது எனக்கு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.- Vidivelli