அஹ்னாப் ஜஸீமை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளை அனுமதிக்குக
உயர் நீதிமன்றம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவு
(எம்.எப்.எம்.பஸீர்)
“நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்திக்க அவரது சட்டத்தரணிகளுக்கு உடனடியாக அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சட்டத்தரணிகள் – சேவை பெறுநர்களிடையேயான சிறப்புரிமை மற்றும் இரகசிய தன்மை தொடர்பிலான உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்த சந்திப்பு அனுமதியை உடன் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது.
அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/ 21 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று பரிசீலனைக்கு வந்த போது, நீதிமன்றம் இதனை அறிவித்தது.
இதன்போது, மனுதாரரான அஹ்னாப் ஜஸீம் சார்பில் மன்றில் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர மற்றும் லக்ஷ்மனன் ஜயகுமார் ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி கண்க ஈஸ்வரன் ஆஜரானார்.
கடந்த மே மாதம் முதல், அஹ்னாப் ஜஸீம் எந்தவொரு நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவில்லை எனவும், அவரது அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆலோசனையை பெற்றுக்கொள்ளக் கூட அவரை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என உயர் நீதிமன்றில் வாதங்களை முன் வைத்து சுட்டிக்காட்டினார்.
இதன்போது மனுவின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே, மனுதாரர் தற்போது நீதிமன்ற காவலின் கீழ் உள்ளதாகவும், தடுப்புக் காவல் உத்தரவு காலவதியான நிலையில் அவர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டு இவ்வாறு நீதிமன்ற காவலில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்த விவகாரத்தில் சட்ட மா அதிபர் ஏலவே மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன் வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையிலேயே, அஹ்னாப் ஜஸீமை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதியளிக்குமாறு உயர் நீதிமன்றம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டதுடன், மனு மீதான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.- Vidivelli