நபிகளாரை அவமதிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்ட போலி முகநூல் கணக்கினை பேஸ் புக் நிறுவனம் அகற்றியுள்ளதுடன் வேறு சில கணக்குகளை தற்காலிகமாக தடை செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
கடந்த வாரம் நபிகளாரை அவமதிக்கும் வகையில் போலி முகநூல் கணக்கிலிருந்து இடப்பட்ட பதிவை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பகிர்ந்ததை தொடர்ந்து இது தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன.
இவ்விவகாரம் சர்ச்சைக்குள்ளானதையடுத்து குறித்த பேஸ்புக் பதிவை சம்பந்தப்பட்டவர்கள் உடன் நீக்கியிருந்தனர். அத்துடன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தனக்குத் தெரியாமலேயே குறித்த பதிவு தனது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே குறித்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் தமிழ் , முஸ்லிம் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கலாம் என அஞ்சிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்தில் புதுடில்லி அலுவலகத்துக்கு முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து அவதூறு கருத்தைப் பதிவிட்ட போலி முகநூல் கணக்கும் அதில் பதிவிடப்பட்டிருந்த சகல பதிவுகளும்பேஸ் புக் நிறுவனத்தினால் நீக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று இந்த விவகாரத்துடன் தொடர்புபட்டு இன மத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட மேலும் சில முகநூல் கணக்குகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக புதுடில்லியில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. – Vidivelli