பள்ளிவாசல் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கோருகிறேன்
காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலில் அருட்தந்தை ரொஹான்
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
1990 ஆம் ஆண்டு காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துக்காக தான் மன்னிப்புக் கோருவதாக மட்டக்களப்பு சென்ட் ஜோன்ஸ் அமெரிக்க மிஷன் தேவாலயத்தின் அருட்தந்தை ரொஹான் தெரிவித்தார்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 31 ஆவது வருட நினைவு தின நிகழ்வு, துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற மஸ்ஜிதுல் ஹுசைனிய்யாவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தப் பள்ளிவாயல் படுகொலையானது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைப்பால் நடாத்தப்பட்டது என்பதற்காக நாம் உங்களிடத்தில் மன்னிப்புக் கோருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 31 ஆவது வருட நினைவு தினம் கடந்த 03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
03.08.1990 அன்று காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல், அதே பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் ஹுஸைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டிலும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
பள்ளிவாசல் படுகொலையின 31 ஆவது வருட நினைவு தினத்தையொட்டி இவ்விரண்டு பள்ளிவாயல்களிலும் குர்ஆன் ஓதுதல், துஆப் பிரார்த்தனை, நினைவுரை போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் அதன் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.ஆதம்லெவ்வை தலைமையிலும் மஸ்ஜிதுல் ஹுஸைனிய்யா பள்ளிவாசலின் அதன் தலைவர் எம்.எஸ்.எம்.சமீம் தலைமையிலும் இரு வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
ஹுஸைனிய்யா பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு சென்ட் ஜோன்ஸ் அமெரிக்க மிஷன் தேவாலயத்தின் அருட்தந்தை ரொஹான் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பிஸ்மி சமாதான கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி உட்பட உலமாக்கள், சமூக சமய பிரமுகர்கள், பள்ளிவாயல்களின் நிருவாகிககள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மட்டக்களப்பு சென்ட் ஜோன்ஸ் அமெரிக்க மிஷன் தேவாலயத்தின் அருட்தந்தை ரொஹான் உரையாற்றுகையில்,
பல வன்முறைகளையும், படுகொலைகளையும் வேதனைகளையும், அனுபவித்த சமூகம் நாங்கள். அதன் வேதனை எங்களுக்கு தெரியும். அந்த வகையில் இந்த பள்ளிவாசல் படுகொலையும் இதில் உயிர் நீத்தவர்களின் குடும்ப உறவுகளுக்கு எவ்வாறு வேதனைகளை, இழப்பைக் பாதிப்பை கொடுத்திருக்கும் என்பதையும் அவர்களது பிள்ளைகள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
ஆகவே இதனை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.வன்முறைக்கு வன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது. இனிமேலும் இவ்வாறான நிகழ்வுகள் ஒரு போதும் நடைபெறக் கூடாது.
எனவே இந்த நாளில் இதன் வேதனையை உணர்ந்தவர்களாக உறவுகளை இழந்து துயரப்படுகின்ற இன்றைய நாளில் உங்களிடத்தில் மன்னிப்பை கேட்பதோடு இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நாங்கள் ஒன்று சேர்ந்து எங்களால் இயன்ற முயற்சிகளை செய்து கொண்டே இருப்போம்.
சமாதானத்துக்காக, அனைத்து மக்களுடைய நல்வாழ்வுக்காக, நமது இளம் சந்ததிகள் சந்தோசமாக இந்த உலகத்தில் வாழ்வதற்காக எம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோம் என்றும் தெரிவித்தார்.
இங்கு பிஸ்மி சமாதான கற்கைகள் நிறுவனத்தினதும் பிஸ்மி நிறுவனத்தினதும் முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி இங்கு உரையாற்றுகையில்,
வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு உரையை அருட்தந்தை ரொஹான் இங்கு ஆற்றினார். இந்த சம்பவங்களுக்குப் பின்னால் ஆயிரம் கண்ணீர் கதைகள் இருக்கின்றன. இந்த சபையைப் பார்க்கின்ற போதும் கூட அன்று காயப்பட்டு உயிருக்குப் போராடி தப்பி பிழைத்த பல சகோதரர்கள் இருக்கின்றார்கள்.
இப்படியான துக்ககரமான நிகழ்வு இலங்கை வரலாற்றில் எடுத்து பார்க்கின்ற போது எல்லா சமயங்களுக்கும் நடந்திருக்கிறது.
நாம் காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை பற்றி பேசுகின்ற போது, ஏறாவூர் படுகொலை பற்றி பேசுகின்ற போது பௌத்த மக்கள், அரந்தலாவ படுகொலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பௌத்த சமயத் தலைவர்கள், சிறுவர்கள் என பலரும் இதில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதை எல்லாம் விட தமிழ் மக்கள்,கிறிஸ்தவ மக்களின் தங்களது தேவாலயங்கள் மீது விமானங்களின் மூலம் வீசப்பட்ட குண்டுகளினால் கொல்லப்பட்ட தமது உறவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் இடத்திலே தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏன் கொல்லப்பட்டார்கள் என்று தெரியாமல் பச்சிளம் பாலகர்கள் பெரியவர்கள் இதில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இறுதியாக 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத்தக்குதலில் நமது மாவட்டத்திலிருக்கின்ற சீயோன் தேவாலயத்தில் வணக்க வழிபாட்டுக்குச் சென்ற 30க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நாங்கள் ஏன் கொல்லப்பட்டோம் என்று தெரியாமலே உயிரிழந்துள்ளார்கள்.
இப்படி தேசத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்றபோது காயமும் கண்ணீரும் கம்பலையும் கவலைகளுமாகவே இருக்கின்றன. எனவே தான் இவ்வாறான நிகழ்வுகள் இம் மண்ணிலே தொடர்ந்து நிகழ வேண்டுமா அல்லது இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து எதிர்கால பரம்பரைக்கு நாம் வாழுகின்ற இந்த தாய்நாட்டை அமைதிமிக்க சுபீட்சம் மிக்க தேசமாக கையளித்து விட்டுச் செல்ல வேண்டுமா என்ற கேள்வியை நாம் எல்லோரும் நமக்குள்ளே எழுப்பி விடை காண வேண்டும்.
அதனால் தான் அருட்தந்தை என்னை தொலைபேசியில் அழைத்து, ஆகஸ்ட் 3 ஆம் திகதி சுஹதாக்கள் தின நிகழ்வில் பங்கேற்று நான் காத்தான்குடி மக்களோடு பேச வேண்டும் ;எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டார். அந்த வகையில்தான் பள்ளிவாயல் நிருவாகிகளோடு பேசிய வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
நான் பகிரங்கமாக முஸ்லிம் சமூகத்திடம் இந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கூறி, இந்த இடத்திலேயே பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.
உண்மையைக் கண்டறிவது, மன்னிப்புக் கோருவது, மன்னிப்பளிப்பது என்பன இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட விடயங்கள். நபியவர்களை கொலை செய்ய வந்தவர்களை மன்னித்த வரலாற்றைக் கொண்ட சொந்தக்காரர்கள் நாம்.
எனவே விரும்பியோ விரும்பாமலோ நடந்த இந்த சம்பவங்களில் இருந்து மீண்டெழுந்து இவ்வாறான காயப்படுத்தும் சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதவாறு பாதுகாப்பது நமது பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயலில் நடைபெற்ற சுஹதாக்கள் தின தின நிகழ்வில் சிறப்புரையை அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நளீமி ஆற்றினார்.
அங்கு விஷேட துஆப்பிராத்தனையை காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி நடாத்தி வைத்தார்.
மிகவும் அமைதியான முறையில் இம் முறை சுஹதாக்கள் தின நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli