கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
கொவிட் கொள்ளை நோய் நாட்டைவிட்டு நீங்கும் சாயல்கள் எங்குமே தென்படவில்லை. மாறாக, அதன் நான்காவது டெல்டா என்ற அதிவிரைவாகப் பரவக்கூடிய கிருமி ஊடுருவியுள்ளதாக அதிகாரத் தகவல்களும் அன்றாட நிகழ்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. தடுப்பூசியை உள்வாங்கிக்கொண்டு நெருங்கிய மனித உறவாடலையும் மனிதத் திரள்களையும் தவிர்த்து வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு மனித சமூகம் உலகெங்கும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை மட்டும் எவ்வாறு விதிவிலக்காக மாற முடியும்? இருந்தும், மருத்துவ வல்லுனர்களின் வேண்டுகோள்களையும் இராணுவ அதிகாரிகளின் கட்டளைகளையும் பொருட்படுத்தாது வெகுஜனங்கள் வீதிகளிலே இறங்கி அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது இலங்கையிலே இன்று தினந்தோறும் நடைபெறும் நிகழ்வுகளாகி விட்டன. அரசாங்கத்தின் ஊடகங்கள் இதனை மூடிமறைத்தாலும் சமூகவலைத் தளங்கள் உண்மையை வெளிப்படுத்துகின்றன. காரணம் நோயின் அவஸ்தை ஒரு புறமிருக்க அரசாங்கத்தின் தவறான கொள்கைகளினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரக் கஷ்டங்களும் அதனால் உருவாகும் குடும்ப நெருக்கடிகளும் கொவிட் கிருமியைவிடவும் கொடியனவாக இருக்கின்றன. இதனை அரசு உணர்வதாகத் தெரியவில்லை. எனவே வெகுஜனங்களைப் பொறுத்தவரை ஆட்சியாளர்கள் தமது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் ஆட்சியையே மாற்றுவது அவசியம் என்றாகிறது. இதனைப்பற்றிய சில சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் கோக்கம்.
ஆட்சியாளர்கள் என்ன சொன்னார்கள்?
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது இலங்கையைப்பற்றிய ஒரு கனவு தன்னிடமுண்டு. அதன்படி இந்த நாட்டைப் பொருளாதாரச் செழிப்பும் மகோன்னதமும் பின்னிப்புரளும் ஒரு பொன் நாடாக மாற்றுவேன் என்றும், இந்த நாட்டின் இறைமையைப் பாதுகாத்து பௌத்த சாசனத்தையும் கட்டிக்காப்பேன் என்றும், தான் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளாலேயே தெரிவுசெய்யப்பட்டாலும் சர்வ இனத்தவர்களினதும் ஜனாதிபதியாகவே ஆட்சி செய்வேன் என்றும் கூறியதை மக்கள் மறக்கவில்லை. அவரைத் தொடர்ந்து அவரது தமயன் மகிந்த ராஜபக்சவும் தனது முதலாவது வரவுசெலவுத் திட்ட உரையில் இதே விடயங்களை உரைத்ததையும் மக்கள் மறந்துவிடவில்லை. ஆனால் நடந்ததென்ன?
கொவிட் துரதிஷ்டம்
இந்த ஆட்சியாளர்கள் பதவியேற்ற ஒரு வருடத்துக்குள் கொவிட் தொற்றுநோய் பரவத் தொடங்கியது அவர்களின் துரதிஷ்டம் என்பதை யாரும் மறுக்கவில்லை. அனால் அந்த நோய் இலங்கையை மட்டுமா பீடித்தது? உலக நாடுகள் யாவற்றையும்தானே. அந்த நோயால் பீடிக்கப்பட்ட கோடிக்கணக்கான நோயாளிகளும் அதனால் ஏற்பட்ட இலட்சக்கணக்கான மரணங்களும் உலக வரலாற்றில் மறக்க முடியாதவை. மரணித்தவர்கள் விண்ணுலகம் சென்றடைந்து நிம்மதியானார்கள். ஆனால் தப்பிப்பிழைத்து வாழும் கோடானுகோடி மக்கள் அனைவரையும் காப்பாற்றி அவர்களின் ஜீவனோபாயங்களையும் பாதுகாத்துக் கொடுப்பது அரசாங்கங்களின் கடமையல்லவா? அந்தக் கடமையைச் சிறப்பாகச் செய்ய முடியாத அரசுகள் தமது தோல்விக்கு கொவிட் நோயையே சதா குறைகூறிக் கொண்டிருப்பதை ஏற்க முடியுமா? அத்துடன் அந்த நோயையே ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு ஜனநாயக விழுமியங்களைப் புறக்கணித்து, அநீதிக்கும் ஊழலுக்கும் இடமளித்து, அரசையே ஒரு குடும்ப ஆட்சியாக மாற்றி, ஒன்றுக்கொன்று முரணான பொருளாதாரக் கொள்கைளை கடைப்பிடித்துக்கொண்டு மக்களின் அடிப்படைத் தேவைகளையே பெற்றுக்கொடுக்க முடியாமல் ஆட்சிசெய்வதை மக்களால் சகித்துக்கொண்டிருக்கத்தான் முடியுமா? எனவேதான் இன்றைய வெகுஜனக் கொந்தளிப்பும் ஆர்ப்பாட்டங்களும்.
பொருளாதாரக் கஷ்டங்கள்
நாட்டின் பொருளாதாரம் ஏன் நலிவடைந்துள்ளது, அதை எவ்வளவு விரைவில் அரசாங்கத்தால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும், அதற்காக அது என்ன வழிவகைகளைக் கையாள்கின்றது என்பன பற்றியெல்லாம் மத்திய வங்கியின் ஆளுனரும் அரசின் பொருளியல் ஆலோசகர்களும் மற்றும் விற்பன்னர்களும் புள்ளி விபரங்களுடனும் வரைபடங்களுடனும் ஊடகங்களில் விளக்குவதை சாதாரண பொதுமக்கள் விளங்கிக்கொள்ளாது இருக்கலாம். அவர்கள் அந்தச் சூட்சுமங்களையெல்லாம் விளங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. ஆனால் பொதுமக்களின் வீட்டுப் பொருளாதாரம் ஏன் சீரழிந்துள்ளது என்பதை அவர்களுக்கு யாரும் விளக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் அதை தினந்தினம் கண்காணித்துக்கொண்டுதான் வாழ்கின்றனர். அதற்குரிய காரணங்கள் மூன்றே மூன்றுதான் என்பதையும் அவர்கள் நன்றாக உணர்வர். செலவு அதிகரிக்கிறது, வருமானம் குறைகிறது, சிக்கனமாகச் செலவு செய்வதென்றாலும் சந்தையிலே பொருள்கள் தட்டுப்பாடாய் இருக்கின்றன. ஆகவே ஒன்றில் விலைவாசி குறைய வேண்டும், அல்லது வருமானம் பெருக வேண்டும். இரண்டுமே இல்லையென்றால் பொருள்களாவது தாராளமாகக் கிடைக்க வேண்டும். இந்த மூன்றுமே இல்லாததனால் பசியும் பட்டினியும் கடன் சுமையும் பல இலட்சக்கணக்கான குடும்பங்களை வாட்டி வதைக்கின்றன. இதனைத் தீர்ப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இன்றுள்ள சூழலில் அமைய வேண்டும். ஆனால் நடப்பதென்ன?
முரண்பட்ட கொள்கைகள்
அரசாங்கத்தின் முரண்பட்ட கொள்கைகளை இரண்டு உதராரணங்களைக்கொண்டு விளக்கலாம். ஒன்று இறக்குமதித் தடைகள், மற்றது ஆடம்பரமான செலவினங்கள். உள்நாட்டு உற்பத்தி பெருகி உணவுத் தேவைகளிலாவது நாடு தன்னிறைவு காண வேண்டுமென்ற கொள்கையை யாரும் குறைகூற முடியாது. அதற்காகத் திடீரென்று இரவோடிரவாக மஞ்சள் இறக்குமதியையும் இரசாயனப்பசளை இறக்குமதியையும் நிறுத்தியமை அரசாங்கத்தின் திட்டமிடப்படாத பொருளாதார நடவடிக்கைகளையே எடுத்துக்காட்டுகிறது. இத்தடைகளைச் சடுதியாக இல்லாமல் படிப்படியாக அமுல்படுத்த வேண்டும். உதாரணமாக, இரசாயனப்பசளை இயற்கைச்சூழலுக்குப் பங்கம் விளைவிக்கும் என்பதை விவசாய விஞ்ஞானிகளும் விற்பன்னர்களும் நீண்டகாலமாக வலியுறுத்தியுள்ளனர். இயற்கைப்பசளை அந்த விளைவுகளை மட்டுப்படுத்தும் என்பதையும் அவர்கள் எடுத்துக்காட்டினர். ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில் 1960களிலிருந்து அமெரிக்க இரசாயனத் தொழில்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுவகையான நெல், கோதுமை மற்றும் பல வகையான விதைத் தானியங்கள் இரசாயனப் பசளையையே உட்கொள்வனவாக அமைந்ததால் அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் இலாபமும் பெருகின. அத்துடன் தானிய உற்பத்தியும் பெருகின. இந்தப் பசுமைப் புரட்சியின் அரசியல் பின்னணியை விளக்குவதாயின் இக்கட்டுரை மிகவும் நீண்டு விடும். அது ஒரு சுவையான கதை. (எனது பல்கலைக்கழகப் பொருளியல் மாணவர்களுக்கு 1960, 1970களில் அதைப்பற்றிப் பல விரிவுரைகளை ஆற்றியுள்ளேன்). ஆனால் இரசாயனப்பசளையால் இயற்கையான மண்வளம் குன்றி சூழலும் மாசுபட்டதை இப்போதுதான் பல நாடுகள் உணர்கின்றன. இதில் உணரவேண்டிய முக்கியமான ஓர் உண்மை என்னவெனில் இன்று விதைக்கப்படும் தானியங்கள் எல்லாமே இரசாயனப்பசளைக்குத்தான் பொருத்தமானவையேயன்றி இயற்கைப் பசளைக்கல்ல. ஆகவே இயற்கைப் பசளைக்குப் பொருத்தமான விதை நெல்லை முதலில் அறிமுகப்படுத்தல்வேண்டும். அதற்கான ஆராய்ச்சியைச் செய்து புதிய விதை நெல்லை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் திடீரென பசளை இறக்குமதியைத் தடைசெய்ததால் இன்று விவசாயிகள் உரமின்றித் தவிக்கின்றனர். இதனால் விரைவில் நெல் உற்பத்தி வீழ்ச்சி காணலாம்.
அதேபோன்றுதான் அரசின் ஆடம்பரச் செலவினங்களும். உதாரணமாக, நூறு நகர்களை அழகுபடுத்தப் போவதாக பிரதம மந்திரி அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தார். வீடுகளிலே மக்கள் உணவின்றித் தவிக்கும் வேளையில் இந்தச்செலவு தேவைதானா? இந்தப் பிரதமர் மத்தள விமான நிலையம் போன்ற ஆடம்பரமான திட்டங்களில் நாட்டின் சொற்ப வருமானத்தை விரயமாக்கி நாட்டையே கடன் பளுவுக்குள் தள்ளியவர் என்பதை மக்களால் மறக்க முடியுமா? அதேபோன்று நாட்டின் கல்வித்தரம் மிகவும் மோசமான ஒரு தரத்தை பல வருடங்களாக அனுபவித்து வருகின்றது. ஒரு காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆசியாவிலேயே முதல் தரத்தில் நின்றது. இன்றோ இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் நகைப்புக்குரியதாகி விட்டது. இந்த நிலையில் இருக்கின்ற பல்கலைக் கழகங்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதைவிட்டு கொத்தலாவலை பாதுகாப்புத் துறைப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதன் அந்தரங்கமென்ன? இவையெல்லாம் இந்த அரசினரின் திட்டமிடப்படாத செற்பாடுகளையே எடுத்துக்காட்டுகின்றது. எனவேதான் ஆட்சி மாறவேண்டுமென மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியமை தவிர்க்கமுடியாத ஒன்று. ஆனால் ஆட்சி மாறினால் மட்டும் போதுமா?
ஆட்சிமாறினால் சுபீட்சம் வந்துவிடுமா?
ஆட்சி மற்றத்தைப் பற்றி இரண்டு முக்கிய கேள்விகள் எழுகின்றன. ஒன்று, யாரை புதிதாக ஆட்சியில் அமர்த்துவது? இரண்டாவது புதிய ஆட்சியாளர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள்? இன்றைய நிலையில், ஆட்சிக்குவரத் துடிக்கும் கட்சிகளுள் ஒன்றைத்தவிர மற்ற எல்லாமே இதற்குமுன் ஆண்டு தோல்வி கண்டவைகளே. ஐக்கிய தேசியக் கட்சியும், அதிலிருந்து பிரிந்து உருவாகிய ஐக்கிய மக்கள் சக்தியும், இலங்கை சுதந்திரக் கட்சியும் தனியாகவோ கூட்டாகவோ ஆட்சிசெய்து தோல்வி கண்டவையே. இன்று நாட்டைப் பீடித்துள்ள பல்வகையான பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் இவைகளிடம் ஏதாவது புதிய பரிகாரங்கள் உண்டா என்பது இதுவரை வெளியாகவில்லை. அதுமட்டுமல்ல, இன்று இந்த நாட்டைப் பீடித்துள்ள மிகக் கொடிய நோய் பௌத்த சிங்களப் பேரினவாதம். இது கொவிட் நோயைவிடக் கொடியது. அந்தப் பேரினவாதத்தை இந்தக் கட்சிகளுள் எவையாவது உதறித் தள்ளுமா என்பது சந்தேகமே. தேர்தலொன்று வரும்போது பேரினவாதிகளின் வாக்குகளுக்காக இக்கட்சிகள் யாவுமே மண்டியிடும் என்பது நிச்சயம். ஆகவே இவர்களுள் எந்தக் கட்சியையாவது தனித்தனியாகவோ கூட்டணியாகவோ ஆட்சியில் அமர்த்துவது பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாகவே முடியும்.
இந்த நிலையில் இவற்றைவிட்டும் வேறுபட்ட ஒரு கட்சியாகத் தோன்றுகிறது அன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் இன்றைய அவதாரமான தேசிய மக்கள் சக்தி. இது இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட ஒரு இளைய தலைமுறையினரின் கட்சி. இந்தக்கட்சி மட்டுமே சிங்கள பௌத்த பேரினவாதத்தை ஒழித்து மதங்களையும் இனங்களையும் அரசியல் பொருளாதாரக் கணிப்பீடுகளிலிருந்து தவிர்த்து ஆட்சியை இலங்கையர் என்ற ஒரு கோதாவுக்குள் நின்று நிறுவ முனைகிறது. கடந்த ஏழு தசாப்தங்களாக இனமும் மதமும் சேர்ந்து இந்த நாட்டை எவ்வாறு சீர்குலைத்துள்ளது என்பதை மேலும் விளக்கத் தேவையில்லை. இருந்தும் கடந்த காலத் தேர்தல் அனுபவங்களிலிருந்தும் இன்றைய கருத்துக் கணிப்பீடுகளிலிருந்தும் இந்தக் கட்சியின் மக்களுக்கிடையிலான செல்வாக்கு ஐந்து தொடக்கம் பத்து சதவீத்தைத் தாண்டவில்லை எனத் தெரிகிறது. அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு.
பிற்போக்குவாதிகளின் வலதுசாரிப் போர்
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் வலதுசாரிக் கும்பலின் சுரண்டல்களுக்குச் சாவுமணி அடிக்கும் என்பதனால் அந்தக் கட்சியை எவ்வழியிலாவது தோற்கடிப்பதில் இவர்கள் முன்னணி வகிக்கிறார்கள். அதற்காக, ரோகண விஜயவீரவின் தலைமையில் அன்று நடந்த கிளர்ச்சிகளையும் அதனாலேற்பட்ட அழிவுகளையும் வாக்காளர்கள் மத்தியில் ஞாபகப்படுத்தி வலதுசாரிப் பத்திரிகைகளும் ஊடகங்களும் ஒரு போராட்டத்தையே நடத்துகின்றன. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. அன்றைய கிளர்ச்சிகள் நடைபெற்றபோது இன்றைய மக்கள் சக்தியின் தலைமுறை பிறந்திருக்கவில்லை. அவ்வாறு சிலர் பிறந்திருந்தாலும் அவர்கள் குழந்தைகளாகவே இருந்திருப்பர். எனவே அன்று நடந்த தவறுகளுக்கு இன்றைய தலைமுறையை குற்றஞ் சாட்டுவது எவ்வழியிலும் பொருந்தாது. எனவே இன்றைய தலைமுறையினரின் செயற் திட்டங்களை மையமாகக்கொண்டே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளை எடைபோட வேண்டும். அவ்வாறு எடைபோட்ட பின்னும் இக்கட்சி தனியாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு சற்றேனும் கிடையாதென்பதை இக்கட்டுரை உணர்கிறது. ஆனால் மற்றைய கட்சிகளுக்குள் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து சிறுபான்மை இனங்களின் ஆதரவையும் இக்கட்சி பெறுமானால் ஒரு முற்போக்கான கூட்டணி ஆட்சியை அமைத்து இன்றைய பிரச்சினைகளுக்கு ஒரு மாற்று வழியை நிச்சயம் காணலாம் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் அது இலகுவானதல்ல. ஆகக் குறைந்தது இக்கட்சி தக்க பலத்துடன் வலது சாரிகளுடன் பேரம்பேசும் ஒரு சக்தியையாவது கொண்டிருக்குமானால் அது நாட்டுக்கும் நல்லது. சிறுபான்மை மக்களுக்கும் சிறந்தது. இந்த அடிப்படையில் சில விடயங்களை முஸ்லிம் வாசகர்களுக்கு இக்கட்டுரை உணர்த்த விரும்புகிறது.
முஸ்லிம்களும் முற்போக்குச் சக்திகளும்
எந்தக் காலத்திலுமே இலங்கை முஸ்லிம்கள் எந்தவொரு முற்போக்குள்ள இடதுசாரிக் கட்சிகளையும் தேர்தல் காலங்களில் ஆதரிக்கவே இல்லை. இக்கட்சிகளெல்லாம் மத நம்பிக்கையற்ற நாத்திகக் கட்சிகளென்ற கொள்கையினாலும் வியாபாரிகளின் வர்த்தக நலன்களுக்குப் பாதகமானவை என்ற முட்டாள்தனமான வாதத்தினாலும் எப்போதும் வலதுசாரிகளையே ஆதரித்து வந்துள்ளனர். அனால் இன்றுள்ள நிலையில் அக்கட்சிகளெல்லாமே பௌத்த பேரினவாத்தின் அடிவருடிகள் என்பதை முஸ்லிம்கள் மறத்தலாகாது. அதுமட்டுமல்ல, இன்றைய முஸ்லிம் சமூகத்துக்கும் அன்றைய சமூகத்துக்குமிடையே ஒரு முக்கிய வேறுபாடுண்டு. அதுதான் புதிதாக உருவாகியுள்ள புத்திஜீவிகள் நிறைந்த ஒரு சமூகமாக முஸ்லிம்கள் மாறியுள்ளமை. அதனுள் ஆண்களும் பெண்களும் அடங்குவர். இவர்களின் தலைமைத்துவத்தின்கீழ் முஸ்லிம்கள் அரசியலை அணுகாவிட்டால் எதிர்காலம் இருள் படிந்ததாகவே இருக்கும். அதற்கு முதற்படியாக இன்றுள்ள இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும். அவற்றின் அங்கத்தவர்களின் நடத்தையும் சுயநலப்போக்கும் பல அசிங்கங்களை முஸ்லிம்களுக்குத் தேடிக்கொடுத்துள்ளன. இந்தத் தலைவர்கள் எந்தக் கட்சியில் முஸ்லிம்களின் வாக்குகளைத் தேடினாலும் அவர்களை தோற்கடிக்கச் செய்வது முஸ்லிம்களின் கடமையாகி விட்டது.
முஸ்லிம்களும் தமிழினமும் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதுடன் அக்கட்சியும் ஏனைய சிங்கள மக்களின் முறபோக்குவாதிகளின் ஆதரவுடன் ஒரு பரவலான கூட்டணியை அமைக்க முடியுமானால் அது ஒரு பலமுள்ள சக்தியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து வலதுசாரிப் பிற்போக்குவாதத்தின் வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாக அமையலாம். இதைத்தானும் சிறுபான்மையினர் உணரவில்லையென்றால் அவ்வினங்களின் எதிர்காலம் பரிதாபமாக அமையும். முஸ்லிம் புத்திஜீவிகள் இந்த ஆலோசனையைப் புறந்தள்ளாது சீர்தூக்கிப்பார்ப்பது அவசியம். ஆட்சி மாறுவது முக்கியமல்ல. அது எவ்வாறு மாறி யார் கையில் செல்லவேண்டும் என்பதே முக்கியம். நாடு ஒரு புதிய பாதையில் செல்ல வேண்டியுள்ளது. முஸ்லிம் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் இக்கருத்தை புறக்கணிக்கமாட்டார்களென இக்கட்டுரை எதிர்பார்க்கிறது.- Vidivelli