முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய சிறுமி இஷாலினி தீக் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்தும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் விடயங்கள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் நாடளாவிய ரீதியில் துஷ்பிரயோகங்களால் பாதிப்பட்ட சிறுமிகளின் உரிமைகள் தொடர்பில் கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வரும் பெண் செயற்பாட்டாளர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை எவ்வாறு அணுக வேண்டும் என கேட்டோம். அவர்கள் வழங்கிய பதில்களை வாசகர்களுக்காக இங்கு தொகுத்து தருகிறோம்.
நேர்காணல் :
எம்.ஏ.எம். அஹ்ஸன்
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திருப்பப்படுவது கவலைக்குரியது – மனித உரிமைகள் ஆர்வலர் ஷ்ரீன் ஸரூர்
இஷாலினி மர்மமான முறையில் மரணித்த விவகாரம் முழுமையாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திருப்பப்படுகின்றது. குறித்த சிறுமி தொடர்பான விடயத்தில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றவாளிகளாக இனங்காணப்படும் பட்சத்தில் கண்டிப்பாக நீதிக்கு முன் நிறுத்தி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் ரிஷாத் பதியுதீன் என்கின்ற தனிநபர் ஒரு முஸ்லிம் என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் இந்த விடயத்துடன் தொடர்புபடுத்தி பழி சொல்வது அநாவசியமான ஒன்றாகும்.
முஸ்லிம் சமூகம் மீது இஸ்லாமோபோபியாவை பிரயோகித்தல் மற்றும் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்துதல் மூலமே காலங்காலமாக இலங்கையில் அரசியல் நடக்கின்றது. தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்தியே அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இப்போது மலையக மக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது பிரித்தாளும் கொள்கையை பிரயோகிக்கவே தற்போது அரசாங்கம் முனைகிறது.
இந்த துஷ்பிரயோக விவகாரம் மற்றும் இதையொத்த ஏனைய சிறுவர் விவகாரங்களை சீராக வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு 31 பொது சமூக அமைப்புகளின் சார்பாக நாம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம்.
இலங்கையின் 1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க பெண்கள் மற்றும் இளம் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துதல் சட்டத்திற்கு அமைவாக பொது நன்மைக்காக 16 வயதுக்கு மேற்பட்டதும் 18 வயதுக்கு இடைப்பட்டதுமான ஆட்களை தொழில் ஆணையாளருக்கு அவசர நிலை தொடர்பாக அறிவித்த பின்னரே தொழிலுக்கு அமர்த்த முடியும். பாடசாலைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்த முடியாது என்றும் குறித்த சட்டம் தெளிவாகக் கூறுகின்றது.
இந்நிலையில் சட்டத்தினை இயக்கும் பொறுப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இவ்வாறு சட்டத்திற்கு மாற்றமான ஒரு விடயம் நிகழ்ந்திருப்பதானது எமது நாட்டின் அரசியல்வாதிகளின் சீரற்ற நிலைமையை எடுத்துக்காட்டுகின்றது. என்றபோதிலும் இந்த விவகாரத்தை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திருப்புவது ஆரோக்கியமான ஒன்றல்ல. ஏனென்றால் மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ இஷாலினிகள் இருக்கிறார்கள். பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகின்றார்கள். அவை அனைத்தையும் மறக்கடித்து இந்த விடயத்தை மாத்திரம் மெருகூட்டுவது ஏற்க முடியாத ஒன்றாகும்.
பண வீக்கம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு என்பவற்றால் இந்த அரசாங்கம் பாரிய தோல்விகளை சந்தித்து வருகின்றது. குறித்த தோல்விகளை மறைத்து அடுத்த தேர்தலிலும் தம்மை தக்க வைத்துக்கொள்ள இஸ்லாமோபோபியா எனும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை இந்த அரசாங்கம் மேற்கொள்கின்றது என்றே பார்க்க வேண்டியுள்ளது. மேலும் சிறுவர்களை பாலியல் தொழிலுக்கு விற்கும் நாடுகளில் முதன்மையான ஒரு நாடாகவே இப்போதுவரை இலங்கை இருக்கிறது.
எனவே குறித்த சிறுமியின் மரணத்திற்கும் அதனோடு தொடர்புடைய ஏனைய உரிமை மீறல் குற்றங்களுக்கும் தகுந்த வகையில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறித்த விசாரணைகளை சட்டத்தினை அமுல்படுத்தும் தரப்பினர் பக்கச்சார்பின்றியும் உயிரிழந்த சிறுமியின் சுயகௌரவம் பாதிக்காத வகையிலும் எந்தவொரு பின்புல அழுத்தங்களையும் பொருட்படுத்தாது நடத்தவேண்டும்.
மலையகத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடாக காட்ட முயற்சிக்கின்றனர் – பெண் உரிமை செயற்பாட்டாளர் பிஸ்லியா பூட்டோ
ரிஷாட் பதியுதீன் என்ற கதாபாத்திரத்தை வைத்துத்தான் ஆரம்பத்தில் முஸ்லிம் சமூகத்தை தீவிரவாத சமூகமா
க சித்திரிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றன. இப்போது அதே நபரை முன்வைத்து முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்ற நிலைப்பாட்டினையும் கொண்டு வர ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. இப்போது வன்முறைச் சம்பவம் ஒன்றின் சூத்திரதாரிகளுக்கு முஸ்லி
ம் சமூகம் ஒத்துழைப்பு வழங்கி நடந்த விடயங்களை மூடி மறைக்க முயற்சிக்கிறது என்ற மாயையில் ஏனைய சமூகங்கள் இருக்கும் நிலைக்கு முஸ்லிம் சமூகம் ஆளாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும், சிறுவர்களுக்கு எதிராக 63 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜூலை மாதம் மட்டும் இஷாலினியின் சம்பவம் உள்ளடங்கலாக மொத்தம் சிறுவர்களுக்கெதிரான 6 வன்முறைச் சம்பவங்கள் ஊடகங்களில் பதிவாகியிருந்தன. இவை அனைத்தையும் மறக்கடித்து இஷாலினியின் துஷ்பிரயோக சம்பவத்தை மாத்திரம் சில ஊடகங்கள் குறி வைத்து இனவாதத்தை பரப்புகின்றன.
இவ்வாறான இனவாத பிரசாரங்களுக்கு தீனி போடும் வகையில் ரிஷாட் பதியுதீன் என்ற கதாபாத்திரத்தின் ஆதரவாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி தொடர்பாகவும் அவரது குடும்பம் தொடர்பாகவும் மிக மோசமான விடயங்களை சமூக ஊடகங்களில் எழுதிக்கொண்டும் வருகின்றார்கள். இந்த விடயத்தை ஒரு சிறுமிக்கு நடந்த துஷ்பிரயோகமாக பார்க்க யாரும் தயாரில்லை. மலையகம் மற்றும் முஸ்லிம் சமூகம் என்ற இரு வேறு கண்ணோட்டத்தில் பார்க்கவே எண்ணுகிறார்கள். அவ்வாறு சித்திரிக்கவே ஊடகங்களும் அரசாங்கமும் விரும்புகின்றன.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிறுபான்மையினரை வன்முறையாளர்களாக காட்டவே விரும்புகிறார்கள். இஷாலினி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு சிறுமி ஆவார். என்றபோதிலும் பெரும்பான்மையின மற்றும் மலையக அரசியல்வாதிகள் கூட அரசியல் இலாபம் ஈட்டுவதற்கான சந்தர்ப்பமாகவே இந்த விடயத்தைப் பார்க்கிறார்கள். அவ்வாறே கருத்துக்களையும் வெளியிடுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு எப்போதும் பாரபட்சம் காட்டப்படுவது யாவரும் அறிந்த உண்மை. பயங்கரவாத தடைச்சட்டமும் அவர்கள் மீது மாத்திரமே பாய்கிறது. அந்த வகையில் முஸ்லிம்களை வன்முறையாளர்கள் என்று காட்டுவதற்கான அரசியல் நாடகமாகவே இந்த விடயத்தை பார்க்கத் தோன்றுகிறது.
இனவாத கண்ணோட்டத்தில் அணுகுவது தவறு – சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்
மலையகத்தில் இருந்து சிறுவர்களை நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வேலைக்கு அமர்த்துவதும், இப்படி அமர்த்தப்படுபவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும், சம்பளம் வழங்கப்படாமல் வைத்திருப்பதும் இது முதல் தடவை அல்ல. எனவே இந்த விடயத்தை முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பிரச்சினையாக திருப்பி இனவாத அரசியல் செய்பவர்களின் நோக்கத்திற்கும் இஷாலினிக்கு நீதி கோருகின்றவர்களின் நோக்கத்திற்குமிடையில் பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன, இருக்கவும் வேண்டும்.
மலையகத்தில் இருந்து வேலைக்கு அமர்த்தப்படும் பிள்ளைகள் முஸ்லிம் சமூகத்தவரின் வீடுகளில் மாத்திரம் வேலைக்கு அமர்த்தப்படுவது இல்லை. நகர்ப்புறங்களில் அனைத்து இன மக்களின் வீடுகளிலும் இவ்வாறு பிள்ளைகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அங்கும் துஷ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன.
மலையக மக்களை ஆரம்பத்தில் இருந்தே வறுமை என்ற குழியினுள் வைத்திருக்கிறோம். இந்த நிலைமைக்கு தமிழ், முஸ்லிம், சிங்களம் என நாங்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டியவர்கள். இதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும். எனவே இந்த விடயத்தை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவது எந்தவித பயனையும் தராது. இனவாதிகளுக்குதான் அது அதீத பயனைத் தரும்.
ஏன் இஷாலினி போன்ற சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அனுப்பப்படுகின்றார்கள்? ஏன் இவர்கள் பாடசாலை கல்வியை முடிப்பதில்லை ? பெற்றோர்கள் இவ்வாறு பிள்ளைகளை அனுப்புவதற்கு காரணம் என்ன ? ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை கூட இன்று முறையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கமுடியாமல் உள்ள நிலையில், மலையக பாடசாலைகளுக்கு வளங்கள் இல்லாத நிலையில், வறுமையின் மத்தியிலும் பிள்ளைகளுக்கு பாடசாலை கல்வியை முடிக்க ஊக்குவிப்புகளை அரசாங்கம் வழங்காத நிலையில், இதற்கு மேல் அடைக்க முடியாத கடன்களினால் இக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிள்ளைகள் இவ்வாறு வேலைக்கு அனுப்ப படுகின்றார்கள்.
வேலைக்கு அனுப்பப்படுவது பிள்ளைகள் என்பதால் சிறுவர் பாதுகாப்பு அரசாங்க உத்தியோகத்தர்கள் குறைந்த பட்சம் இந்த பிள்ளைகளை கட்டாய கவனிப்பிற்கு கீழ் கொண்டுவருவதும் இல்லை. வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் மலையக சிறுவர்களின் பிரச்சினைகளை பல கோணங்களில் அணுகி தீர்வைத் தேடலாம். இதை விடுத்து இதை இனவாதத்துடன் அணுகுவோருக்கு இஷாலினிக்கோ அவரை போன்ற ஏனைய சிறுவர்களுக்கோ நியாயம் கிடைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. இதே போன்று பாதிக்கப்பட்ட இஷாலினியையும் அவரது குடும்பத்தினரையும் சமூக வலைத்தள கூண்டுகளில் ஏற்றி அவர்களது நடத்தையை பற்றி விமர்சிப்பவர்களையும் நாம் வன்மையாக எதிர்க்க வேண்டும்.
அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்- சட்டத்தரணி ரனித்தா மயூரன்
தற்போது இடம்பெற்றுள்ள துஷ்பிரயோக சம்பவம் தீர விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அத்துடன் வழங்கப்படும் தீர்ப்பு இந்த துஷ்பிரயோகத்திற்கு மட்டுமான தீர்வாக இருக்கக் கூடாது. நாட்டின் பல்வேறு பாகங்களில் இது போன்ற எத்தனையோ இஷாலினிகள் இருக்கிறார்கள், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான தீர்ப்பாக இந்தத் தீர்ப்பு அமைய வேண்டும். அதற்கு கொள்கை மற்றும் சட்ட ரீதியாக இந்த விடயம் மாற்றப்பட வேண்டும்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வீட்டு வேலைகளுக்கு செல்பவர்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சம்பள விவகாரங்கள் போன்ற விடயங்களை கண்காணிக்க அல்லது அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவென்று போதியளவு சட்ட வரைபுகள் இலங்கையில் இல்லை. இவ்வாறான விடயங்கள் தொடர்பாக கொள்கைகள் அல்லது சட்டங்களை ஏற்படுத்த இந்த வழக்கிற்கு வழங்கப்படும் தீர்ப்பினை பயன்படுத்த முடியுமாக இருந்தால் மக்களும் இணைந்து அதற்காக உழைக்க வேண்டும்.
இலங்கையிலுள்ள ஒவ்வொருவரும் 16 வயது வரை பாடசாலைக் கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இந்த விடயத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரிகள் தமது கடமையை சரியாக செய்திருந்தால் இன்று இப்படியொரு பிரச்சினை வந்திருக்காது.
ஒரு பாடசாலை மாணவர் தான் கல்வி கற்கும் பாடசாலையை விட்டு இடையில் விலகும்போது குறித்த மாணவரின் குடும்பத்தை அணுகி மீண்டும் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அந்த பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் அந்த பாடசாலை சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கும் இருக்கிறது. பிரதேச செயலக மட்டத்தில் கோட்டக் கல்விக் காரியாலயம், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், தேசிய சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் போன்ற அதிகாரிகளுக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இவர்கள் சரியான முறையில் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை செய்திருக்க வேண்டும்.
இஷாலினி போன்ற பாதிக்கப்படும் சிறுமிகளின் விடயத்தில் குறித்த அதிகாரிகள் பொறுப்பாக நடப்பார்கள் என்றால் இத்தகைய சம்பவங்கள் நடைபெற வாய்ப்புக்கள் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்த அதிகாரிகளும் தமது கடமையை உரிய முறையில் செய்கின்றார்களா இல்லையா என்பதனை கண்காணிப்பதற்கு உரிய கண்காணிப்பு பொறிமுறை நிறுவப்பட வேண்டும். பொறுப்புடன் செயற்பட தவறும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றத்திற்காக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். இதனூடாக இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க முடியும். – Vidivelli