குற்றச்சாட்டுகளின்றி 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட வேண்டும்
11 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக தெரிவிப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விரைவாக விடுதலைசெய்யும் அதேவேளை, அச்சட்டத்தை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை, உறுப்புரை 19, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, பிரஜைகளின் பங்களிப்பிற்கான உலகளாவிய கூட்டணி, முன்னிலை பாதுகாவலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் செயற்திட்டம், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு, அனைத்து விதங்களிலுமான அடக்குமுறைகள் மற்றும் இனவாதத்திற்கு எதிரான சர்வதேச முன்முயற்சி, இலங்கையிலுள்ள சர்வதேச செயற்பாட்டாளர்கள், உண்மைக்கும் நீதிக்குமான இலங்கையின் செயற்திட்டம் ஆகிய 11 அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:
இலங்கையின் பிரபல சட்டத்தரணியும் சிறுபான்மை மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சுமார் 15 மாதகாலமாக மிக மோசமான பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை எமக்குப் பெரிதும் விசனமளிக்கின்றது. நீதிமன்றத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக நம்பத்தகுந்த ஆதாரங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், அவர் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்த இன்ஸாப் அஹமட் என்பவருக்கு உதவியதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது பொலிஸாரால் ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களில் பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகக் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின்படி, அவர் இனங்களுக்கிடையிலான அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தளத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் சிறுவன் ஒருவரால் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டே மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட அதேசமயத்தில் வேறு சிறுவர்களிடமும் அதே அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் பொய்யான வாக்குமூலங்களை வழங்குமாறு அந்த அதிகாரிகள் தம்மை வற்புறுத்தியதாக அவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் தொடர்ச்சியாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் எவற்றுக்கும் நியாயமான ஆதாரங்கள் இல்லை என்றே எமக்கு எண்ணத் தோன்றுகின்றது.
ஒருவர் இன, மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டாலோ அல்லது அத்தகைய சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கான எண்ணப்பாட்டைக் கொண்டிருந்தாலோ அல்லது அத்தகைய சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ அவரைக் கைது செய்து தடுத்துவைப்பதற்கான வாய்ப்பை பயங்கரவாதத் தடைச்சட்டம் வழங்குகின்றது. எனினும் கடந்த காலங்களில் அந்தச் சட்டமானது, ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைத் தண்டிப்பதற்கும் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதற்கும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அவரது கருத்துக்கள் மூலமாக அரசாங்கத்தை விமர்சித்துவந்த ஒருவராவார். இலங்கையில் இன, மதரீதியான சிறுபான்மையின சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துவந்த காலப்பகுதியில் அவர் சிறுபான்மையின உரிமைகளுக்காகப் போராடினார். அதுமாத்திமன்றி கடந்த 2018 ஆம் ஆண்டில் சட்டவிரோதமான முறையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோது, உயர்நீதிமன்றத்தில் அதனை சவாலுக்குட்படுத்திய சட்டத்தரணிகளில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் ஒருவராவார். எனவே தற்போது வரை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இலங்கை அதிகாரிகளால் எந்தவொரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கமைய அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்காகவே அவர் இலக்குவைக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகின்றது. எனவே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மீளப்பெறப்படுவதுடன் அவர் உடனடியாக விடுதலைசெய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டதிலிருந்து சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு அமைவான நடைமுறைகளைப் பின்பற்றுவதென்பது தொடர்ச்சியாக மறுதலிக்கப்பட்டது. குறிப்பாக அவர் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் என்னவென்பது அவருக்குக் கூறப்படவில்லை. அத்தோடு பிணைக்கோரிக்கையை முன்வைக்க இயலாத வகையில் நீதிமன்ற மேற்பார்வையின்றி அவர் நீண்டகாலத்திற்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அனுமதியளிக்கப்படும் வரையில் அவரது சட்டத்தரணிகளுடன் தனியாகக் கலந்துரையாடுவதற்குக்கூட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த பெப்ரவரி மாதம் அவர்மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே சுமார் 10 மாதகாலத்திற்குப் பின்னர் முதற்தடவையாகக் குடும்பத்தினரைச் சந்திக்கும் வாய்ப்பு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்குக் கிடைத்தது. இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயச்சட்டத்தின் 9 ஆவது உறுப்புரையின் பிரகாரம், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு நபருக்கும் அவரது குடும்பத்தினரையும் சட்டத்தரணிகளையும் சந்திப்பதற்கான உரிமை இருக்கின்றது.
இலங்கையின் மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பலரில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் ஒருவராவார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடந்த 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கையின்படி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் பெருமளவான கைதிகள் 15 –- 20 வருடங்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது கைதிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி என்பதுடன் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயச்சட்டத்தின் 9 ஆம் மற்றும் 14 ஆம் உறுப்புரைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் நியாயமான விசாரணைகளுக்கு உட்படுவதற்கான உரிமை ஆகியவையும் இதன்மூலம் மீறப்படுகின்றன. அத்தோடு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ கைதுசெய்யப்பட்டிருக்கும் அநேகமானோர் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் முறையற்ற விதங்களிலும் நடத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதாக வழங்கிய வாக்குறுதிக்குப் புறம்பாக, தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கு வாய்ப்பளிக்கும் இச்சட்டத்தை இலங்கை தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றமை பெரிதும் விசனமளிக்கின்றது. எனவே தற்போது பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யும் அதேவேளை, அவர்கள் நியாயமான விசாரணைகளுக்கு உட்படுவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். மேலும் சர்வதேச ரீதியில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு உட்படாதவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் தனிப்பட்ட முறையில் அவர்களது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுவதற்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
அடுத்ததாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் அதன் பயன்பாட்டையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும். மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்கள் அதற்கான தீர்வையும் இழப்பீட்டையும் உரியவாறு பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Vidivelli