நிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி
இலங்கைக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்கிறது அரச ஹஜ் குழு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரேபிய ஹஜ், உம்ரா அமைச்சு உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நிபந்தனைகளின் கீழ் இவ்வருடம் உம்ரா யாத்திரைக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்நிலையில் உம்ரா யாத்திரைக்கான அனுமதி இதுவரை இலங்கைக்கு வழங்கப்படவில்லை எனவும் அதனால் மக்கள் உம்ரா யாத்திரைக்கென முகவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாமெனவும் அரச ஹஜ் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு முகவர்களுக்கு பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டால் அரச ஹஜ் குழுவினரால் அவ்வாறான முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது போகலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையில், ‘உம்ரா யாத்திரையை ஏற்பாடு செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இதுவரை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. அதனால் உம்ரா பயணத்தை ஏற்பாடு செய்வதாகக் கூறி முகவர்களால் மக்களிடமிருந்து பணம் அறவிடவும் முடியாது.
சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு இலங்கையர்களுக்கு உம்ரா யாத்திரைக்கான அனுமதியை வழங்கினால் அரச ஹஜ் குழு பொதுமக்களை தெளிவுபடுத்தும். அது தொடர்பில் அறிவிக்கும். அதுவரை முகவர்கள் மக்களிடமிருந்து உம்ரா யாத்திரைக்கென பணம் அறவிடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு ஹஜ் குழுவின் அனுமதியின்றி அறவிடுவது சட்டவிரோதமாகும். உம்ரா யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் அரச ஹஜ்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்’ எனக் கூறினார்.
இதேவேளை உம்ரா விசா ஹிஜ்ரி வருடம் 1443 துல்ஹிஜ்ஜா பிறை 15லிருந்து 1443 ஷவ்வால் பிறை 15 வரை விநியோகிக்கப்படும் என சவூதி அரேபிய ஹஜ், உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது. உம்ரா பயணிகள் 1443 முஹர்ரம் பிறை 1 முதல் 1443 ஷவ்வால் பிறை 30 வரை சவூதி அரேபியாவுக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு மொரோக்கோ, டியுனிசியா, அல்ஜீரியா, லிபியா, சூடான், ஜோர்தான், மயுரிடானியா, பலஸ்தீன், ஈராக், யெமன், ஓமான், பஹ்ரைன், கட்டார், பெல்ஜியம், கனடா, நெதர்லாந்து, ஸ்பெயின், அவுஸ்திரியா, மலேசியா, தாய்லாந்து, பர்னாவி, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு உம்ராவுக்கான அனுமதியினை வழங்கியுள்ளது.
சவூதி அரேபிய சுகாதார அமைச்சு ஏனைய நாடுகளின் கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையை மதிப்பீடு செய்து அதனடிப்படையில் யாத்திரைக்கான அனுமதியினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
மற்றும் உம்ரா யாத்திரிகர்கள் பய்சர் (Pfizer), மொடர்னா, அஸ்ட்ராசெனெகா அல்லது ஜோன்ஸன் அன்ட் ஜோன்ஸன் தடுப்பூசிகள் ஏதேனுமொன்றில் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சைனாபாம் தடுப்பூசி இரண்டு டோஸ்களை ஏற்றியுள்ளவர்கள் தடுப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதற்காக மேற்குறிப்பிட்ட தடுப்பூசிகளில் ஒன்றினை ஏற்றியிருக்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்துள்ளது.
உம்ரா பயணிகளுக்கான சவூதி அரேபியாவின் நிபந்தனைகள்
* உம்ரா விசா ஹிஜ்ரி வருடம் 1443 துல்ஹிஜ்ஜா பிறை 15 லிருந்து 1443 ஷவ்வால் பிறை 15 வரை விநியோகிக்கப்படும்.
* உம்ரா யாத்திரிகர்கள் 1443 முஹர்ரம் பிறை 1 முதல் 1443 ஷவ்வால் பிறை 30 வரை சவூதி அரேபியாவுக்கு அனுமதிக்கப்படுவர்.
* ஆகக்கூடியது 25 யாத்திரிகர்களுக்கே ஒரு பஸ்ஸில் பயணிக்க முடியும்.
* ஹோட்டல் அறையொன்றில் ஆகக்கூடியது இருவருக்கே தங்க முடியும்.
* உம்ராவுக்கு அனுமதிக்கப்படும் நாடுகள் மற்றும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
* யாத்திரிகர்களின் ஆகக் குறைந்த வயதெல்லை 18 ஆகும்.
* யாத்திரிகர்கள் முழுமையாக கொவிட் 19 தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பது கட்டாயமாகும்.
* சவூதி அரேபியாவினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சியாக அதற்கான அட்டையை வைத்திருக்க வேண்டும்.
* யாத்திரிகர்கள் e–விசா பெற்றுக்கொள்வதற்கு முன்பு தங்கள் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட வைத்திய நிலையமொன்றிலிருந்து வைத்திய மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றிருக்க வேண்டும்.- Vidivelli