மலையகத்தின் டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான இஷாலினி எனும் சிறுமி கொழும்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி வந்த நிலையில் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணித்த சம்பவம் பாரிய சலசலப்புகளைத் தோற்றுவித்துள்ளது. குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடாத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் குறித்த சிறுமியின் மரணத்தில் நிலவும் சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் இரண்டாவது தடவையாகவும் பிரேத பரிசோதனை நடாத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்றைய தினம் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
உயிரிழந்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்படுவதுடன் இச் சம்பவத்தின் உண்மையான பின்னணி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
எனினும் இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் இன, மத முரண்பாடுகளைத் தூண்டுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வருவது கவலைக்குரியதாகும். குறிப்பாக இந்த விவகாரத்தை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்க சில சக்திகள் மறைமுகமாக செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் இவ்வாறான பல இன முறுகல்களைத் தோற்றுவித்து அரசியல் நலன்களையடைந்த குழுவினரே தற்போதும் இந்த விடயத்தில் குளிர்காய முற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை இலகுவில் மறுதலிக்க முடியவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரை சிறுவர் துஷ்பிரயோகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையே புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அண்மையில் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் தேவைகளுக்காக அவரது தாயாராலேயே விற்பனை செய்யப்பட்டமை மற்றும் 13 வயது சிறுமி ஒருவர் அவரது தந்தை உள்ளிட்ட பலரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இலங்கையில் வருடாந்தம் சுமார் 8500 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அறிக்கையிடப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறுகிறது. 2020 ஆம் ஆண்டு கொவிட் 19 அச்சுறுத்தலால் நாடு முடக்கப்பட்டிருந்த போதிலும் கூட 8165 சம்பவங்கள் பதிவானதாக அதிகார சபையின் தரவுகள் கூறுகின்றன. இந்த வருடத்தின் முதல் அரையாண்டில் மாத்திரம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு துஷ்பிரயோகங்கள் தொடர்பான 4000 தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
நாட்டில் சிறுவர்களின் பாதுகாப்பு இவ்வாறு மிக மோசமடைந்து செல்கின்ற நிலையில் இதற்கு எதிராக நாம் அனைவரும் இன, மத வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமே தவிர இதனையும் இன மத மோதலுக்கான கருவியாகப் பயன்படுத்தி விடயத்தின் பாரதூரத்தை திசை திருப்ப முனையக் கூடாது.
எல்லா சமூகங்களையும் சேர்ந்த சிறுவர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதேபோன்று குற்றவாளிகளும் எல்லா சமூகங்களிலும்தான் இருக்கின்றார்கள். இந் நிலையில் இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு குற்றவாளிகளுக்கு எதிராக போராட வேண்டுமே தவிர நமக்குள் முரண்பாடுகளை வளர்ப்பது ஆரோக்கியமானதல்ல.
எளவேதான் சிறுமி இஷாலினி விவகாரத்தில் மாத்திரமன்றி சகல சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த போராட வேண்டும். சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வர வேண்டும். அதனைவிடுத்து உணர்ச்சிவசப்பட்டு தீய அரசியல் சக்திகளின் வலைகளில் சிக்கி இன மத முரண்பாடுகளுக்கு வித்திடக் கூடாது என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli