கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ராஜபக்ஷ அரசு மாடறுப்புக்குத் தடைவிதித்து அதனை அமுல்படுத்த உள்ளூராட்சி மன்றங்களையும் நியமித்துள்ளது. ஆனால் இதுவரை இத்தடை சட்டமாக்கப்படவில்லை. ஆகவே சட்டமாக்கப்படாத ஒன்றை ஒரு பிரதமர் அமுல்படுத்த முடியுமா? இதுதான் ஜனநாயகமா? இதனைப்பற்றி சட்டவல்லுனர்கள் சிந்திக்கவேண்டும். இதற்கு நீதித்துறை வழியாகப் பரிகாரம் உண்டா?
ஆனால், அதைவிடவும் முக்கியமான ஒரு விடயம் என்னவெனில், அந்தத் தடையைத் தொடர்ந்து வக்பு சபையும் பள்ளிவாசல் காணிகளில் ஆடு மாடுகள் அறுப்பதை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளது. முதலாவதாக, மாடறுப்புத் தடை எப்போதோ இந்த அரசினால் முன்னெடுக்கப்பட்டு, அதனால் எழும் பொருளாதாரப் பிரச்சினைகளைப்பற்றி கால்நடை வளர்ப்பு வல்லுனர்களும் பொருளியலாளர்களும் எடுத்து விளக்கியதன் பின்னர் அதனை அமுல்படுத்துவதில் இன்றுவரை தாமதமாக இருந்துவிட்டு இப்போது மறுபடியும் சடுதியாக அந்தத்தடையை கொண்டுவந்ததன் இரகசியம் என்ன? இதன் அரசியல் பின்னணியை விளங்கவேண்டியுள்ளது. அதற்குமுன்னர், வக்பு சபையின் கட்டளையைப்பற்றியும் அச்சபையின் தூரநோக்கற்ற முடிவுகளைப்பற்றியும் வாசகர்கள் அறிதல் வேண்டும்.
சில முஸ்லிம் பகுதிகளில் பள்ளிவாசல் காணிகள் மாட்டுத் தொழுவங்களாகவும் இறைச்சிக் கிடங்குகளாகவும் மாறியுள்ளன என்ற உண்மை வக்பு சபையினருக்கு எப்போது தெரியவந்தது? ராஜபக் ஷவின் தடைக்குப் பின்னரா? அதற்கு முன்னரா? முன்னரே தெரிந்திருந்தால் ஏன் அச்சபை இதுவரை இப்பிரச்சினையைப்பற்றி மௌனமாக இருந்தது? பின்னர்தான் தெரியவந்ததென்றால் இச்சபையின் பொடுபோக்குத் தனமான நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் தடையுத்தரவுக்குப் பணிந்தே இச்சபை இப்போது இத்தடையை விதித்துள்ளது. இல்லாவிடின் இப்பிரச்சினையைப்பற்றி அது சிந்தித்தும் இருக்காதென்பது தெளிவாகவில்லையா?
பள்ளிவாசல் நிலங்கள் பிற மதத்தினரின் வணக்கஸ்தல நிலங்களைப்போன்று புனிதமானவை. அவற்றை தினந்தோறும் சுத்தப்படுத்தி அழகுபடுத்துவது இறைவனது தலத்துக்கு மனிதர்கள் செய்யவேண்டிய கடமை. அதைவிடுத்து அந்தக் காணிகளை மாட்டுத் தொழுவங்களாக கசாப்புக் கடைக்காரர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்துவது இறைவனை அவமதிக்கும் ஒரு செயல் என்பது ஒரு புறமிருக்க, அதனால் மாசுபடுத்தப்படும் சுற்றச்சூழலைப் பொறுக்க முடியுமா? எனவே இந்தத் துஷ்பிரயோகத்தை எப்போதோ வக்பு சபையும் ஜமியத்துல் உலமாவும் தலையிட்டுத் தடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து இப்போது அரசாங்கத்தின் தடைக்குப்பணிந்து வக்பு சபை இக்கட்டளையைப் பிறப்பித்தது முஸ்லிம் தலைமைத்துவத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். இதுதான் முஸ்லிம் சமூகத்தின் ஒரு நிரந்தரப் பிணியாக மாறியுள்ளது. சமூக நடைமுறைகளில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களை தாமாகவே உணர்ந்து செய்யாமல் இன்னொருவருடைய கண்டனங்களுக்கும் அழுத்தங்களுக்கும் பயந்து மேற்கொள்வதால் முஸ்லிம் சமூகம் நாட்டின் நன்மையைக்கருதி தாமாக முன்வந்து செயற்படாமல் மற்றவரின் வற்புறுத்தலாலும் எதிர்ப்பினாலும் செயற்படும் ஓர் இனமாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்குச் சிறந்த இன்னோர் உதாரணம் ஒலிபெருக்கியில் தொழுகைக்காக அழைப்பது. அந்த ஒலி பள்ளிவாசல்களுக்கு அண்மையில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் சில சமயங்களில் முஸ்லிம்களுக்கும்கூட பிரச்சினையாக அமையும் என்பதை உணர்ந்து பள்ளிவாசல் நிர்வாகிகள் தாமாகவே முன்வந்து அந்த வழக்கத்தை நிறுத்தி இருந்தால் பிற்காலத்தில் அதனால் ஏற்பட்ட எத்தனையோ சர்ச்சைகளை தடுத்திருக்கலாம். ஆனால் தூரநோக்கற்ற தலைமைத்துவங்களுக்கு அவ்வாறு சிந்திக்கும் வல்லமை இல்லாமற்போனது முஸ்லிம் சமூகத்தின் துர்ப்பாக்கியமே.
மந்தை அறுப்புத் தடை இப்பொழுது ஏன் மறுவாழ்வு பெற்றது? இதன் அரசியல் பின்னணி என்ன?
ராஜபக் ஷ ஆட்சிக்கு பொது மக்களிடையே இருந்த ஆதரவு கடந்த இரு வருடங்களில் விரைவாகச் சரிவடைந்துள்ளது. அந்த ஆட்சியைத் தெரிவுசெய்த பௌத்த சிங்கள மக்களே அரசின்மேல் நம்பிக்கை இழந்துள்ளனர். தொற்று நோய் ஆபத்தின் மத்தியிலும்கூட அம்மக்கள் தொடர்ந்தேர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை இது தெளிவாக உணர்த்துகின்றது. இந்த நிலையில் பழையபடி அந்த ஆதரவை வளர்ப்பதற்காக இரண்டு வழிகளை இவ்வரசு கையாள்கின்றது. அவற்றுள் ஒன்று பசில் ராஜபக் ஷவை நிதிமந்திரியாக்கி அவர்மூலம் வாழ்க்கைச் செலவு குறைவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது. ஆனால் இன்று நாடு எதிர்நோக்கியுள்ள கடன் பளுவும் நிதிப் பற்றாக்குறையும் புதிய மந்திரியின் கைகளைக் கட்டிவைத்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் வங்குறோத்து அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆதலால் பொருளாதார நிலைமை சீரடையும் காலம் விரைவில் வரப்போவதில்லை.
இரண்டாவது வழி இனவாதம். இனவாதமே கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசுகளுக்கு ஆயுள் வழங்கியுள்ளது. ராஜபக் ஷ குடும்பம் ஆட்சிக்கு வந்ததே அந்த இனவாதத்தின் நன்கொடை என்பதை யாவரும் அறிவர். அவர்கள் ஆட்சியேறிய நாளிலிருந்து முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த சிங்கள இனவாதத்தின் அட்டகாசங்கள் இடையறாது தொடர்ந்தன. அதனால் முஸ்லிம்கள் அடைந்த துன்பங்களையும் நட்டங்களையும் இங்கே பட்டியலிட விரும்பவில்லை. இருந்தும் கடந்த சில மாதங்களாக அந்தப் புயல் ஓரளவு தணிந்து மீண்டும் பௌத்த சிங்கள முஸ்லிம் உறவு சீரடையத் தொடங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்கள் இடையிடையே சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அதை பௌத்த பேரினவாதிகள் விரும்பவில்லை. எனவே மந்தை அறுப்புத் தடையை தியாகத் திருநாளுக்கு முன்னர் அமுலாக்க முனைவது அந்த இனவாதப் பசியை அடக்கவே. முஸ்லிம்கள் இத்தடையால் கொதித்தெழுவார்கள், அப்போது அத்தருணத்தைப் பாவித்து மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்கி பௌத்த சிங்கள மக்களின் ஆதரவைப் பெறலாம் என்ற நோக்கிலேயே இத்தடை இப்போது மறுபிறவி எடுத்துள்ளது. இந்த இடத்திலேதான் முஸ்லிம் தலைமைத்துவம் விழிப்புடன் செயற்படவேண்டியுள்ளது. எக்காரணம் கொண்டும் எந்த முஸ்லிமாவது இத்தடையை மீறிச் செயற்படுவதை முஸ்லிம் தலைமைத்துவம் அனுமதிக்க கூடாது.
நீண்ட காலத்துக்கு இத்தடையை அமுல்படுத்துவது கஷ்டம். இன்று மாட்டிறைச்சியை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களே. அது மட்டுமல்ல சுற்றுலாத் துறையை வளர்க்க விரும்பும் ஓர் அரசாங்கம் வெளிநாட்டவர்களின் மாட்டிறைச்சிப் பசியை எவ்வாறு பூர்த்தி செய்வது? இறக்குமதிமூலமே அதை நிறைவு செய்ய வேண்டும். அதனால் அன்னியச்செலாவணி நெருக்கடி கூடுமேயன்றி குறையப் போவதில்லை. இன்னும், பாலுக்காக மந்தைகளை வளர்க்கும் உள்நாட்டு இடையர்கள் பால்மடி வற்றிய மந்தைகளை என்ன செய்வார்கள்? அவர்கள் அந்த மந்தைகளை இறைச்சிக்காக விற்றுப் பெறும் வருமானம் இத்தடையால் பாதிக்கப்படாதா? ஆகவே இந்தத் தடை நீண்டகாலம் நீடிக்காது. முஸ்லிம்கள் தற்போது பொறுமையுடன் அத்தடைக்குக் கீழ்ப்படிவதே சிறந்த புத்தி. மாட்டிறைச்சி வியாபாரிகள் மாற்றுத் தொழில்களைத் தேடுவது நன்று.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஆட்சி மாறுவதற்கான வழிவகைகளை முஸ்லிம்கள் இப்போதிருந்தே சிந்திக்க வேண்டும். அதற்கு புத்திஜீவிகளே முன்னின்று வழிகாட்ட வேண்டும். இதற்கிடையில் 20ஆம் திருத்தத்துக்கு வாக்களித்த முஸ்லிம் கோடரிக்காம்புத் தலைவர்கள் மீண்டும் ஒரு துரோக நாடகத்தை நடாத்த இருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைத்த ஒரு சாபக்கேடு.- Vidivelli