போதையில் வாகனம் செலுத்தி விபத்தில் மூன்று பேரை பலியெடுத்த நபர் கைது

0 826

மதுபோதையில் வாகனம் செலுத்திய சந்தேக நபரொருவரால் ஏற்பட்ட விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் சந்தேக நபரான வாகன சாரதியும் காயமடைந்துள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கல்கிஸை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில் கல்கிஸை நீதிமன்றத்திற்கு அருகிலும் மற்றும் இரத்மலானை ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் இவ்விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

கல்கிஸை நீதிமன்றத்திற்கு அருகில் வீதியில் சென்று கொண்டிருந்த இருவர் மீது குறித்த கார் மோதியுள்ளது. இதனால் இடம்பெற்ற விபத்தில் சப்றாஸ் காதர் (வயது 18) என்பவர் உயிரிழந்துள்ளதோடு அவருடன் வீதியில் சென்று கொண்டிருந்த மற்றைய நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய சந்தேக நபரான முஹமட் முர்சித் (வயது 32) வாகனத்தை நிறுத்தாது தப்பிச் சென்றபோது, முதலாவது விபத்து ஏற்பட்டதிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் எதிர் திசையில் வந்த இரு வாகனங்களில் மோதி பிரிதொரு விபத்தினையும் ஏற்படுத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த கார் இரத்மலானை ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எதிர்த்திசையிலிருந்து வந்த பிரிதொரு வேன்  மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் மோதியுள்ளது. இதனால் மோதுண்ட வேன் சாரதி மொஹமட் கவுஸ் றிஸ்வான் (வயது 48) மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்துநர் அனுஜா எதிரிசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். அத்தோடு விபத்துக்குள்ளான காரில் பயணித்த ஏனைய இருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்கிஸை நீதிமன்றத்திற்கு அருகில் விபத்தினை ஏற்படுத்திய குறித்த கார் சாரதி தப்பிச் செல்ல முற்பட்டு அதிக வேகத்தில் பயணித்ததன் காரணமாகவே இரத்மலானை பிரதேசத்தில் அடுத்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் களுபோவிலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. விபத்தினை ஏற்படுத்திய குறித்த கார் சாரதி பொலிஸாரின் பாதுகாப்புடன் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.