ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட இஷாலினியின் மரணம் கொலையா? விபத்தா? தற்கொலையா?
தொடரும் பல்கோண சிறப்பு விசாரணைகளும் வெளிப்படுத்தப்பட்டு வரும் விடயங்களும்
எம்.எப்.எம்.பஸீர்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் இஷாலினியின் மரணம் இன்று நாட்டில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இஷாலினி வேலைக்கு அமர்த்தப்படும் போது அவரது வயது தொடர்பிலான கேள்விகள், பிரேத பரிசோதனைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள், சமூக மற்றும் அரசியல் விடயங்களுடன் கலந்து அவ்வாறான நிலைமையை உருவாக்கியுள்ளது எனலாம்.
இஷாலினியின் மரணம்:
இஷாலினி இலக்கம் 410/16, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 7 எனும் முகவரியில் அமைந்துள்ள ரிஷாத் பதியுதீனின் வீட்டிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.
கடந்த ஜூலை 3 ஆம் திகதி வெள்ளியன்று காலை 6. 45 மணிக்கும் 7.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், இஷாலினியின் உடலில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய அறிய முடிகிறது. உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் பொரளை பொலிசாருக்கு அறிவித்து முறையிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரிஷாத்தின் மாமனாரின் முதல் பொலிஸ் வாக்கு மூலம்:
கடந்த 3 ஆம் திகதி, காலை 6.50 மணியளவில், கீழ் மாடியில் இஷாலினியின் சப்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது, உடலில் தீ பரவிய நிலையில் அலறுவதை அவதானித்ததாகவும், பின்னர் கால் துடைப்பான் ஒன்றின் துணையுடன் தீயை அனைத்து சிறுமியை அருகில் இருந்த நீர் தொட்டியில் இறக்கியதாகவும், ரிஷாத் பதியுதீனின் மாமனார் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்து தெரிவித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு பீ/52944/2/21 எனும் பீ அறிக்கை ஊடாக அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் இஷாலினியை 1990 அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
தேசிய வைத்தியசாலை சிகிச்சையும் பொலிஸ் விசாரணைகளும்:
இந் நிலையில் பலத்த தீ காயங்களுக்கு உள்ளான இஷாலினி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.
எனினும் இஷாலினி தீ காயங்களுக்கு உள்ளான 3 ஆம் திகதியே பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அன்றைய தினமே, இஷாலினி தீ பரவலுக்கு உள்ளான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பொலிஸ் ஸ்தல தடயப் பிரிவினர், கைவிரல் ரேகை நிபுணர்கள், அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் என விஷேட சாட்சியங்களை சேகரிக்க முடியுமான அனைத்து தரப்பினரும் பொலிஸாரால் அழைக்கப்பட்டு சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் ஸ்தலத்தை பார்வையிட்டு விசாரணைகளுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு தீ பரவல், அல்லது குற்றச் செயல் ஒன்றின் போது முன்னெடுக்கப்பட முடியுமான உச்ச கட்ட ஆரம்ப நிலை விசாரணைகளை பொரளை பொலிஸார் ஜூலை 3 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்ற சில மணி நேரங்களிலேயே முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியிலேயே இது தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் பொரளை பொலிஸாரால் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, இரசாயன பகுப்பாய்வுக்கான உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. இதனூடாக இஷாலினி தங்கியிருந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட மண்ணெண்ணெய் போத்தல், லைட்டர் போன்ற சான்றுப் பொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டது.
மரணமும் மேலதிக விசாரணையும் :
இவ்வாறு பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையிலேயே, தீ காயங்களுக்கு உள்ளான இஷாலினி கடந்த 15 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார். இதனையடுத்தே இச்சம்பவம் பலரின் அவதானத்துக்கு உட்பட்டது.
மரணம் பதிவான அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைகளுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார். இந் நிலையிலேயே மேலதிக விசாரணைகள் பொரளை பொலிஸாரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
மரணத்துக்கான காரணம்:
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, வழக்கிலக்கம் பீ/52944/2/21 இற்கு அமைய, உயிரிழந்த இஷாலினி தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இஷாலினியின் பிரேதம் மீதான பரிசோதனைகள் கொழும்பு சட்ட மருத்துவ நச்சு ஆய்வியல் நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹ{ல் ஹக் இந்த பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில், வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி என்பன மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை வெளிப்படுத்திய மேலதிக விடயங்கள்:
விஷேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக், 3 சிறப்பு குறிப்புக்களை இட்டுள்ளதுடன், அதில் இஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இஷாலினி உடலில், குற்றவியல் நடவடிக்கை ஒன்று தொடர்பில் சந்தேகிக்கும்படியான உட்புற, வெளிப்புற காயங்களுக்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி, நாற்பட்ட பாலியல் ஊடுருவல் (chronic vaginal penetration) தொடர்பிலான சான்றுகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக விசாரணைக் குழு:
இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை அடுத்து பொரளை பொலிஸார் முன்னெடுத்து வந்த விசாரணைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன. பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இந்த விவகார விசாரணைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் குற்றவியல் மற்றும் போக்குவரத்து விவகாரங்களின் பிரதானியுமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொலையா? தற்கொலையா? விபத்தா?:
இந் நிலையில் பொலிஸாரின் விசாரணை அறிக்கை, விஷேட நிபுணர்களின் அறிக்கை, அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட விஷேட சாட்சிகள், ஏனைய சாட்சிகளை அடிப்படையாக கொண்டு இஷாலினியின் மரணம் கொலையா, தற்கொலையா, விபத்தா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். எதிர்வரும் 28 ஆம் திகதி இஷாலினி தொடர்பிலான மரண விசாரணைகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், சாட்சியங்களை ஆராய்ந்து நீதிமன்றம் அது தொடர்பில் தீர்மானிக்கும்.
இந் நிலையில் பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளுக்கு ரிஷாத் பதியுதீன் தரப்பினர் பூரண ஒத்துழைப்பை வழங்கிவருவதாக, ரிஷாத் பதியுதீனின் சட்டத்தரணி, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறிப்பிட்டார்.
வயதின் அடிப்படையிலான சர்ச்சை:
இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம், 16 வயதுக்கு குறைந்தவர்களே சிறுவர்களாக கருதப்படுகின்றனர். 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இளம் பராயத்தினராக கருதப்படுகின்றனர்.
இந் நிலையில் தற்போதைய சூழலில், பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் பிரகாரம், தொழில் அல்லது வேலை ஒன்றில் அமர்த்த ஆகக் குறைந்த வயதெல்லையாக 16 வயது கணிக்கப்படுகிறது.
அத்துடன் 16 வயதுக்கும் 18 வயதுக்குமிடைப்பட்டோர் அமர்த்தப்படக் கூடாத வேலைகள் தொடர்பிலும் ஏற்பாடுகள் உள்ளன. எனினும் வீட்டுப் பணிப் பெண் வேலை அவ்வேற்பாடுகளின் கீழ் இல்லை.
இஷாலினிக்கு எத்தனை வயது?
இவ்வாறான பின்னணியிலேயே இஷாலினியின் வயது இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த இஷாலினி, கடந்த 2020 ஒக்டோபர் மாதம் வேலைக்காக கொழும்பு சென்றதாக இஷாலினியின் பெற்றோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந் நிலையிலேயே இஷாலினி சட்டப்படி சிறுமியாக இருக்கும் போது, அதாவது 15 வயது 11 மாதங்களில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், பொலிசாருக்கு ரிஷாத் பதியுதீனின் வீட்டார் தரப்பிடமிருந்து வழங்கப்பட்டுள்ள வாக்கு மூலங்கள் பிரகாரமும், ரிஷாத்தின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் விடிவெள்ளிக்கு தெரிவித்த கருத்துக்கள் பிரகாரமும், இஷாலினி ரிஷாத் வீட்டுக்கு கடந்த 2020 நவம்பர் மாதம் 18 ஆம் திகதியே வேலைக்கு வந்ததாகவும் அது முதலே அவர் அங்கு பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது. ரிஷாத் பதியுதீனின் வீட்டார் தரப்பு வாக்கு மூலங்கள் பிரகாரம் இஷாலினி 16 வயதை பூர்த்தி செய்த பின்னரேயே வேலைக்காக ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ரிஷாத் பதியுதீன் தரப்பினர், சார்பில் ரிஷாத்தின் மாமனார் புதிய பணிப் பெண்ணின் சேர்ப்பு தொடர்பில் இட்டுள்ள குறிப்பு, பணிப் பெண் வேலைக்கு சேர்ந்த பின்னர் செலுத்தப்பட்ட சம்பளங்களின் வைப்பு தொடர்பிலான வங்கிப் பதிவுகளை ஆதாரம் காட்டுகின்றனர்.
ரிஷாத் வீட்டுக்கு இஷாலினி வந்தது எப்படி?
பொலிஸ் விசாரணைகள் பிரகாரம், இஷாலினி ரிஷாத் பதியுதீன் வீட்டுக்கு எப்படி வேலைக்கு வந்தார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ரிஷாத் பதியுதீன் தரப்பினருக்கு கடந்த பத்து பதினைந்து வருடங்கள் பழக்கமான தரகர் ஒருவர் ஊடாகவே இஷாலினி ரிஷாத் பதியுதீன் வீட்டுக்கு வேலைக்கு வந்துள்ளார்.
அட்டன் பகுதியைச் சேர்ந்த குறித்த தரகரின் மகள், கடந்த ஐந்து வருடங்களாக ரிஷாத்தின் வீட்டில் பணிப் பெண்ணாக சேவையாற்றியதாக கூறப்படும் நிலையில், திருமணத்தின் பின்னர் வேலையை தொடர விரும்பாமையால் கடந்த 2020 நவம்பர் 18 ஆம் திகதி அவர் வேலையிலிருந்து விலகியுள்ளார். தனது மகளை அழைத்துச் செல்லும் கையோடு, இஷாலினியை குறித்த தரகர் ரிஷாத்தின் வீட்டில் புதிய பணிப் பெண்ணாக இணைத்ததாக அறிய முடிகிறது.
அவரை பணிப் பெண்ணாக இணைக்கும் போது தரகர், இஷாலினிக்கு 18 வயது என குறிப்பிட்டதாகவும், அடையாள அட்டையை கோரிய போது, அதனை மறந்து தவறவிட்டு வந்துள்ளதாகவும் பின்னர் அதனை சமர்ப்பிப்பதாக கூறிய போதும், கொரோனா நிலைமை காரணமாக அடையாள அட்டை பிரதியை பெற்றுக்கொள்வதற்கு தொடர்ந்து தாமதமானதாக அறிய முடிகிறது. எவ்வாறாயினும் இஷாலினியின் தோற்றத்துடன் ஒப்பீடு செய்யும் போது அவரது வயது தொடர்பில் அப்போது எந்த நியாயமான சந்தேகங்களும் ஏற்படவில்லை என ரிஷாத் பதியுதீன் தரப்பினர் கூறுகின்றனர்.
வேலையில் இணைக்கப்பட்ட இஷாலினிக்கு மாதச் சம்பளமாக பேசப்பட்ட தொகை 20 ஆயிரம் ரூபாவாகும். இஷாலினியின் சம்பளம், அவரை வேலைக்கு சேர்த்த தரகரின் வங்கிக் கணக்கு ஊடாகவே செலுத்தப்பட்டுள்ளதாக ரிஷாத் பதியுதீன் தரப்பினர் கூறுகின்றனர்.
இதனைவிட, இஷாலினியின் குடும்பத்தார் வசித்த வீட்டின் கூரையை திருத்துவதற்கு எனக் கூறியும், சகோதரர் ஒருவரின் மருத்துவ செலவுக்கு எனக் கூறியும் மேலதிக பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அந்த தரப்பினரால் கூறப்படுகிறது.
இவற்றையெல்லாம் உறுதிப் படுத்திக் கொள்ள தற்போதும் பொலிஸார் நீதிமன்றம் ஊடாக உரிய வங்கிக் கணக்குகள் தொடர்பிலான விபரங்களைப் பெற்று பகுப்பாய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
மரணத்தில் சந்தேகம் எனக் கூறும் பெற்றோர்:
இந் நிலையில் இஷாலினியின் பெற்றோரான ஜெயராஜ் ஜூட் குமார், ஆர். ரஞ்சனி தம்பதியினர், தமது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இஷாலினியின் சகோதரர் ஒருவரும் அட்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக கூறியிருந்தார்.
இஷாலினியை தாங்கள் கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவரது தந்தை, மகள் விரும்பியே வேலைக்கு சென்றதாகவும், அவள் தீக்கு பயந்தவள் எனவும், அவள் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்துகொண்டமையை நம்பமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வைத்தியசாலை கட்டில் அட்டை தகவல்:
எவ்வாறாயினும் இஷாலினி தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டரா எனும் விடயம் இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ள விடயமாகும். இஷாலினி சுமார் 12 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் வைத்தியர் ஒருவரிடம் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டதாக தெரிவித்ததாக விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை அவ்வைத்தியர், நோயாளியின் கட்டில் சிகிச்சை அட்டையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பி.எச்.டி. அட்டை எனப்படும் குறித்த அட்டை பொலிஸாரால் விசாரணைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தாயார் வெளிப்படுத்தும் விடயங்கள்:
ஊடகவியலாளர்களை சந்தித்த இஷாலினியின் தாயாரான ஆர். ரஞ்சனி, ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்யும் மற்றொருவரால் தான் தாக்கப்பட்டதாக இஷாலினி தன்னிடம் தொலைபேசியில் கூறியதாக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் பொலிஸாரின் விசாரணைகளில் மிக முக்கிய அவதானத்துக்கு உள்ளாகியுள்ளது.
அத்துடன் இஷாலினி வீட்டாரை தொடர்புகொள்ளவும் முட்டுக் கட்டைகள் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கையடக்கத் தொலைபேசி ஒன்றினை இஷாலினி, ரிஷாத்தின் வீட்டில் பயன்படுத்தியிருக்கவில்லை எனவும், சேவகனின் கையடக்கத் தொலைபேசியில் அவர் வீட்டாரை தொடர்புகொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. அத்துடன் ரிஷாத்தின் வீட்டாரின் உதவியுடனும் அவர் வீட்டாரை தொடர்புகொண்டுள்ளார்.
இந் நிலையில் குறித்த தொலைபேசி பதிவுகள் அனைத்தும் தற்போது விசாரணைகளுக்காக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சேவகனிடம் விசாரணை:
பிரேத பரிசோதனை அறிக்கையில், தாக்குதல்கள் தொடர்பிலான சந்தேகத்துக்கு இடமான சான்றுகள் இல்லை என கூறப்பட்டாலும், இதுவரை இஷாலினியை தாக்கியதாக கூறப்பட்ட ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்யும் சேவகனிடம் தீவிர விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். அவரிடம் ரிஷாத்தின் வீட்டில் வைத்து மூன்று நான்கு தடவைகளும், பொரளை பொலிஸ்; நிலையத்துக்கு அழைத்து நான்கு தடவைகளும் விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
அவரது தொலைபேசியும், இந்த விவகார விசாரணையின் முதல் நாளான அதாவது ஜூலை 3 ஆம் திகதியே பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பணியாளர்களிடையே பதிவாகியுள்ள முரண்பாடு:
எவ்வாறாயினும் தாக்குதல் நடாத்தியதாக கூறப்படுவதை குறித்த சேவகர் தொடர்ந்து மறுத்து வருகின்றார்.
எனினும் இஷாலினிக்கும், குறித்த சேவகனுக்கும் இடையே பதிவான முரண்பாடு ஒன்று குறித்த தகவல்களும் பதிவாகியுள்ளன.
அதாவது, இஷாலினி ஒரு தடவை அவரது அறையை சுத்தப்படுத்தும் போது, வெளியே வைத்திருந்த ஒரு பெட்டியில் 5 ஆயிரம் ரூபாவை பார்த்துவிட்டு குறித்த சேவகன் அப்பணம் எவ்வாறு வந்தது என விசாரித்ததால் அம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
எனினும் ரிஷாத்தின் மகள் ஒருவர் மலேஷியா செல்ல முன்னர் இஷாலினிக்கு அப்பணத்தை கொடுத்துவிட்டு சென்றிருந்ததாக பின்னர் தெரியவரவே அம்முரண்பாடு தீர்ந்ததாக அறிய முடிந்தது.
எவ்வாறாயினும் குறித்த சேவகன் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறும் நிலையில், அவரை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பிலும் பொலிஸாரின் அவதானம் திரும்பியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையை மையப்படுத்திய பொலிஸ் விசாரணை:
பிரேத பரிசோதனைகளில் வெளிப்படுத்தப்பட்ட நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான விடயங்களை மையப்படுத்தி விசாரணைகள் பிரத்தியேகமாக இடம்பெறுகின்றன. குறிப்பாக இஷாலினி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எப்போதாவது உள்ளாக்கப்பட்டுள்ளாரா, அப்படியானால் அது எங்கு எப்படி யாரால் நடந்தது என்பதை வெளிப்படுத்த இவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இஷாலினி தரம் 7 வரையே கல்வி பயின்றுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள நிலையில், அவரது 12 ஆவது வயதில் பதிவான சில சம்பவங்கள் மற்றும் டயகம பகுதியில் இஷாலினியின் வாழ்வில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் கடந்த கால விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட பொலிஸ் குழுவொன்று டயகம நோக்கி சென்று விசாரணை நடாத்தி வருகின்றது.
இது தொடர்பில் இஷாலினி கல்வி பயின்ற பாடசாலை அதிபர், அவரது பெற்றோர் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.
இஷாலினி விவகாரமும் ரிஷாத் பதியுதீனும்:
இஷாலினியின் மரணம் தொடர்பிலான விவகாரம் தற் சமயம் சமூக அரசியல் ரீதியில் பேசப்படும் நிலையில், ரிஷாத் பதியுதீனின் பெயரை குறித்த சம்பவத்துடன் இணைத்து ஊடகங்களில் பேசப்படுகின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.
நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ரிஷாத் பதியுதீன் கடந்த 2020 ஒக்டோபர் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவ்விவகாரத்தின் 2020 டிசம்பர் 11 ஆம் திகதியே பிணை கிடைத்திருந்தது.
ரிஷாத் தரப்பினரின் நிலைப்பாட்டுக்கு அமைய இஷாலினி நவம்பர் 18 ஆம் திகதி வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பின், ரிஷாத் பதியுதீன் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியிலேயே அது நடந்திருக்க வேண்டும்.
அதே போல இஷாலினியின் மரணத்துடன் தொடர்புடைய ஜூலை 3ஆம் திகதி தீ சம்பவத்தின் போதும் ரிஷாத் பதியுதீன் சி.ஐ.டி.யினரின் தடுப்புக் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் அரசியல் ரீதியாக ரிஷாத் தொடர்பில் இஷாலினி விடயத்தில் முன் வைக்கப்படும் சில விடயங்கள் முரண்பட்டவையாகும்.
எவ்வாறாயினும் ரிஷாத்தின் வீட்டில் சம்பவம் இடம்பெற்றுள்ளதால், அவரிடமும் வாக்கு மூலம் பெறுவது தொடர்பில் பொலிஸாரின் அவதானம் திரும்பியுள்ளது.
இஷாலினி விவகாரத்தில் நீதி:
இவ்வாறான பின்னணியில் இஷாலினி விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரினதும் அவாவாகும். இஷாலினி விடயத்தில் சட்ட திட்டங்கள் மீறப்பட்டு கொடுமைகள் இடம்பெற்றிருப்பின் அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இருக்க முடியாது.
அதே போல இச்சம்பவத்தை வைத்து அரசியல் தேவைகளுக்காக குளிர் காயும் நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மரண விசாரணைகள் கூட இன்னும் நிறைவுபெறாத, இந்த விவகாரத்தில் நீதியான நியாயமான விசாரணைகளின் பின்னர் உண்மை வெளிப்படுத்தப்படும் வரை நாம் பொறுமை காப்பதே சிறந்தது. -Vidivelli