எம்.எப்.எம்.பஸீர்
நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரின் விவகாரத்தில் தொடர்ச்சியாக பாதுகாப்பு தரப்பின் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் நீடிக்கின்றன. அஹ்னாப்பின் கைது, தடுத்து வைப்புக்கு எதிராக சர்வதேச மட்டத்தில், அதன் சட்ட ரீதியிலான பிரயோகம் தொடர்பில் கதையாடல்கள் ஏற்பட்டன.
இவ்வாறான நிலையில் யாருக்கும் தெரியாமல் கடந்த ஜூன் 12 ஆம் திகதி அஹ்னாப் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
எனினும் அதுவும் இப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அஹ்னாப் ஜசீம் இதுவரை நீதிவான் ஒருவர் முன்னிலையில் நேருக்கு நேர் ஆஜர் செய்யப்படவில்லை என்ற விடயம் தற்போது வெளிப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகேயிடம், அஹ்னாபின் சட்டத்தரணி இதனை கடந்த 13 ஆம் திகதி முறையிட்டு அதனை பதிவு செய்யுமாறு கோரியிருந்தார். எனினும் அதனை பதிவு செய்யாத நீதிவான் அது தொடர்பில் பிரச்சினை இருப்பின் உயர் நீதிமன்றையோ மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ நாடி நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் 9(1) ஆம் அத்தியாயத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படும்போது, தடுப்புக் காவல் காலப்பகுதியில் அவர் தாக்கப்பட்டாரா, சித்திரவதைக்கு உள்ளானாராபோன்ற விடயங்கள் நீதிவானால் ஆராயப்பட்டு , சந்தேக நபரை மேற்பார்வை செய்திருந்த வழக்கு ஆவணத்தில் பதிவுகள் இடப்படுகின்றமையை இது வரை நீதிமன்றங்களில் நடந்து வந்த வழமையான நடவடிக்கையாகும். எனினும் அஹ்னாப் ஆஜர் செய்யப்பட்டபோது நீதிவானால் அவ்வாறான பதிவுக இடப்பட் டதாக அவதானிக்க முடியவில்லை என்கிறார் அஹ்னாபின் சட்டத்தரணி.
அதே போல் கடந்த ஜூன் 12 ஆம் திகதி அஹ்னாப் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட முறைமை தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி மன்றில் ஆஜரான சி.ரி.ஐ.டி.யின் வழக்கு நெறிப்படுத்தல் பிரிவின் அதிகாரிகளுக்கும் தெளிவான பதிலிருக்கவில்லை.
எஸ்.எம். குமாரசிங்க எதிர் சட்ட மா அதிபர், வீரவன்ச எதிர் சட்ட மா அதிபர் ஆகிய வழக்குகளின் தீர்ப்பில், உயர் நீதிமன்றம் வழங்யுள்ள வழிகாட்டல்கள் பின் பற்றப்பட்டதாக அஹ்னாப் விவகாரத்தில் அவதானிக்க முடியவில்லை. எனவே அஹ்னாப் உண்மையிலேயே நீதிவான் ஒருவர் முன்னிலையில் நேருக்கு நேர் ஆஜர் செய்யப்பட்டா விளக்கமறியலில் வைக்கப்பட்டார் எனும் பலத்த சந்தேகம் உருவாகிடுள்ளது.
13 ஆம் திகதி வழக்கு விபரம்:
அஹ்னாப் தொடர்பிலான வழக்கில் அவரை நீதிமன்றில் ஆஜர் செய்த சட்ட பிரிவு தொடர்பில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது. கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இதனை அறிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படும் சந்தேக நபர்கள் மன்றில் அச்சட்டத்தின் 7 (2) ஆவது அத்தியாயம் பிரகாரமே ஆஜர் படுத்தப்பட வேண்டும் எனவும், அஹ்னாபும் அவ்வாறே ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிலே எந்த சிக்கலும் இல்லை என்பது நீதிமன்றின் நிலைப்பாடு எனவும் நீதிவான் அறிவித்தார்.
அத்துடன் சந்தேக நபர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதால், குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 120 ( 3) ஆம் பிரிவின் கீழ் முன் வைக்க வேண்டிய சாட்சிகளின் சுருக்கத்தை வழங்க வேண்டிய அவசியமும் இல்லை என நீதிவான் இதன் போது அறிவித்தார்.
அத்துடன் பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் விசாரணையின் பின்னர் மன்றில் ஒருவரை ஆஜர் செய்யும்போது பெற்றோருக்கோ சட்டத்தரணிக்கோ அது குறித்து அறிவிக்க வேண்டும் என்ற எந்த நியதியும் இல்லை என்பதால், விசாரணையாளர்கள் அவ்வாறு அறிவிக்காமை சட்டத்துக்கு முரணான செயலாக கருத முடியாது எனவும் நீதிவான் சந்திம லியனகே அறிவித்தார்.
கடந்த ஜூன் 11 ஆம் திகதி வெள்ளியன்று, அஹ்னாப் ஜெஸீம், தங்காலை சி.ரி.ஐ.டி. தடுப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை கொழும்பு, 8 ஆம் இலக்க, நீதிவான் நீதிமன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள எந்த வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் இந்த விடயம் 14 ஆம் திகதியே தெரியவந்ததாகவும் அஹ்னாபின் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.
‘ அஹ்னாப் ஜஸீம் சட்டத்தரணிக்கு தகவல் அளிக்குமாறு கோரவில்லை என்பதால் , சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கவில்லை என சி.ரி.ஐ.டி. அதிகாரி குறிப்பிட்டார். எனினும் சி.ரி.ஐ.டி. பிடியில் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக இருந்த அஹ்னாப் விடயத்தில் அனைத்து விதமான சட்ட விடயங்களையும் அவரது சட்டத்தரணி எனும் ரீதியில் நானே முன்னெடுத்தேன் என்பது சி.ரி.ஐ.டி.யினருக்கு நன்றாக தெரியும். அவர்களுக்கு எழுதிய கடிதங்கள், பொலிஸ் மா அதிபர், மனித உரிமைகள் ஆணைக் குழு ஆகியவற்றுக்கும் நானே கடிதங்களை எழுதினேன்.
அப்படி இருக்கையில் மன்றில் அவரை ஆஜர் செய்யும்போது அவரது சட்டத்தரணி எனும் ரீதியில் எனக்கு கண்டிப்பாக சி.ரி.ஐ.டி. அறிவித்திருக்க வேண்டும். அது அவர்களது கடமை.
அஹ்னாப் ஜஸீமை பயங்கரவாத தடை சட்டத்தின் 6 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந் நிலையில் அவ்வாறு கைது செய்யப்படுவோர் அச்சட்டத்தின் 7 ( 1) ஆம் பிரிவின் கீழ் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் 7 (2) ஆம் அத்தியாயத்தின் கீழேயே அவரை ஆஜர் செய்துள்ளனர். 7 (1) பிரகாரம் ஆஜர் செய்தால், அங்கு சாட்சிகளை ஆராய்ந்து ஒருவரை விடுவிக்க ஆலோசனை வழங்கும் அதிகாரம் சட்ட மா அதிபருக்கு உள்ளது. எனவே அதனை தடுக்க சி.ரி.ஐ.டி. இவ்வாறு நடந்துகொண்டுள்ளது.’ என சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர குறிப்பிட்டிருந்தார்.
இந் நிலையிலேயே அதற்கு சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் பதிலளித்திருந்த நிலையில், அது தொடர்பில் நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை அறிவித்தது. இதன்போதே அஹ்னாப் ஜஸீம் மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சி.ரி.ஐ.டி. நடந்துகொண்ட முறைமை சரியாது என நீதிவான் அறிவித்தார்.
முன்னதாக 26 வயதான கவிஞர் அஹ்னாப், கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை , பண்டாரவெளியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து சி.ரி.ஐ.டி. வவுனியா கிளை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.கே.ஜே. அனுரசாந்தவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது அவரது வீட்டிலிருந்து 50 இற்கும் அதிகமான நவரசம் கவிதை தொகுப்பு புத்தகங்களும் மேலும் சில புத்தகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
முதலில் கோட்டை நீதிமன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப் பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேக நபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
எனினும் அவருக்கு எதிராக புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதாக பிரசாந்த ரத்னாயக்க எனும் ரி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.- Vidivelli