ஏ.ஆர்.ஏ. பரீல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு கொழும்பு மாநகர சபையின் ஆணையாளருக்கு ‘இலங்கைக்குள் மாடறுப்பதை தடை செய்தல்’ எனும் தலைப்பில் அனுப்பி வைத்திருந்த கடிதம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கை முஸ்லிம்கள் உழ்ஹிய்யாவுக்காக மாடுகள் அறுப்பதற்குத் தயார் நிலையில் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே கொழும்பு மாநகர சபையின் ஆணையாளருக்கு அக்கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டி.ஏ.பி.பொரலெஸ்ஸயினால் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் மாடறுப்பதை தடை செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. என்றாலும் கொழும்பு மாநகர சபை இத்தீர்மானத்தை மீறி வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்தி அமைச்சரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துமாறு கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. இக்கடிதம் கடந்த 11 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இத்தடையை நீக்கி முஸ்லிம்கள் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்கள். இதனையடுத்து பிரதமரின் தலையீட்டினை அடுத்தே உழ்ஹிய்யாவுக்கான அனுமதி வழங்கப்பட்டது. மாடுகள் அறுப்பதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் அனுமதி வழங்கின.
இராஜாங்க அமைச்சின் செயலாளரின் கடிதம்
நகர ஆணையாளர்,
கொழும்பு மாநகரசபை,
இலங்கையில் மாடறுப்பதை தடைசெய்தல்
பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள PMO/CM/25/2020 ஆம் இலக்க மற்றும் 2020.07.17 ஆம் திகதியிட்ட அமைச்சரவை பத்திரம் மேலும் அ.ம.ப./1404/ 302/ 008—1 இலக்க 2020.10.06 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைவாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் மாடறுப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி அமைச்சரவையின் தீர்மானத்தின் படி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதற்காக 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மிருக சட்டம், 1893 –ஆம் ஆண்டின் மிருக வதைச் சட்டம், மாநகரசபை சட்டம், நகரசபை மற்றும் பிரதேச சபை சட்டம் என்பவற்றில் திருத்த சட்ட மூலங்கள் தயாரித்து அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநகர சபையினால் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தால் அத்தீர்மானத்தை உடனடியாக நிறுத்தி அமைச்சரவையின் தீர்மானத்தின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன் என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எல்.டி. ஏ.பி. பொரலெஸ்ஸ வேண்டியுள்ளார்.
கொழும்பு மாநகரசபை ஏகமனதாக தீர்மானம்.
கடந்த 19 ஆம் திகதி கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் கூடிய மாநகரசபை அமர்வில் உழ்ஹிய்யாவுக்கான மாடுகளை அறுப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் எம்.ரி.எம். இக்பால் இது தொடர்பாக முன்வைத்த பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
உழ்ஹிய்யாவுக்கான மாடுகள் அறுப்பதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் நாம் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். 21ஆம், 22 ஆம் திகதிகளில் அதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கினோம். ஆனால் 23 ஆம் திகதி (இன்று) நோன்மதி தினம் என்பதால் அனுமதி பத்திரம் வழங்கப்படமாட்டாது. கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட வடிகால் கட்டமைப்பு கொண்ட இடங்களில் மற்றும் மாடு அறுக்கும் மடுவத்தில் மாடுகள் அறுக்கப்பட்டு உழ்ஹிய்யா நிறைவேற்றப்பட்டன. நாட்டின் சட்டத்திற்கமைய மாநகர சபையின் நிபந்தனைகள், சட்டத்துக்கமைய உழ்ஹிய்யா நிறைவேற்றப்பட்டதென கொழும்பு மாநகரசபையின் பிரதிமேயர் எம்.ரி.எம்.இக்பால் தெரிவித்தார்.
பள்ளிவளாகங்களில் குர்பானுக்குத் தடை
இதேவேளை பள்ளிவாசல்களின் வளாகங்களில் குர்பானுக்கு மிருகங்கள் அறுப்பதற்கு அனுமதியில்லை என வக்புசபை தெரிவித்திருந்தது. இது தொடர்பில் அனைத்துப் பள்ளிவாசல்களினதும் நிர்வாக சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்புசபையின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் இது தொடர்பில் சுற்று நிருபமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.
பள்ளிவாசல் வளாகங்களுக்குள் குர்பானுக்கான மிருகங்கள் அறுப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என MRCA/A/06/Covid 19 எனும் 13.07.2021 ஆம் திகதியிட்ட சுற்று நிருபம் தெரிவித்தது. ‘ நாட்டில் மாடறுப்பது தடை செய்யப்படவேண்டும் என குரல் எழுப்பப்பட்டு அதற்கான சட்டம் கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாம் பள்ளிவாசல்களில் மாடுகளை அறுப்பதை பகிரங்கப்படுத்தக்கூடாது. இவ்விடயம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்படும்போது பெரும்பான்மை சமூகம் மாடறுப்பதற்கு எதிராக மேலும் குரல் எழுப்பும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்’ என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வக்பு சபையின் தீர்மானம்
பள்ளிவாசல்களில் குர்பான் பிராணிகளை அறுப்பதற்கு ஏன் வக்பு சபை தடைவிதித்தது என்பது தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் விளக்கமளித்திருந்தார். பிற சமூகத்தினரின் விமர்சனங்கள் மற்றும் கொவிட் நிலைமைகளை கருத்திற் கொண்டே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
‘கொவிட் 19 தொற்றிலிருந்தும் எம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதேயன்றி சமூகத்தை அசெளகரியப்படுத்தவேண்டும் என்பதற்காகவல்ல, மாடுகள் அறுப்பதை தடை செய்யும் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது. இச்சட்டத்துக்கு அமைச்சரவையின் ஆதரவுண்டு. இந்நிலையில் நாம் பள்ளிவாசல்களை மாடுகள் அறுக்கும் இடங்களாக உபயோகப்படுத்துவது புத்திசாலித்தனமல்ல. உழ்ஹிய்யாவை வீடுகளில் அல்லது வேறு இடங்களில் சட்ட ரீதியான ஆவணங்களுடன் சுகாதார அதிகாரிகளின் நிபந்தனைகளைப்பேணி மேற்கொள்வதே சிறந்ததாகும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தேரர்களின் கோரிக்கை
முஸ்லிம்களின் ஹஜ் பெருநாளை முன்னிறுத்தி 5000 மாடுகள் அறுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாடுகளின் சாணி மூலம் இயற்கை உரம் தயாரிக்க முடியும். எனவே மாடுகள் எமது வளமாகும். மாடுகள் அறுக்கப்படக்கூடாது. இவ்வாறு அறுப்பவர்கள் கைது செய்யப்படவேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கோரிக்கை விடுத்தமையும் உன்னிப்பாக நோக்க வேண்டியதாகும்.
கொழும்பு அபேராம விகாரையில் இடம்பெற்ற ஊடக மாநாடொன்றிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். அத்தோடு ‘மாடுகள் அறுப்பதற்கு தடை விதித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு இச்சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். மாடு அறுப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தராதரம் பாராது உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்’ என அவ் ஊடக மாநாட்டில் உரையாற்றிய கபகொல்லேவ ஆனந்தகித்தி தேரர் தெரிவித்துள்ளமை மாடுகள் அறுக்கப்படுவதன் எதிர்ப்பின் உச்ச நிலையை பறைசாற்றுகிறது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் சந்திப்பு
20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்து வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உழ்ஹிய்யா மாடறுப்பில் உருவாகியிருந்த பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவை கடந்த திங்கட்கிழமை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் கலந்து கொண்டிருந்தார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ஏ.எல்.எம். அதாவுல்லா, மர்ஜான் பளீல், காதர் மஸ்தான், எம்.எஸ்.தெளபீக், பைசல் காசிம், அலி சப்ரி ரஹீம், எச்.எம்.எம்.ஹரீஸ், இஷாக் ரஹ்மான், ஹாபீஸ் நஸீர் அஹமட். முஷாரப் முதுநபீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட மாடறுப்பு தடை பற்றிய சுற்று நிருபம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குர்பான் மாடறுப்புக்கு இவ்வாறான பல சவால்களுக்குப் பின்பே பிரதமரினால் அனுமதி வாய்மொழி மூலம் வழங்கப்பட்டது. ஆனால் நாட்டில் மாடறுப்புக்குத் தடை தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் மீள வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவில்லை. இதே வேளை குர்பான் மாடறுப்புக்கு ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் தம்மைத் தொடர்பு கொள்ளும்படி சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் உத்தரவு
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டி.ஏ.பி.பொரலெஸ்ஸ கொழும்பு நகர ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இலங்கையில் மாடு அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது அமைச்சரவையின் தீர்மானம் எனவும் இந்த அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினாலே சமர்ப்பிக்கப்பட்டது எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து அழுத்தம் பிரயோகித்ததையடுத்து குர்பானுக்கு மாடுகள் அறுப்பதற்கு அனுமதி வழங்குமாறு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களை தனது செயலாளர் மூலம் கோரியுள்ளார். ஆனால் இக்கோரிக்கை எழுத்து மூலமாக விடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த உத்தரவு குர்பானுக்காக மாத்திரமானதாகவே அமைந்துள்ளது.
நாட்டில் மாடுகள் அறுக்கும் தடைச்சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவே தெரிகிறது. பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் மாடுகள் அறுப்பது தடை செய்யப்படவேண்டும் என்பதாகும். இதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் பிரதமரின் இன்றைய நிலைப்பாடு என்ன? முஸ்லிம் சமூத்துக்கு அவர் விளக்கமளிப்பாரா?
20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாகவும் அமைச்சர் உதய கம்பன்பிலவின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும் கையுயர்த்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் மாடறுத்தலுக்கான தடையை பிரதமர் மீளப்பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்வார்களா? இல்லையேல் அமைச்சர் பதவிகளுக்காக மெளனித்துப் போவார்களா?- Vidivelli