(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஏ.பி.எம்.அஷ்ரபிற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொதுநிர்வாகம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசனம் மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு இடமாற்றம் வழங்குமாறு ஏ.பி.எம். அஷ்ரப் விடுத்த வேண்டுகோளை தாம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதனடிப்படையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கு முன்பு கடமைகள் மற்றும் கடமை தொடர்பான ஆவணங்களை திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.அன்வர் அலியிடம் ஒப்படைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரது அழுத்தத்தின் பேரிலேயே முஸ்லிம் சமய திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ரப் இடமாற்றப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிவாசல்களில் குர்பான் பிராணிகளை அறுப்பதற்கு வக்பு சபை தடை விதித்துள்ளதாக பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, இத் தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திற்கு நெருக்கமான பலரும் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையிலேயே தற்போது இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னராக கடந்த ஜனவரி மாதம் பணிப்பாளர் பதவியிலிருந்து தான் இராஜினாமாச் செய்துள்ளதாக ஏ.பி.எம். அஷ்ரப் அறிவித்திருந்தார். எனினும் அவரது இடத்திற்கு பொருத்தமான ஒருவரை நியமிக்கும் வரை பணிப்பாளர் பதவியை தொடருமாறு அவர் வேண்டப்பட்டிருந்தார். இந் நிலையிலேயே தற்போது அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli