இலங்கை தேசிய முஸ்லிம் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அதன், முதலாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் கொழும்பு – 7 இலுள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.
முதன் முறையாக நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் நான்கு பிரதான பகுதியினரான இலங்கைச் சோனகர், இலங்கை மலாயர், இலங்கை மேமன், மற்றும் இலங்கை தாவூதி (போரா) ஆகிய சமூகத்தினர் ஒன்றிணைந்த ஒருங்கமைப்பாக இப்பேரவை இயங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த தேசிய முஸ்லிம் பேரவை, அரசியல் சார்பற்ற, சமயப் பிரிவுகள் சார்பற்ற சிவில் அமைப்பாக இயங்கும். இது சமூகம் சார்பான அனைத்து விடயங்களிலும் சிறப்பான சிவில் பிரதிநிதித்துவத்தை வழங்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘பேரவையின் நிர்மாணிப்பாளர்கள்’ என அழைக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்களது பல்வகைமையினரின் ஊடாகக் கட்டியெழுப்பப்பட்ட இந்த பேரவை, இலங்கை முஸ்லிம் சமூகத்திலுள்ள மிகச் சிறந்த ஆளுமையுள்ள வளங்களைக் கொண்டு, இலங்கை முஸ்லிம்களுக்காக மட்டுமன்றி அனைத்து இலங்கையருக்குமான பொது நன்மையை நோக்கி அர்ப்பணிப்புடனும், பொறுப்புடைமையுடனும் பணியாற்ற உறுதி பூண்டுள்ளது.
இந்த பேரவையின் மருத்துவரான பேராசிரியர் கமால்தீனினை தலைவராகவும், அவருடன் இணைந்து சபையில் அப்ஸல் மரைக்கார் (உப தலைவர்), குஸைமா ஜெபர்ஜி (உப தலைவர்), ஸஹரின் ஹமீன் (செயலாளர்) மற்றும் சப்ரி கௌஸ் (பொருளாளர்) ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மொஹமட் அடமலி, அமான் அஷ்ரப், சுரைஷ் ஹாஸிம், சுஹைல் ஜமால்டீன், ஆயிஷா சத்தார் மற்றும் ஏ.ஜி.எம்.யாசீன் ஆகியோரை இந்த பேரவை அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேரவை தொடர்பில் பேராசிரியர் கமால்தீன் கூறுகையில்,
“நாம் அனைவரும் ஒரு தேசமாக வர வேண்டிய நேரம் வந்து விட்டது. இலங்கை தேசிய முஸ்லிம் பேரவையின் ஒரு தோற்றுவாய். ஏனெனில் இதுவே முஸ்லிம்களது நான்கு பிரிவினரையும் உள்ளடக்கி ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியில் உருவாக்கப்பட்ட முதலாவது சிவில் அமைப்பாகும்.
நாம் அனைவரும் ஒரு விடயத்தால் ஒன்று படுகிறோம். அது நாம் அனைவரும் இலங்கையர் என்பதாகும். அதனை அங்ககீரித்தலே அதனளவில் பெரும் முக்கியத்துவம் வாயந்ததாகும்” என்றார். – Vidivelli