சிங்களத்தில்: ‘அனித்தா’ பத்திரிகை
தமிழில்: எம்.எச்.எம். நியாஸ்
கொவிட் – 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்ட “லொக்டவுன்“ கால எல்லைக்குள்ளும் இலங்கையில் எல்லை மீறிய அரசியல் (நோக்கத்துடனான) நடவடிக்கைகளும் அதிகமாக மேற்கொள்ளப்பட்டன. ஆளும் கட்சியின் உள்ளகத்திலிருந்து உருவாகிய மிக மோசமான குழப்பங்களே அதில் முதலிடத்தைப் பெறுகிறது. அந்தக் குழப்பநிலை இன்றுவரை மாறவில்லை அது ஒரு போதும் மாறுவதற்கும் இடமில்லை.
கடந்த ஒரு சில வார காலத்தில் நடைபெற்ற அரசியல் செயற்பாடுகள் பற்றி புதிதாக விளக்கமளிக்க வேண்டியதில்லை. நாட்டில் அரசியல் அறிவுள்ள எவருக்கும் அவை பற்றி இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். அதன்படி வெளித்தோற்றத்தில் அரசு அரங்கேற்றி வரும் நாடகங்களையும் விளங்கிக் கொள்வதுடன் அவை பற்றிய எமது கவனத்தையும் செலுத்த முடியும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தோல்வியடைந்த ஆட்சியாளன் என்பதும் அவரது புகழ் படிப்படியாக வீழ்ச்சியை நோக்கிப் போகிறது என்பதும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மிகப் பலம் வாய்ந்த தூண்களும் ஏற்றுக் கொண்டுள்ள உண்மை. அதேவேளை கோட்டாபயவின் இடத்தை பெஸில் ராஜபக்ஷவைக் கொண்டு நிரப்புவதற்கு மொட்டில் அங்கம் வகிக்கும் பெரும் “புள்ளிகள்” முயற்சிகளை மேற்கொண்டு வருவது தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றமே அப்பிரச்சினைக்கான முதற் காரணியாகும். அரசின் வாழ்க்கைச் செலவு பற்றிய குழுவினர் தீர்மானங்களுக்கு ஏற்ப நிதியமைச்சரான பிரதமரும், ஜனாதிபதியும் கலந்துரையாடிய பின் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற் கொண்டது. அரசின் அந்த முடிவை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் முயற்சியைத்தான் அமைச்சர் உதய கம்மன்பில செய்தார். அவர் (அமைச்சர் உதய கம்மன்பில) அவ்வாறு அறிவித்து 72 மணித்தியாலங்கள் கழிவதற்கு முன் பெஸில் ராஜபக்ஷ அவரை மிக மோசமாக தாக்கிப் பேசினார். அதன் பெறுபேறாக “பொதுஜன பெரமுன” கட்சியின் செயலாளரான “சாகர காரியவசம்” அமைச்சர் உதய கம்மன்பிலவை அமைச்சர் பதவியிலிருந்தும் விலகும்படி கேட்டுக் கொண்டார். கம்பஹா மாவட்டத்தின் “நிமல் லன்ஸா” இந்த சந்தர்ப்பத்தில் பெஸில் ராஜபக்ஷ இலங்கையில் இருந்திருந்தால் எரிபொருள் விலை உயர்வுக்கு ஒரு போதும் இடம் தந்திருக்கமாட்டார் என்று கூறினார். ஜனாதிபதி கோட்டாபயவின் தலைமைத்துவம் ஆட்டம் கண்டு வருகிறது என்பதே மேற்படி இரண்டு கூற்றுகளிலிருந்தும் தெளிவாகிறது.
அமைச்சர்களையும், ராஜாங்க அமைச்சர்களையும், பிரதி அமைச்சர்களையும், அமைச்சர்களின் செயலாளர்களையும் ஜனாதிபதியே நியமிக்கின்றார். அவ்வாறு நியமனம் செய்யப்படும் அமைச்சர்களை பதவியிலிருந்தும் நீக்குவதற்கும் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்வதற்கும் ஜனாதிபதியே அதிகாரம் பெற்றுள்ளார். 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி அந்த அதிகாரம் முழுமையாக ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜாங்க அமைச்சர் ஒருவரை பதவி விலகும்படி ஒருவர் கூறுவாரேயானால், அது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் நடைபெற்ற ஒரு செயலாகவே கருதப்படல் வேண்டும். அவ்வாறிருந்தும் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்ட ஒரு ராஜாங்க அமைச்சரை பதவி விலகும் படி மற்றுமொருவர் கூறுவாரானால் அது ஜனாதிபதியின் அதிகாரத்தில் கைவைக்கப்பட்டதாக கருத முடியுமல்லவா? ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவர் அப்பதவியை சரிவர நிறைவேற்ற தகுதியற்றவராகவும் கணிக்கப்படலாம் அல்லவா?
நிமல் லன்ஸா மிகவும் பாரதூரமான கருத்தொன்றைத்தான் வெளியிட்டுள்ளார். “பெஸில் ராஜபக்ஷ இலங்கையில் இருந்திருந்தால் எரிபொருள் விலையேற்றத்தை ஒரு போதும் அனுமதித்திருக்கமாட்டார்” என்று அவர் கூறியதன் பின்னணி என்ன? தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் செல்லும் ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. மேலும் இலங்கையின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துவரும் இந்த கால கட்டத்தில் எரிபொருள் விலையை உள்நாட்டில் அதிகரிக்க விடாமல் அதை முகாமைத்துவம் செய்யும் அபார அறிவைக் கொண்டவரே பெஸில் என்பதுதானே அதன் கருத்து. அவர் (பெயரில்) நாட்டுக்கு வெளியே இருக்கும் சந்தர்ப்பத்தில் கூட இலங்கையிலுள்ள ஜனாதிபதி உட்பட எந்த ஒரு அமைச்சருக்கும் பெஸில் ராஜபக்ஷவுக்கு இருக்கும் திறமை இல்லை என்பதுதானே அதன் கருத்து.
கடந்த ஜூன் 20ஆம் திகதி கண்டி (திகன)யில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலாநிதி ரஞ்சித் பண்டார இவ்வாறாகக் கூறியுள்ளார். அவர் பெஸிலின் ஒரு நண்பர் என்று கூறுவதை விட அவர் பெஸிலின் ஒரு பக்தர் என்றே கூறவேண்டும். பத்தரமுல்லயில் உள்ள நெலும் மாவத்தைப் பகுதியில் “மொட்டுக் கட்சியின் காரியாலயத்துக்காக அவர் (கலாநிதி ரஞ்சித் பண்டார) தனது வீட்டையே கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.“ இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருப்பதற்கு பெஸில் ராஜபக்ஷவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒருவர் வினாவொன்றை எழுப்பினால் அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உண்டு. பெஸில் அவர்கள் இந்த கால கட்டத்தில் இலங்கையில் இருந்தால் எரிபொருள் விலையை அதிகரிக்க இடமளித்திருக்க மாட்டார். 2005 இல் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு மூல காரணியாக இருந்தவர் பெஸில் ராஜபக்ஷதான். பெஸில் ராஜபக்ஷவின் திருகுதாளங்கள் மற்றும் கடுமையான முயற்சியின் அடிப்படையிலான முகாமைத்துவத்தின் காரணமாகவே 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். பொது ஜன பெரமுன கட்சியை உருவாக்கி அரசாங்கமொன்றையும் பதவியேற்கச் செய்து அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளவும் வலது கையாக செயல்பட்டவரும் பெஸில்தான். இவையெல்லாம் செய்து சாதனை படைக்க முடியுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுத்து, ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு அவருக்கு தகுதியில்லையா?“ கலாநிதி ரஞ்சித் பண்டார இவ்வாறுதான் சுருக்கமாக தனது உரையை முடித்தார்.
மொட்டுக் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபயவுக்கு இரண்டு வருடங்கள் கழிவதற்கு முன்னே புதிய ஜனாதிபதியாக போட்டி போடுவதற்கு அபேட்சகர் ஒருவரைத் தெரிவு செய்யவேண்டியேற்பட்டுள்ளது. மீண்டும் ஒரு தடைவ ஜனாதிபதியாக போட்டி போடும் அளவுக்கு கோட்டாபய பிரகாசிக்கவில்லை. அவர் தோல்விக் கம்பத்தை நோக்கி வேகமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றார். என்றாலும் அடுத்த ஜனாதிபதியாகவும் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டியேற்பட்டுள்ளது. 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி அமெரிக்க பிரசையாக இருந்து கொண்டே பெஸிலுக்கு இலங்கையிலும் ஜனாதிபதியாக பதவியேற்க முடியும்.
மூன்று சகோதரர்களால் (மகிந்த, கோட்டாபய மற்றும் பெஸில்) அரங்கேற்றப்படும் இந்த நாடகத்தில் பொருத்தமற்ற சில காட்சிகள் வரமுடியும். வந்ததுமுண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் உதய கம்மன்பிலவுக்கும், விமல் வீரவன்ஸவுக்கும் எதிராக நடைபெற்றவை இந்த நாடகத்தின் சில சோகக் காட்சிகளாகும். அதில் கம்மன்பிலவுக்கு அவர் அமைச்சுப் பதவியில் இருந்தும் விலகவேண்டுமென அச்சுறுத்தப்பட்டது. அடுத்ததாக இது வரை காலம் விமல் வீரவன்ஸவின் அமைச்சின் கீழ் இயங்கி வந்த “பொஸ்பேட் கம்பனி” தற்போது மஹிந்தானந்த அலுத்கமகேயிடம் கைமாறப்பட்டது. இது இதுவரை காலம் இலங்கையில் பாரிய இலாபத்தை ஈட்டித்தந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நாடகத்தில் பொருத்தமற்ற சில காட்சிகளும் அரங்கேறியுள்ளன. கோட்டாவினால் விமல் வீரவன்ஸவின் அமைச்சிலிருந்தும் சில பகுதிகள் விடுவித்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவ் விடயங்கள் பெஸிலின் சக்திக்கு அப்பாற்பட்ட நிலையில் தான் நடைபெற்றுள்ளன. அடுத்தது எரிபொருள் விலையேற்றம் பற்றிய விடயம் அரசின் கொள்கைக்கேற்பவே நடைபெற்றுள்ளதேயன்றி அது கம்மன்பிலவின் தனிப்பட்ட முயற்சியல்ல என்பதை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த நாடகத்தில் பொருத்தமான சில காட்சிகளும் உள்ளன.
20ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் படி இரட்டை பிரஜையொருவருக்கு இலங்கையில் ஜனாதிபதியாக பதவியேற்க முடியும். கம்மன்பிலவும், விமல் வீரவன்ஸவும் அந்த சட்டத்துக்கு எதிராகவே இயங்கினர். அந்த வேளையில் கோட்டாபயவே ஜனாதிபதியாக இருந்தார். இரட்டை பிரஜா உரிமைக்கு தடை விதித்தால் அதன் மூலம் (ராஜபக்ஷ குடும்பத்தில்) பாதிக்கப்படும் ஒரே நபர் பெஸில் ராஜபக்ஷதான்.
இரட்டை பிரஜையான பெஸிலுக்கு அவ்வாறானதோர் சலுகை வழங்கப்படக் கூடாது என்ற நோக்கத்திற்காகவே கம்மன்பிலவும், விமல் வீரவன்ஸவும் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதியாகலாம் எனும் சட்டத்தை ஏற்க மறுத்தனர். 2020 ஆகஸ்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்பிருந்தே விமல் வீரவன்ஸ அந்த நிலைப்பாட்டில் இருந்தார். கொழும்பு மாவட்டத்தில் “மொட்டு“ பட்டியலில் முதலாவது இடத்துக்கு வரவிருந்த வீரவன்ஸ ஓரங்கட்டப்பட்டார். அம்பாறையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரத் வீரசேகரவைக் கொண்டு அரசாங்கம் வீரவன்ஸவின் இடத்தை நிரப்பியது. அதன்படி கொழும்பில் போட்டியிட்ட விமல் வீரவன்ஸவை விட மிகக் கூடிய வாக்குகளைப் பெற்று “மொட்டு“ கட்சியில் மிகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராக சரத் வீரசேகர முன்னணிக்கு வந்தார்.
அரசு கம்மன்பிலவுக்கு தாக்குதலை ஏற்படுத்திய காரணத்தால் அரசின் 12 சிறிய கட்சிகள் ஒரு குறுகிய காலம் மௌனம் காத்த பின் நித்திரையில் இருந்தும் விழித்துக் கொண்டது. அக்காட்சிகள் கம்மன்பிலவை பாதுகாத்த வண்ணம் அறிவித்தலொன்றையும் வெளியிட்டது. தற்போதைய அரசை பதவியில் அமர்த்துவதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த சிறிய கட்சிகளை ஓரங்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசை ஸ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடினார்.
மேற்படி அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து பார்க்குமிடத்து எதிர்கால “மொட்டு“ வெடித்து சிதறும் அளவுக்கு நெருப்புத் தனலை கக்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. அதே போன்று “ராஜபக்ஷ குழு“ நாட்டைக் காப்பாற்றுவதற்குக் கிடைத்த கடைசி சந்தர்ப்பத்தையும் இழந்து வெற்றிகரமாக ஒருவரோடொருவர் மோதிக் கொண்டிருப்பதைக் காணலாம். “56” மற்றும் அதன் பின் பிறந்த மொட்டுக் குழந்தைகளிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வியொன்று உள்ளது. கோட்டாபயவுக்குப் பின் அடுத்த ஜனாதிபதி அபேட்சகரும் ராஜபக்ஷ இல்லத்திலிருந்துதான் தெரிவு செய்யப்படுவாரா என்பதுதான் அந்தக் கேள்வி. Vidivelli