கெலும் பண்டார, டெய்லி மிரர்
தமிழில் : எம்.ஐ.எம். இர்ஷாத்
கொவிட் பெருந்தொற்றுக்குப் பிந்திய காலத்து உலக ஒழுங்கு முற்றிலும் புதிய வடிவத்தைப் பெறப்போகிறது. வெகுவாக மாறுபட்டதொரு வாழ்வொழுங்கு இப்போதே ஆரம்பித்தாயிற்று. உலகப் பரப்பில் புதிதாக தோன்றியுள்ள பொருளாதார சவால்களும் சமூக, வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களும் மிகத்தெளிவாகத் தெரிய ஆரம்பித்துவிட்டன. மாறிவரும் இச்சூழலை புரிந்துகொள்ளவும் தெளிவுபடுத்தும் நோக்கிலும் அகராதியில் புதிய சொற்றொடர்களும் , வாக்கியப் பிரயோகங்களும் சேர்க்கப்பட்டு வருகிற சூழலில் கொவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலக ஒழுங்கில் மானுட சமூகத்தின் அறிதல் முறையும் மாறுகிறது எனலாம்.
நிலைமை வழமைக்குத் திரும்பவேண்டும். வாழ்க்கையோட்டம் தடைப்படாது மானுடம் மீள இயங்கவேண்டுமென்றால், வைரசின் வேகமாப் பரவும் தன்மையைத் தடுக்கவேண்டுமெனில் ஒட்டுமொத்த மனித சனத்தொகையும் கிருமித்தொற்றுக்கெதிரான நோயெதிர்ப்பு நிர்ப்பீடண நிலையை அடையவேண்டும். உலக சனத்தொகை முழுவதுமாக கொவிட் தடுப்பூசி மருந்தேற்றிக்கொள்வதே அதற்கான ஒரே வழியென கருதப்படுகிற நிலையை நாம் எட்டிவிட்டோம். கால வரையறையில்லாமல் பயணக்கட்டுப்பாடுகள், சந்தை முடக்கம், மட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம் போன்றன மேலும் தொடர்ந்தால் மக்கள் பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்புற்று நலிவடையும் நிலை இன்னும் மோசமாகி எதிர்பாராத விதமாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதும் , அதிகமானோர் தொழில்வாய்ப்பைக் கூட இழக்கும் அபாயம் ஏற்படுவதும் உறுதி. இந்நிலை அவசரமாக இயல்புக்குத் திரும்ப வேண்டிய தேவையை இன்னும் வலுவாக உணரவைத்துவிட்டது.
இப்படியொரு பின்னணியில் நுணுக்கமான திட்டமிட்ட அடிப்படையில் இயல்பு நிலைக்குத் திரும்பும் முன்னெடுப்பு முதன்முதலில் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அண்மையில் முழுமையாக வழமைக்குத் திரும்பும் புதிய நடைமுறைகளை சிங்கப்பூர் அமுல்படுத்தியது. அந்த நாட்டின் கொவிட் தடுப்பு செயலணி அதிரடியான சில நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது.
நாட்டை முடக்குவதில்லை, கொவிட் நோய்த் தொற்றாளர்களின் தொடர்பு நிலையில் இருந்த எனையவர்களைத் தேடும் பொறிமுறை ( mass contact tracing ) நிறுத்தப்பட்டுவிட்டது. தனிமைப்படுத்தல் கட்டாயமற்ற பயணங்களுக்கும், அதிக எண்ணிக்கையானோர் ஒன்றுகூடல்களுக்கும் அனுமதி, தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கையினைக் கணக்கெடுப்பதில்லை. மொத்தத்தில் கொவிட் தொற்று என்பது டெங்கு போல இன்னுமொரு வைரஸ் தொற்று என்கிற அளவில்தான் இனிக் கருதப்படும் என்பதே உண்மையில் இதன் அர்த்தம். தொற்றாளர் எண்ணிக்கையும் பரவும் வீதமும் பூச்சியத்தை எட்டும் வரை இயல்பு நிலைக்குத் திரும்பாமல் காத்திருப்பதென்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்கிற அடிப்படையிலேயே இத்தகைய தீர்மானத்துக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.
“கொவிட் எம்மைவிட்டு ஒருபோதும் நீங்கப் போவதில்லை என்பது எப்படி ஒரு துன்பமான செய்தியோ அதேபோலவே அது அப்படியே எம்மத்தியில் இருக்கும்போதே நாம் இயல்பாக வாழ்க்கையை கொண்டு செல்வதும் சாத்தியமானதே என்பதும் ஒரு நல்ல செய்தியாகும்” இது அண்மையில் சிங்கப்பூரின் வர்த்தக, நிதி, சுகாதார அமைச்சர்கள் மூவரும் இணைந்து The Straits Times பத்திரிகையில் தெரிவித்த கருத்தாகும்.
அதே போலவே ஐக்கிய இராச்சியமும் (UK) சட்டரீதியான கட்டுப்பாடுகளையும், சமூக தொடர்பால்களை தடைசெய்யும் விதிமுறைகளையும் நீக்குவதற்குத் திட்டமிட்டு வருவது அவதானத்துக்குரியது. மருத்துவ சேவை வழங்கும் இடங்கள் மற்றும் பயணிகள் நாட்டின் உள்ளே நுழையும் விமான நிலையங்கள், சாலைவழி எல்லை, துறைமுகங்கள் போன்ற இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளி பேணும் கட்டாய விதிமுறையையும் விரைவில் நீக்கிவிடத் திட்டமிடுகிறார்கள். மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கும் விதிமுறை நீக்கப்படுவதற்கான சட்ட ஏற்பாடுகள் கூட தயாரிக்கப்படுகின்றன. இரவு களியாட்ட விடுதிகளும் மீளத் திறக்கப்பட இருக்கிறது. போசன சாலைகள் , ஹோட்டல்களில் உள்ளே அமர்ந்து பரிமாறுவதற்கு இடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, திருமண நிகழ்வுகள் மற்றும் மரண இறுதிக் கிரியைகளில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை வரையறைகளும் நீக்கப்பட இருக்கிறது.
கொவிட் பெருந்தொற்று பரவும் சூழலில் இருக்கும் ஏனைய நாடுகளும் இத்தகைய நடைமுறைகளூடாக இயல்பு நிலைக்குத் திரும்ப இவ்விரு நாடுகளும் பின்பற்றத்தக்க முன்மாதிரியாக அமையுமா என்பதே இங்கு எம்முன்னால் எழும் வினாவாகும். இது உண்மையில் சாத்தியமானதென்றே கூறவேண்டும்.
இவ்விரு நாடுகளிலும் மொத்த சனத்தொகையில் மிகப் பெருந்தொகையானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிமூலமே இது சாத்தியமானது. விளைவாக நாட்டில் தொற்றுப் பரவும் வீதமும் , மரணவீதமும் வெகுவாகக் குறையும் நிலையும் சாத்தியமானது. இந்தப் பிண்ணனியில்தான் அவர்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்பும் முடிவுக்கு வருகிறார்கள். சனத்தொகையின் 60% ஆனவர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நிலையை அடைந்த நாடுகள் அப்படியான தளர்வு நிலைக்கு வருவது சாத்தியமாகும். இருப்பினும் அதிக நாடுகள் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளைத்தான் தொடர்ந்தும் பேணிவருகின்றன.
இந்தப் பின்னணியில், இலங்கையைப் பொறுத்தவரையில் பொருளாதார கண்ணோட்டத்தில் நோக்குகையில் கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தொடர்வதென்பது உண்மையில் மிகவும் பாரதூரமானதாகும். இருப்பினும் நாம் தீர்மானத்துக்கு வருவதில் இருமுனை அழுத்தங்கள் கடுமையான தாக்கம் செலுத்துகிறது. ஒரு புறம் சுகாதாரத்துறையினர் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேலும் இறுக்கமான கட்டுப்பாடுகளைப் பரிந்துரைக்கின்ற அதேவேளை பொருளாதார விருத்தி கொள்கை வகுப்பாளர்களும், வரத்தக வாணிப துறை சார்ந்தோரும் நாட்டை கிட்டிய சீக்கிரத்திலேயே இயல்புநிலைக்குத் திறந்து விடும்படி அழுத்தம் கொடுக்கிறார்கள். இரு சாராரும் நியாயமான காராணங்களையே முன்வைக்கிறார்கள் என்பதும் உண்மையாகும்.
எது எப்படி இருந்தாலும், இலங்கையைப் பொறுத்தவரையில் மிக அவசரமாக நாட்டை முழுமையாகத் திறக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு நாடு வந்துவிட்டது. மேற்சொன்ன இரு சாராரும் இழுபறியற்று ஒன்றிணைந்த அவசரமான முடிவொன்றை எட்டி இயல்பு நிலைக்குத் திரும்புவதே அவசரத்தேவை. மிகப்பெரும் நஷ்டத்தை அடைந்துள்ள சுற்றுலாத்துறை பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். கொவிட் பெருந்தொற்று முடக்கம் காரணமாக சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டமே தற்போது நாடு எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி வளர்ச்சிவீத வீழ்ச்சியின் சிக்கல் நிலைக்கு முக்கிய காரணமாகும்.
கடந்த வாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோது நாட்டைப் பூட்டி வைத்துக்கொண்டு பொருளாதாரத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்துவது அரசாங்கத்தினால் முடியாத காரியமாகும் , திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் மாத முடிவில் நாட்டின் சனத்தொகையில் 60% ஆனோருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றி நாடு முழுமையாக் திறக்கப்படும் சாத்தியம் இருப்பதாக நேர்மறையான நம்பிக்கையூட்டும் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
மிகக் கடுமையாகப் பரவும் புதிய வைரஸ் மாற்றுருவம் பெறுவது அதிகரிக்கும் இச்சூழலில் 60% க்கு மேலானோர் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையிலேயே நாம் அந்த முடிவுக்கு வரமுடியும் என்பது உண்மையே. தடுப்பூசி விநியோகம் தடைப்படாமல் எமக்குக் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படாத வரையிலும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நாம் இலக்கை அடையமுடியும். ஆனாலும் நிலைமை மாற்றமடையவும் வாய்ப்பிருக்கிறது.
இலங்கை வெளிநாட்டு தடுப்பூசி விநியோகஸ்தர்களையே அதிகம் நம்பி இருப்பதே இதற்குக் காரணமாகும். உதாரணமாக இலங்கை ரஷ்யாவிடம் 14 மில்லியன் ஸ்புட்னிக்-வீ தடுப்பூசிகள் கொள்வனவுக்கான ஏற்பாடுகள் செய்துள்ளது. இருப்பினும் அந்நாட்டில் திடீரென தொற்றுவீதம் அதிகரித்தமையால் எமது தேவைக்கான அளவு தடுப்பூசிகளை அவர்களால் விநியோகம் செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் இந்தியாவில் தொற்று மிக அதிகளவில் உயர்வடைந்தபோது அஸ்ரா-ஸனிகா தடுப்பூசி தயாரிப்பாளரான சேரம் நிறுவனத்தினால் இலங்கையின் தேவைக்காக ஏற்கெனவே கோரப்பட்டிருந்த அளவு விநியோகிக்க முடியாமல் போனது. இவ்வாறான எதிர்பாராத மாற்றங்கள் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கான கால எல்லையை சரியாக நிர்ணயிப்பதில் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதது. – Vidivelli