ஆங்கிலத்தில்: பமோதி வரவிட்ட
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம் கடந்த 13 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் (PTA) 7 (2)ஆம் பிரிவின் கீழேயே அவர் மன்றுக்கு ஆஜர் செய்யப்பட்டார்.
அஹ்னாப் ஜஸீமின் ‘நவரசம்’ எனும் கவிதை நூல் தொடர்பில் உளவியலாளரின் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த உளவியல் அறிக்கை இத்துறை சார்ந்த பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்டித்துள்ளார்கள். திறமையும் ஆற்றலுமுள்ளவர்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
எழுத்தாளர், நூலாசிரியர், பட இயக்குநர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி விசகேச சந்திரசேகரம் மற்றும் GRATIAEN பரிசு பெற்ற நூலாசிரியர் (Upon A Sleepless Isle) மற்றும் விளையாட்டு ஊடகவியலாளருமான அன்ட்ரு பிடெல் பர்ணாந்து ஆகியோர் அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் வெளியிட்டுள்ள உளவியலாளரின் அறிக்கை பற்றி கவலை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை நாட்டில் எழுத்தாளர் ஒருவரை தணிக்கை செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதாகும் எனவும் தெரிவித்துள்ளனர். உளவியலாளரின் இவ்வாறான அறிக்கை நாட்டில் எழுத்தாளர் ஒருவரை தணிக்கை செய்வதற்கு உபயோகப்படுத்தலாம் அவரது குரலை மதிப்பற்றதாக்கலாம் என அன்ட்ரு பிடெல் பர்ணாந்து தெரிவித்துள்ளார்.
நவரசம் கவிதை நூல் தொடர்பான உளவியலாளரின் அறிக்கை அவரை சிறையிலிடுவதற்கான அத்தாட்சியாகும். அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளவைகள் அவரது கவிதை நூலில் அடங்கியுள்ளன என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாதுள்ளது.
இலங்கையின் சிறுபான்மையினரின் குரல்கள் அடிக்கடி நியாயமற்று அடக்கப்படுகிறது. ‘ஜஸீமின் கைதும், அவரது தடுப்புக்காவலையும் கருத்து சுதந்திரத்தை விரும்பும் எவரும் அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் கவலை கொள்வார்கள்’ எனவும் பர்ணாந்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடக மாநாடொன்றில், அஹ்னாப் ஜஸீமின் கைது மற்றும் நீண்ட நாட்கள் தடுப்புக்காவல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அஹ்னாப் ஜஸீமின் கவிதைகள் அடங்கிய நவரசம் நூல் வன்முறைகளைத் தூண்டியுள்ளதாகவும் வெறுப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு துறையினர் குற்றம் சுமத்தியுள்ளமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவிடம் வினவப்பட்டது.
இதற்கு அமைச்சர் வீரசேகர பதிலளிக்கையில் ‘இலங்கையில் தேவையற்ற தடுப்புக்காவல்கள் இடம்பெறுவதில்லை’ என்றார்.
‘இவர் ஒரு கவிஞர் என்று நான் நினைக்கின்றேன். அவர் கவிதை நூல்கள் மற்றும் சிறுவர் புத்தகங்கள் எழுதியுள்ளார். நவரசம் நூலில் அடங்கியுள்ள கவிதைகள் சிறுவர்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியன என்று நான் விளங்கியுள்ளேன். உளவியலாளர் கூட தனது அறிக்கையில் இதனையே தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்கள் சிறுவர்களின் மூளையைச் சலவை செய்து இளம் வயதிலே அவர்களை தீவிரவாதிகளாக உருவாக்க முயற்சிக்கின்றனர். மீண்டும் நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்றதொன்றினை நடாத்த முயற்சிக்கும் அனைவருக்கும் எதிராக நாம் நடவடிக்கைகள் மேற்கொள்வோம் எனவும் அமைச்சர் வீரசேகர தெரிவித்தார்’
அஹ்னாப் ஜஸீமின் குறிப்பிட்ட கவிதை நூலில் நான்கு எதிர்மறையான செய்திகள் அடங்கியுள்ளதாக உளவியலாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது. கவிதைநூலில் அவர் உபயோகித்த வசனங்கள் ஆங்கிலத்தில் அண்மையில் சாஸ் டிரவெட் (Shash Trevett) என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இமாலயத்தைத் தகர்த்தல் (Smashing Himalayas) எனும் சொல் வாசகர்களுக்கு வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது என உளவியலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாலய மலைகள் தொகுதி மிகப் பெரியனவாகும்.
“நீங்கள் ஆறு ஒன்றினைப்போல் இருந்தால்
உங்கள் உங்கள் ஆசைகள் எதுவாக இருந்தாலும் அடைந்துகொள்ளலாம்.
இமாலயங்கள் உங்கள் வழியினைத் தடைசெய்தாலும் உங்களால் அவற்றை இலகுவாக தகர்த்திட முடியும்”
உளவியலாளரின் அறிக்கை கவிதை நூலின் சிங்களம் மற்றும் ஆங்கிலமொழி பெயர்ப்பின் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் பல வித்தியாசங்கள் முரண்பாடுகள் உள்ளன. பல்வேறு அர்த்தங்களும் அடங்கியிருக்கலாம்.
அஹ்னாப் ஜஸீமின் கைது பல்வேறு தரப்பினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரசியல் இலக்கினை அடைந்து கொள்வதற்கானது என தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து கலைஞர்களிடமும் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. அது அவர்களின் கருத்துச் சுதந்திரமாகும் என கலாநிதி சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
‘ எனது அனைத்து செயற்பாடுகளும் நாட்டின் ஜனநாயகத்துக்கு பங்களிக்கும் வகையிலே உள்ளன. எனது எழுத்துக்கள் அவ்வாறே, சில சந்தர்ப்பங்களிலே நாம் தெரிவிப்பவைகளை வரையறுத்துக் கொள்கிறோம். அல்லது கட்டுப்படுத்திக் கொள்கிறோம். இதேவேளை இவ்விடத்தில் நான் தணிக்கை (Censor)என்று சொல்லைப்பயன்படுத்த விரும்பவில்லை. எனது கதைகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் சில பகுதிகள் சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதாக நினைக்கலாம். கருதலாம். என்றாலும் நான் குற்றம் சுமத்தப்படவில்லை. இதற்கு சாத்தியமான காரணங்கள் இருக்கலாம். நான் ஆங்கிலத்தில் எழுதியதற்காக இருக்கலாம். இதனால் நான் குறிப்பாக இலக்கு வைக்கப்படவில்லை என்றார்.
அஹ்னாப் ஜெஸீம் இலக்கு வைக்கப்படுவதற்கும் கைது செய்யப்படுவதற்கும் அரசியல் காரணிகளே பின்னணியாக இருந்திருக்கலாம் எனவும் கலாநிதி சந்திரசேகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதனாலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டு பிடிப்பதற்கு அதிகாரிகள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு ஜெஸீம் அவர்களது பணியினைச் செய்தவற்கு இலகுவான இலக்காக்கியுள்ளார்.
கலாநிதி சந்திரசேகரத்தின் கூற்றுப்படி சட்டத்தில் இரு பிரதான பிரச்சினைகள் உள்ளன. விசாரணைகளின்றி அரசியல் காரணங்களுக்காக அவரை எவ்வாறு தடுத்து வைத்திருக்க முடியும். அத்தோடு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர் மீதான சட்ட நடவடிக்கைகள் நியாயமானதாக இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் (PTA) தடுத்து வைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்படுவதற்கு அனுமதியுள்ளது என்றாலும் தடுப்புக்காவல் கால எல்லை எவ்வித விசாரணைகள் அல்லது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமலே நீடிக்கப்பட்டுள்ளது.
இது நீதி மறுக்கப்பட்டமையாகும். உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினால் ஜெஸீம் நீதிமறுக்கப்பட்ட ஒருவராக்கப்பட்டுள்ளார்.
ஜெஸீமின் தடுப்புக்காவல் தற்போது ஒரு வருடத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஜெஸீமின் சட்டத்தரணிகள் அவரது உடல் நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்கள். ஜெஸீம் மேசையில் சங்கிலியினால் ஒருவார காலத்துக்கும் மேலாக பிணைக்கப்பட்டிருந்ததாகவும் அவருக்கு காலை நேர தேநீர்கூட வழங்கப்படவில்லையெனவும் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. நன்றி சண்டே மோர்னிங் – Vidivelli