(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடிக்கு அடக்கத்துக்காக எடுத்துச் செல்வதில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
வசதியற்ற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மாவட்டங்கள் தோறும் கொவிட் 19 ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு மையவாடி ஒதுக்கப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ரீதியில் மையவாடி ஒதுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர்கருத்து தெரிவிக்கையில் கொவிட் 19 மரணங்கள் அடக்கத்துக்காக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஓட்டமாவடிக்கே எடுத்துச் செல்லப்படுகின்றன.இதனால் மனிதவளம், அரசின் நிதி விரயமாக்கப்படுகிறது. வசதிவாய்ப்பற்றவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அம்பாறை, திருமலை, கண்டி,குருணாகல், மன்னார் போன்ற மாவட்டங்களில் கொவிட் 19 ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு காணிகள் இனங்காணப்பட்டுள்ளன.சில காணிகள் ஏற்கனவே நீர்வழங்கல் சபையினால் அடக்கம் செய்வதற்கு உகந்த இடங்களதாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.
ஓட்டமாவடியில் முஸ்லிம் ஜனாஸாக்கள் மாத்திரமல்ல சிங்கள, தமிழ்,கிறிஸ்தவ மற்றும் வெளிநாட்டவர்களின் சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தூர இடங்களிலிருந்து சடலங்கள் கொண்டுவரப்படுகின்றன. வீண் விரயங்களையும், அசெளகரியங்களையும் தவிர்ப்பதற்காக மாவட்ட ரீதியில் கொவிட் 19 மையவாடிகள் நிறுவப்பட வேண்டும் என்றார்.- Vidivelli