எஸ்.றிபான்
அரசாங்கம் கடும் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. உலக நாடுகளை தாக்கிய கொவிட் – 19 வைரஸின் தாக்கமே இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவுக்கு பிரதான காரணமாகும். இதிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கைகளை எடுத்தாலும் அது சாத்தியமாகுமா என்பதில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஏனெனில் இலங்கையின் பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமாயின் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும். இந்த நிலை ஏற்படுவதற்கு கொவிட் தொற்றிலிருந்து உலக நாடுகள் மீள வேண்டும். ஆனால், உலக வல்லரசு நாடுகளினால் கூட கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை. இதே வேளை, கொவிட் வைரஸ் தொற்றுக் காலத்தில் சீனாவின் பொருளாதரத்தில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொவிட் வைரஸ் தொற்றால் இலங்கை அரசாங்கத்தின் வருமான வழிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கையின் அமைச்சரவையில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தயாராகிக் கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதற்கு அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த நிதி அமைச்சர் பதவி பசில்ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் நாட்டு மக்களிடையே காணப்படும் வறுமையும், பசியும் பசில் வந்துள்ளதால் பறந்து போய்விடுமென்று அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள். இவர்களின் கருத்துக்களின் மூலமாக ஏற்கனவே நிதி அமைச்சராக பதவி வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் நிதி நிலைமையை கையாளுவதில் தோல்வி கண்டுள்ளார் என்று உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
ஆயினும், பசில் ராஜபக்ஷவின் திறமையை குறைத்து மதிப்பிடவும் முடியாது. மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தினதும், கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினதும் இருப்புக்கு மறைகர சக்தியாக செயற்பட்டவர் பசில்ராஜபக்ஷ என்பதனை யாரும் மறுக்க முடியாது. பொதுஜன பெரமுனக் கட்சியின் ஸ்தாபகராகவும், ஒரு குறுகிய காலத்தில் அக்கட்சியை மக்களிடையே கொண்டு சென்று ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு வியூகத்தை வகுத்தவர் பசில்ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால், இலங்கையின் பொருளாதாரத்தை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்குரிய திறமைகள் அவரிடம் உள்ளதென்று நம்பலாம். ஆனால், அவரது திறமைக்கு கொவிட் தொற்றும், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தமும் இடம் கொடுக்குமா என்பதே எமக்கு முன்னால் உள்ள கேள்வியாகும். கொவிட் தொற்றால் உலக நாடுகள் கண்டுள்ள பொருளாதர பின்னடைவை சரி செய்வதற்கு ஆகக் குறைந்தது ஐந்து வருடங்கள் தேவைப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து முன்னாள் பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்துக்கள் அவதானத்திற்குரியதாகும்.
இலங்கை தற்போது 430 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான கடன்களை மீளச்செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நெருக்கடி நிலையில் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, எதிர்வரும் 2 – 3 வருடகாலத்திற்கு அவசியமான நிதியுதவிகளை அதனிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதியுதவி கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்தும் நிதியுதவியைப் பெறமுடியும்.
எமது வெளிநாட்டு இருப்பான 4 பில்லியன் டொலர்களில் பிணையங்களுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டதன் பின்னர் ஒரு பில்லியன் டொலர் குறைவடையும். தற்போது எம்மிடம் இருக்கும் வெளிநாட்டு இருப்பின் பெறுமதி 3 பில்லியன் டொலர்களாகும். அதேபோன்று எரிபொருள் கூட்டுத்தாபனம் 130 கோடி டொலர்களைச் செலுத்தவேண்டிய நிலையிலிருக்கின்றது.
எமது நாட்டின் வணிக வங்கிகளில் டொலர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. வங்கிகள் கடனாளிகளாக மாறியிருக்கின்றன. இதுவரையில் அதுகுறித்த தரவுகள் வெளியிடப்படாத போதிலும், தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி அக்கடன்களின் பெறுமதி 300 கோடி அமெரிக்க டொலராகும்.
ஆகவே இப்போது எமது நாடு மீளச் செலுத்த வேண்டியிருக்கும் கடனின் பெறுமதி 430 கோடி அமெரிக்க டொலர்களாகும். இருப்பினும் எம்மிடம் தற்போதிருக்கும் 300 கோடி டொலர்களில் இவ்வருடம் முடிவடைவதற்குள் 10 கோடி டொலர்களைப் பிணையங்களுக்கான கொடுப்பனவாகச் செலுத்த வேண்டியுள்ளது. எமது நாட்டுக்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் போதியளவு நிதி இல்லாததன் காரணமாக, இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உரத்தை இறக்குமதி செய்வதற்குப் பணமில்லை. இதனால்;தான் உர இறக்குமதியைக் கட்டுப்படுத்தி, சேதன உரத்தை உற்பத்தி செய்யப்போவதாக அரசாங்கம் கூறுகின்றது.
அதேபோன்று நாட்டுமக்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு அவசியமான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான பணம் இல்லாததன் காரணமாகவே 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசி வழங்கப்படும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அண்மையில் சர்வதேச நாணய நிதியமானது அதில் அங்கம் வகிக்கும் 198 உறுப்பு நாடுகளுக்கு அவசியமான நிதியுதவியை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. அதனூடாக எமது நாட்டிற்கு 80 கோடி டொலர் நிதி கிடைக்கப்பெறும். எனினும் தற்போது நாடு முகங் கொடுத்திருக்கும் நிதி நெருக்கடியை ஈடுசெய்வதற்கு அதுவும் போதுமானதல்ல.
எதிர்வரும் வருடத்தில் தொழில் அற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் வாழ்வாதாரத்தை உழைப்பதிலும் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என்று ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆகவே, நாட்டின் இத்தகைய நிதி நிலைமையை புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவினால் மேம்படச் செய்ய முடியுமா என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
இதே வேளை, இலங்கை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் நிதி நெருக்கடியில் இருந்து ஓரளவுக்கு தலை நிமிர்ந்து கொள்வதற்கு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
எல்லாவற்றிக்கும் சீனாவை நம்பிச் செயற்பட்டுக் கொண்டிருப்பதனை தவிர்க்க வேண்டும். சீனா இலங்கைக்கு நிதி அடிப்படையில் உதவிகளை செய்து கொண்டிருந்தாலும், அந்நாடு வழங்கும் கடனுக்கு அதிக வட்டியும், அதிக கட்டுப்பாடுகளும் உள்ளன. இதனால்தான் இலங்கை சீனாவின் கொலணியாக மாறிக் கொண்டிருப்பதாக பௌத்த தேரர்கள் முதல் அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் எனப் பலரும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு வருவதனை ஏனைய வல்லரசு நாடுகளும், மேற்கத்தைய நாடுகளும், இந்தியாவும் விரும்பவில்லை. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறிக் கொண்டு வருவதாக இந்தியாவின் பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையின் சீனச் சார்பு கொள்கையால் ஏனைய வல்லரசு நாடுகளும், பொருளாதார உயர்நிலை நாடுகளும் இலங்கையின் மீது பல்வேறு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றன. வேண்டாத பெண்டாட்டி கைபட்டாலும் குற்றம், கால்பட்டாலும் குற்றம் என்ற நிலைப்பாட்டிலேயே அந்நாடுகள் இருக்கின்றன. இந்நிலையை சீனா தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. இலங்கைக்கு உதவுவது போன்று நாட்டின் பொருளாதாரத்தை உறுஞ்சிக்குடிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இலங்கையின் பொருளாதார நிலை இவ்வாறு இருந்து கொண்டிருக்கின்ற நிலையில் ஆளுங் கட்சியினரிடைய பலத்த முரண்பாடுகள் தோன்றியுள்ளன. அந்த முரண்பாடுகள் வலுத்துக் கொண்டு வருவதனையும் காணக் கூடியதாக இருக்கின்றன.
சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை முன் வைத்து இன்றைய ஆட்சியாளர்களின் வெற்றிக்கு பங்களிப்பு செய்த அமைச்சர்கள் விமல்வீரவன்ச, உதயன்கம்மவில ஆகியோர்களும், அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் பசில்ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவர்களின் அமைச்சர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் அல்லது பறிக்கப்படலாமென்றும் தெரிவிக்கப்படுகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த வேளையிலும் ஆளும் தரப்பிலிருந்து விலகிச் செல்லும் சூழல் வலுத்துக் கொண்டு வருகின்றன. இச்சூழ்நிலையில் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்ல விருப்பமுடையவர்கள் விலகிச் செல்லலாம். அவர்கள் வெளியேறுவதற்கு கதவுகள் திறந்துள்ளன என்று அண்மையில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுமாயின் ஆளுந் தரப்பினரிடையே காணப்படும் முரண்பாடுகள் மேலும் வலுக்கச் செய்யுமென்பதில் ஐயமில்லை.
இத்தகைய சவால்கள் நிறைந்துள்ள சூழலில்தான் நிதி அமைச்சராக பசில்ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதில் வெற்றிவாகை சூடிய பசில்ராஜபக்ஷ நாட்டின் நிதி நெருக்கடியை வெற்றி கொள்வதிலும் வாகை சூடுவாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். -Vidivelli