(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்ளிவாசல்களில் ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டுத் தொழுகைகளில் 100 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோரே ஈடுபட முடியும் எனவும் பள்ளிவாசல்களின் தொழுகைக்கான இடப்பரப்புகளுக்கு ஏற்ப இவ் எண்ணிக்கை வேறுபடலாம் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தொழுகைக்காக ஒன்று கூடுவோரின் எண்ணிக்கை 100 க்கு மேற்படக்கூடாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க பள்ளிவாசல்களில் அதிகூடிய எண்ணிக்கையாக 100 பேரே தொழுகையில் ஈடுபடலாம் என வக்பு சபை அனைத்து பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை பெருநாள் தொழுகையில் ஈடுபடக்கூடியவர்கள் எண்ணிக்கை மற்றும் வழிகாட்டல்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுமெனவும் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு தொழுகையில் ஈடுபடுவோருக்கான கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களின் படி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடுவோர் ஒரு வரிசை இடைவெளியைவிட்டே தொழுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். பள்ளிவாசல்களில் காற்று சீராக்கிகள் (AC) உபயோகப்படுத்தப்படக்கூடாது. அத்தோடு பள்ளிவாசல்களின் யன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கவேண்டும்.
வீடுகளிலே வுழு செய்துகொள்ள வேண்டும். முஸல்லாஹ் விரிப்பு கொண்டு வரப்படவேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் எனும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு ஜும்ஆ தொழுகையின்போது குத்பாவும், தொழுகையும் 30 நிமிட நேரத்துக்குள் நிறைவு செய்யப்படவேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை ஒவ்வோர் பள்ளிவாசல்களும் பின்பற்ற வேண்டுமென வக்பு சபையின் தலைவர் பள்ளிவாசல் நிர்வாகங்களை கோரியுள்ளார்.
கொவிட் 19 தொற்றிலிருந்து சமூகத்தையும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காகவே இவ்வேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.- Vidivelli