நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவி வந்த நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த நோன்புப் பெருநாள் காலத்திலும் பயணத்தடை அமுலபடுத்தப்பட்டு, வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளிவாசல்கள் கூட அச்சமயம் மூடப்பட்டே இருந்தன. எனினும் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் தொழுகைக்காக மீள திறக்கப்பட்டுள்ளன. 100 பேர் வரை ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது. குர்பான் கடமையை பள்ளிவாசல்களில் அன்றி வேறு இடங்களில் நாட்டின் சட்டத்தை மதித்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குர்பான் கடமைக்காக பள்ளிவாசல்களைப் பயன்படுத்த வேண்டாம் என வக்பு சபை விடுத்துள்ள அறிவிப்பை சிலர் விமர்சிப்பதை அவதானிக்க முடிகிறது. எனினும் நாட்டின் நிலைமைகளை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக வக்பு சபை தெளிவுபடுத்தியுள்ளது. விரைவில் இலங்கையில் மாடறுப்புத் தடைச் சட்டம் அமுல்படுத்துவதற்கான நகர்வுகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனை நியாயப்படுத்துவதற்காக பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் குர்பான் கடமையை சிங்கள ஊடகங்கள் தவறாக சித்திரிப்பதற்கான சாத்தியங்களும் இல்லாமல் இல்லை. எனவேதான் தருணம் பார்த்துக் காத்திருக்கும் சக்திகளுக்கு நாம் துணை போகாது புத்திசாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும். பிராணிகளை அறுப்பதற்கென வழக்கமாக ஒதுக்கப்பட்டுள்ள மடுவங்களை இதற்காகப் பயன்படுத்துவதானது கொவிட் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும் இலகுவாக அமையும். எனவே வக்பு சபையின் தீர்மானத்தை நாட்டினதும் சமூகத்தினதும் நலனைக் கருத்திற் கொண்டு நாம் பின்பற்றுவதே சிறந்ததாகும்.
இந் நிலையில் எதிர்வரும் புதன் கிழமை இலங்கை முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர். இந் நிலையில் பெருநாள் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நாம் கொவிட் விதிமுறைகளை மீறிச் செயற்பட ஒருபோதும் முனையக் கூடாது.
தற்போது இலங்கையில் காணப்படும் கொவிட் 19 வைரஸ்களில் புதிய விகாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால், தொற்று வழக்கத்தை விட வேகமாக பரவவும் மட்டுமன்றி கடுமையான நோய் அறிகுறிகளையும் ஏற்படுத்தவும் கூடும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
இந்த மூன்றாவது அலையில் நாட்டிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் ஏராளமான மரணங்கள் சம்பவித்துள்ளன. ஓட்டமாவடி மஜ்மா நகரில் மிகக் குறுகிய காலத்தில் அதிகமான ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தற்போது அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந் நிலையில் நாம் மிகவும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கொவிட் காரணமாக ஏராளமான இளம் வயதினரை முஸ்லிம் சமூகம் இழந்துள்ளமை கவலைக்குரியதாகும்.
எனவே ஆடை கொள்வனவுக்காகவோ அல்லது பெருநாள் கொண்டாட்டங்களுக்காகவோ நாம் அதிகம் ஒன்றுகூடுவோமாயின் அது கொவிட் பரவலுக்கு மேலும் வழிவகுக்கக் கூடும். பெருநாள் தினங்களில் தேவையற்ற பயணங்களையும் ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது முஸ்லிம் பிரதேசங்களில் புதிய கொத்தணி ஒன்று உருவாக வழிவகுக்குமாயின் அதன் பிற்பாடு முஸ்லிம் சமூகம் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். அதற்கு ‘ஹஜ் கொத்தணி’ எனப் பெயர் வைத்து முஸ்லிம்கள் மீது பழி சுமத்துவதற்கு ஒருசாரார் ஆவலோடு காத்திருக்கிறார்கள். எனவேதான் இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வருட ஹஜ் பெருநாளை ஆரவாரமின்றி அமைதியான முறையில் கொண்டாடுவோம். கொவிட் அச்சுறுத்தல் நீங்கி அடுத்த வருடமேனும் எமது நாட்டிலிருந்தும் ஹஜ் மற்றும் உம்ரா கடமைக்காக பயணிப்பதற்கான அனுமதி கிடைப்பதற்கு பிரார்த்திப்போம். அனைவருக்கும் முன்கூட்டிய புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.- Vidivelli