எச்.எம்.எம்.பர்ஸான்
கொரோனா தொற்றினால் மரணமடைந்த நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதிக்கு வருபவர்களிடம் இரகசியமாக பணம் வசூலிப்பதாகவும், அவ்வாறு சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் தெளிவு வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கடந்த 1 ஆம் திகதி வியாழக்கிழமை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
அங்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் ஆகியோர் கருத்துகளை வெளியிட்டனர்.
ஏ.எம்.நெளபர் (தவிசாளர்)
நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகின்ற உடல்களை நல்லடக்கம் செய்கின்ற இடமாக ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதி இன்றும் இருந்து வருகிறது. எந்தவிதமான பணமும் அறவிடப்படாமலே இந்தப் பணிகளை எமது ஓட்டமாவடி பிரதேச சபை செய்து வருகிறது.
இந்த விடயத்தை களங்கப்படுத்தும் விதமாக ஒரு சில சக்திகள் வெளியூர்களில் இருந்து மரணமடைந்த உடல்களுடன் வருகின்ற நபர்களை தொடர்பு கொண்டு நிதிகளை கேட்டு வசூலிப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எங்களது சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்காத காரணத்தால் எங்களால் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாதுள்ளது.
முகநூல்களில் இவ் விடயம் தொடர்பாக எந்தவித ஆதாரங்கள் இல்லாமல் பேசுகின்ற போது தேவையற்ற பிரச்சினைகளும் முரண்பாடுகளும் எழுகின்றது. அத்துடன் அர்ப்பணிப்போடு இந்தப் பணியை செய்து வரும் பிரதேச சபைக்கும் களங்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
முகநூல்களில் இவ்வாறு பதிவிடும் நபர்கள் முறையாக எங்களிடம் நேரடியாக வந்து அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
எந்தவித நோக்கமும், இலாபமும் இல்லாமல் இந்த நாட்டு மக்களுக்காக இவ்வாறான சேவையினை அர்ப்பணிப்புடன் இந்தப் பிரதேசம் செய்து கொண்டிருக்கும் போது இந்தப் பணியை கொச்சைப்படுத்தி, களங்கப்படுத்தி ஜனாஸா நல்லடக்கப் பணியை இல்லாதொழிக்கும் ஒரு சதியாக இது இருக்குமோ எனும் அச்சம் எங்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தனிப்பட்ட கோபதாபங்கள் காரணமாக அல்லது தனிப்பட்ட நோக்கம் காரணமாக பொறுப்பற்ற விதத்தில் நடந்தால் எமது சமூகம் மட்டுமல்ல இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து சமூகமும் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
எஸ்.எம். சிஹாப்தீன் (பிரதேச சபை செயலாளர்)
ஓட்டமாவடி பிரதேசத்துக்கு கொண்டு வரப்படும் ஜனாஸாக்களை வைத்து இரகசியமாக நிதி வசூலிக்கப்படுவதாக வெளிவந்துள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள நாம் பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண கட்டளையிடும் தளபதி ஆகியோர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளோம்.
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு உத்தியோகபூர்வமாக நிதி அறவிட பிரதேச சபைக்கு அதிகாரங்கள் இருந்தும் அதனை நாங்கள் நாட்டு நிலைமை மற்றும் மக்களின் நலன் கருதி தவிர்த்துள்ளோம்.
இவ்வாறு நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தான் ஜனாஸாவை வைத்து ஓட்டமாவடியில் பணம் வசூலிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
ஜனாஸா நல்லடக்கம் செய்கின்ற இடத்துக்கு ஏராளமான தேவைப்பாடுகள் இருந்தும் அதனை உள்ளூர், வெளியூர் வர்த்தக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியுடன் நாம் நிவர்த்தி செய்துள்ளோம்.
நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின்படி பாதுகாப்புப் படையினர், சுகாதாரப் பிரிவினர், மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் இந்த மகத்தான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு சிறந்த முறையில் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நிதி வசூலிப்பு தொடர்பான தகவல்கள் பரவியுள்ளமை அனைவரையும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
எனவே, இவ்வாறான நாசகார செயல்களை யார் செய்தாலும் அவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்ட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.- Vidivelli