ஏ.ஆர்.ஏ.பரீல்
“வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது”என்ற கதையொன்றினை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இக்கதையை சில சந்தர்ப்பங்களில் ஞாபகப்படுத்த வேண்டியேற்படுகிறது.
எமது நாட்டில் இனவாத நோக்குடன் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளை நோக்கும்போது வேதாளமும் முருங்கை மரமுமே எமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தின்ஆட்சிக்காலத்திலும், அதற்கு முன்பு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் மிக வேகமாக செயற்பட்டு நாட்டில் இனவாத விதைகளை விதைத்து வந்த பொதுபல சேனா அமைப்பு நீண்டகால மெளனத்தின் பின்பு மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடக மாநாடொன்றினை நடத்தினார்.
இஸ்லாமிய அடிப்படைவாதம்.
“இஸ்லாமிய அடிப்படைவாதம் தற்போது நாட்டில் வேரூன்றியுள்ளது. இஸ்லாத்தின் பெயரால் கடந்த காலங்களில் நாட்டில் மேலோங்கிய வஹாபிச கொள்கைகள்,அடிப்படைவாத செயற்பாடுகள் இன்னும் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. எந்தவொரு தரப்பினராலும் வெளிப்படையாக இனங்கண்டு கொள்ள முடியாத பல்வேறு கோணங்களில் அவை தொடர்ந்தும், முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிந்தனை ரீதியான ஜிஹாத், பொருளாதார ரீதியான ஜிஹாத் என்பன அரச நிறுவனங்களுக்குள் புகுந்துள்ளன.எனவே நாம் விழிப்படையவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பாரம்பரிய,சம்பிரதாய முஸ்லிம்கள் எங்களை ஆதரிக்கின்றார்கள். அவர்களின் கோரிக்கைக்கு அமையவே நாம் ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்தி இந்நிலைமையினை விளக்குகிறோம். இலங்கையில் வியாபித்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் நாம் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தோம். அந்த செயற்பாடுகள் தற்போது மேலும் வலுவடைந்து வருகிறது. 2015 ஆண்டில் ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தின்கீழ், ஒரு சில அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மத தீவிரவாத மற்றும் அடிப்படைவாத இஸ்லாமிய நடவடிக்கைகள் பற்றி சுட்டிக்காட்டினோம். இந்த இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்கும் நாட்டின்தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்-கும் புதிய தலைமைத்துவமொன்று அவசியம் என வலியுறுத்தினோம்.
2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பாரிய நம்பிக்கையுடன் புதிய ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்தோம். தேர்தலில் பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்கின் மூலம் தெரிவான ஜனாதிபதி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு தலைமைத்துவம் வழங்குவார் என எதிர்பார்த்தோம். நாட்டு மக்களின் நிலைப்பாடும் இதுவாகவே இருந்தது. புதிய தலைமைத்துவத்தின் கீழ் இத்தகைய சில செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் வேறு வழிகளில் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ‘ஜிஹாத்’ கொள்கையானது பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தியதாக உள்ளது என்றும் ஞானசாரதேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம்
ஞானசாரதேரர் கடந்த காலங்களிலும் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். மீண்டும் அந்த நிலைப்பாட்டுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார். முஸ்லிம்கள் சிங்கள யுவதிகளை இஸ்லாத்துக்கு மதம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்பு அவர்களை காதிநீதிமன்றம் ஊடாக இலகுவில் விவாகரத்து செய்து கொள்கின்றனர். காதி நீதிமன்றங்களில் விசாரணைகளுக்காகச் செல்லும் இவ்வாறான பெண்களின் முகத்தில் காதி நீதிபதிகள் காறி உமிழ்கிறார்கள். துப்புகிறார்கள் என்றெல்லாம் அன்று ஞானசார தேரர் கதை கூறினார்.
மீண்டும் அவ்வாறான கதைகளை புதுப்பிக்க ஆரம்பித்திருக்கிறார். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த திருத்த யோசனை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அப்போதைய அமைச்சர் ரவூப் ஹக்கீமினாலே முன்வைக்கப்பட்டது. அத்தோடு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலரும் அச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி வந்தார்கள்.
இச்சட்டத்தில் முஸ்லிம் பெண்களின் திருமணவயதெல்லை உள்ளிட்டபல முக்கிய விடயங்கள் மாற்றப்படவேண்டுமென நாமும் தெரிவித்தோம்.முஸ்லிம் பெண்கள்13,14,15,16 வயதுகளிலும் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். நாட்டின்பொதுச்சட்டத்துக்கு அமைய இது தண்டனைக்குரிய குற்றமாகும்.இது சிறுவர் துஷ்பிரயோகமாகவே கருதப்படும். எனவே நாட்டில் இரு சட்டங்கள் அமுலில் இருக்க முடியாது.இச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் என்று ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு உலமா சபை எதிர்ப்பு தெரிவிக்கிறது. உலமா சபையின் தப்லீக் பிரிவினர் எனும் குழுவினர் எதிர்க்கின்றனர்.அவர்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று தங்கியிருக்கும் காலத்தில் அம்மாவட்டங்களில் மனைவியினரை வைத்துக்கொள்கின்றனர். இது சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள 4 மனைவியர்களுக்கு மேலதிகமானவர்களாகும். இவர்களே சட்டங்களில் திருத்தங்களை எதிர்க்கின்றனர்.
காதி நீதிமன்றத்தின் மூலம் தாபரிப்பு பணம் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் செயற்படுத்தப்படுவதில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் எம்மிடம் முறையிடுகிறார்கள். இத்தீர்ப்புகள் அடிப்படைவாதத்தை நோக்கி தள்ளப்படுவதற்கான அழுத்தத்தை வீடுகளுக்குள்ளேயே ஏற்படுத்துகின்றன.இந்நிலையில் முஸ்லிம்களின் விவகாரங்கள் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட்டு பொதுச்சட்டத்தின்கீழ் உள்வாங்கப்படவேண்டும் என என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் ஞானசார தேரர் கூறுவது போன்றோ அல்லது அமைச்சரவையின் பெரும்பான்மை இன அமைச்சர்கள் தீர்மானித்தது போன்றோ அல்லாமல் முஸ்லிம் சமூகத்தின் ஆணையுடனே திருத்தப்படவேண்டும் என்பதே சமூகத்தின் நிலைப்பாடாகும்.
புர்கா, நிகாப் தடை
சில மாதங்களுக்கு முன்பு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர சமர்ப்பித்த முஸ்லிம் பெண்களின் புர்கா மற்றும் நிகாபை தடைசெய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு என்ன நடந்தது எனவும் தேரர் கேள்வி யெழுப்புயுள்ளார்.
தற்போது முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட விவகாரம் பேசு பொருளாகியதன் பின்பு புர்கா மற்றும் நிகாப் தடை விவகாரம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் சரத்வீரசேகரவினால் சமர்ப் பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் ‘விடிவெள்ளி’ ஆராய்ந்தபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரியவருகிறது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை இது தொடர்பில் பெற்றுக்கொள்ளப்படவேண்டுமென பிரதமர் கோரியுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
அமைச்சர் அலி சப்ரி, உஸ்தாத், மன்சூர் ரொஹான் குணரத்ன
ஞானசாரதேரர் நீதியமைச்சர் அலிசப்ரி, உஸ்தாத் மன்சூர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன மீதும் குற்றம் சுமத்தியுள்ளார். அமைச்சர் அலிசப்ரி, உஸ்தாத் மன்சூரின் மாணவராக இருந்துள்ளார். இந்நிலையில் அலிசப்ரியுடைய சில செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது, திருப்தியுற முடியாது என்றும் கூறியுள்ளார்.
ரொஹான் குணரத்ன பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தவர்.அத்தோடு நாட்டில் போர் இடம்பெற்று வந்த காலப்பகுதியில் அதனை முடிவுக்குக் கொண்டுவர முடியாதெனக் கூறியவர். இலங்கையில் அடிப்படைவாத தீவிரவாத இயக்கங்கள் இயங்கவில்லை எனக் கூறியவர்.இவ்வாறான ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய பதவிக்கு ஏன் நியமிக்கப்படவேண்டும் எனவும் ஞானசார தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நீதியமைச்சர் அலிசப்ரி உஸ்தாத் மன்சூரின் மாணவராக இருந்தார். அதனால் அடிப்படைவாத கருத்துகளை உள்வாங்கியிருப்பார் என்ற கருத்துப்பட ஞானசாரதேரர் கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கதாகும். ஞானசார தேரர் மீண்டும் நாட்டில் வெறுப்பு உணர்வுகள் மூலம் முறுகல் நிலையை உருவாக்க முயற்சிப்பதாக கருதமுடிகிறது. உயிர்த்த ஞாயிறு அறிக்கைகளிலும் ஞானசாரதேரரின் செயற்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் உரைகள் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதத்தின் பால் தள்ளியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்தப்கள் புனரமைப்பு திட்டம்
நாடெங்கும் இயங்கிவரும் மக்தப்களை வக்புசபையின் கீழ் கொண்டு வர மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் ஞானசார தேரர் சாடியுள்ளார். இது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.இந்த தீர்மானத்துக்கு சூத்திரதாரிகளாக அமைச்சர் அலிசப்ரி, உஸ்தாத் மன்சூர், ரொஹான் குணரத்ன ஆகியோரை சாடியுள்ளார்.
பன்முக சமூகங்கள் வாழும் இலங்கையில் சிறந்த தலைமுறையினரைக் கட்டியெழுப்ப சிறார்களுக்கான இஸ்லாமிய அறநெறிப்பாடசாலைகள் எனும் திட்டத்தையே வக்புசபை முன்வைத்துள்ளது.
இதன்கீழ் மக்தப் புனரமைப்புத்திட்டத்தில் பயன்பெற்றுவரும் சிறார்கள் அனைவரையும் வக்பு சபையின் ‘இஸ்லாமிய அறநெறிப்பாடசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்
ஞானசார தேரர்
ஞானசார தேரர் மீண்டும் இனவாதத்தை கக்குவது ஆபத்தானதாகும். நாட்டில் நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கு ஞானசார தேரர் தொடர்பில் உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு வழங்கியுள்ள சிபாரிசுகளை அரசு கவனத்திற்கொள்ள வேண்டும்.- Vidivelli