எஸ்.றிபான்
முஸ்லிம் அரசியலின் வீரியம் முற்றாக தேய்வடைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்பதற்கு எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளுக்கும் தைரியம் இல்லாத நிலையே காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் விசாரிக்கப்படவில்லை. அவரை விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துவரும் ஒவ்வொரு வேளையிலும் நீதிபதிகளில் ஒருவர் வழக்கிலிருந்து தாமாக விலகிக் கொள்கின்றனர். இதுவரைக்கும் நான்கு நீதிபதிகள் விலகியுள்ளார்கள்.
ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அவர்கள் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் பதவிகளின் மீது ஆசை வைத்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் புத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தாங்கள் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் பதவியை கோரியதாகவும், அந்த அமைச்சர் பதவி கிடைக்குமென்ற நம்பிக்கையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்குரிய எண்ணத்தை முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதனிடையே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரம் மற்றும் இரசாயன வளமாக்கிகளின் விலைகளில் பாரிய அதிகரிப்பும், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன. வியாபாரிகள் அவற்றை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள். நாளாந்தம் விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்கள் அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஒரு வார்த்தையேனும் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பேசவில்லை. அரசாங்கத்திடம் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கேட்டு கோரிக்கை விடுத்தால் தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர் பதவி கிடைக்காது போய்விடும் என்ற பதவி ஆசையில் வாய் திறக்காது இருக்கின்றார்கள்.
இதேவேளை, அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதில் இவர்களிடையே பலத்த போட்டி காணப்படுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்காது. ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம். இதனால் அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்பவர்களில் தானும் ஒருவராக இருக்க வேண்டுமென்று காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 20வது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாகவே செயற்பட்டுக் கொண்டார்கள். இப்போது ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய ஓட்டத்தை பசில்ராஜபக் ஷ அமெரிக்காவிலிருந்து நாட்டிற்கு திரும்பியதன் பின்னரே அவதானிக்க முடிகின்றது. பசில்ராஜபக் ஷவுடன்தான் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்குரிய உடன்பாடுகளைக் கண்டிருந்தார்கள். பசில்ராஜபக் ஷ அமெரிக்கா சென்றதும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த கவலையில் இருந்தார்கள். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவிட்டு தாம் நடுவீதியில் நிற்பது போன்றதொரு உணர்வை இவர்கள் கொண்டிருந்தார்கள்.
அவர் மீண்டும் நாட்டிற்கு திரும்புவாரா என்பது கூட கேள்விக் குறியாகவே இருந்தது. இப்போது பசில்ராஜபக் ஷ பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டுள்ளார். பசில்ராஜபக் ஷவின் வருகை முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை போன உயிர் திரும்பி வந்ததாகவே இருக்கின்றது.
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் தரப்பினராகச் செயற்படுவதனை விடவும் ஆளும் கட்சி வரிசையில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் முடிவினை எடுத்துள்ளார்கள்.
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டால், அதன் மூலமாக அவர்களது கட்சியை வளர்க்க முடியாது. அவர்கள் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் போட்டியிட வேண்டும். அதனால், பொதுஜன பெரமுனக் கட்சியின் உறுப்பினர்களாக மாற வேண்டும். அப்போதுதான் அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ளலாம். அமைச்சர் பதவியையே தமது இலக்காகக் கொண்டுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர் தமது கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றும் பட்சத்தில் அக்கட்சியில் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஓர் இடத்தில் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, பொதுஜன பெரமுனவுடன் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் அவர்களினாலும் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஆளுந்தரப்பினர் என்ற அடிப்படையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையே உள்ளது. அவர்களில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அலிசப்ரி நீதி அமைச்சராக இருந்து கொண்டிருக்கின்றார். அவர் நீதி அமைச்சர் என்றாலும், ஆட்சியாளர்களின் திட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட முடியும்.
முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு அரசாங்கமும் அதனை மாற்றியமைக்க முயற்சி எடுத்த போதிலும் முஸ்லிம்களினால் காட்டப்பட்ட எதிர்ப்புக்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சிகளினால் அந்த நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன. இன்றைய நிலையில் கடந்த காலத்தைப் போன்று தமது எதிர்ப்பைக் காட்டுவதற்குரிய வீரியம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், இப்போது ஆட்சியாளர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளார்கள். ஆட்சியாளர்களுக்கும் பௌத்த இனவாதத் தேரர்களுக்கும் இடையே பலத்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அதனால், முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் உள்ளவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும், சிலவற்றை இல்லாமல் செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காதிநீதிமன்ற முறைமையை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த ஆலோசனையை தான் முன்வைக்கவில்லை. அது குறித்து என்னால் எதுவும் பேச முடியாதென்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
காதிநீதிமன்ற முறையிலும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள குறைகளையும் நிவர்த்தி செய்வதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. ஆனால், அவற்றை முழுமையாக இல்லாமல் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் முஸ்லிம் களின் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனவாத ஒடுக்குதலாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். ஆதலால், நீதி அமைச்சர் இதில் நழுவல் போக்கை கடைப்பிடித்து தமது சமூகப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளாது செயற்படுவதற்கு முன்வருதல் வேண்டும்.
இதே வேளை, ஆட்சியாளர்கள் பௌத்த இனவாதத் தேரர்களின் முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்கும், தேர்தல் காலங்களில் தாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தயங்கப் போவதில்லை என்று காட்டுவதற்கு முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவே தெரிகின்றது. – Vidivelli