முஸ்லிம்களின் தனியார் சட்டம் மற்றும் ஏனைய முஸ்லிம்களின் விடயங்களில் அரசாங்கம் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடி முடிவு எடுக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். எம் ஹரீஸ் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்,
ஜி.எஸ்.பி பிளஸ் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை நிறுத்தப்படுமா? என்கின்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற, மத உரிமைகள் மீறப்படுகின்ற விடயங்களுக்காக ஐரோப்பிய யூனியன் இலங்கை சம்பந்தமான கடும் போக்கை கையாள உள்ளது.
மத உரிமை சம்பந்தமாக பல விமர்சனங்கள் சர்வதேச மட்டத்தில் இருக்கின்றன. இப்போது நீதி அமைச்சர் முஸ்லிம்களின் தனியார் திருமணச் சட்டத்தை திருத்துவதற்காக முயற்சிகளை செய்து வருகின்றார். இது தொடர்பில் எங்களுடைய 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்து பேசி இருந்தோம். அவர் இது விடயமாக மேலதிக சில திருத்தங்களை செய்வதாக கூறியிருக்கின்றார். ஆனால் இது விடயமாக கிழக்கு மாகாண ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மெளலவி ஆதம்பாவா என்னுடன் தொடர்பு கொண்டு எங்களுடைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இது விடயமாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்புக்கு மாறாக முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்தவொரு தீர்மானங்களும் எடுத்துவிட வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.- Vidivelli