கவிஞர் அஹ்னாப் ஜசீமிற்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எழுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், விசாரணைகள் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை (செவ்வாய்கிழமை) பிற்போடப்பட்டுள்ளன. அஹ்னாப் ஜசீமை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் 7(1) அல்லது 7(2) ஆகிய சரத்துக்களில் எதன்கீழ் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவது என்பது குறித்த தெளிவைப்பெறல் மற்றும் அஹ்னாப் ஜசீமிற்கு எதிரான ஆதாரங்களின் சுருக்கத்தை சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்காக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது எதிர்வரும் 10 ஆம் திகதியிலிருந்து (சனிக்கிழமை) சிறைச்சாலைகளுக்கு கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்பினரதும் வருகைகள் மற்றும் பார்வையிடல் என்பன இடைநிறுத்தப்படுவது குறித்த அறிக்கை சிறைச்சாலை அதிகாரியினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் சட்டத்தரணிகள் தமது தரப்பு கைதிகளை அரைமணித்தியாலம் வரையில் சந்திப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விபரங்களும் இணைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, அஹ்னாபை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைத்தமை தொடர்பிலான விவகாரத்தில், தமது மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை அடுத்து வரும் இரு வாரங்களுக்குள் நீதிமன்றுக்கு அரிவிக்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று சட்ட மா அதிபருக்கு அறிவித்தது.
அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு கடந்த திங்களன்று பரிசீலனைக்கு வந்த போது, நீதிமன்றம் இதனை அறிவித்தது.
அன்றைய தினம் குறித்த மனு மீதான பரிசீலனைகள் உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சுரசேன, எஸ், துறை ராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
அதன்பின்னர் மன்றில் விடயங்களை முன் வைத்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, குறித்த மனு தொடர்பில் தமக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகள் இருப்பதாக கூறினார். அதனை முன் வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், தற்போது அஹ்னாப் ஜசீம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்போது அஹ்னாப் ஜசீம் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கணக ஈஸ்வரன், அஹ்னாப் ஜசீம் கைது செய்யப்பட்டபோது , அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தம் அமுலில் இருந்தது. அதன் பிரகாரம் ஜனாதிபதி அஹ்னாபை தடுத்து வைக்க தடுப்புக் காவல் உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளமை சட்ட விரோதமானது. அந்த தவறை விளக்கமறியல் ஊடாக சரி செய்ய முடியாது. அவர் விடுவிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் சட்ட மா அதிபரின் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை ஆராய்ந்து அதற்கு பதிலளிக்கவும் தயார் என குறிப்பிட்டார்.
இந் நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன் வைக்க இரு வார கால அவகாசம் வழங்கியதுடன், அதிலிருந்து ஒரு வாரம் முறைப்பாட்டாளர் தரப்புக்கு பதில் வாதங்களை முன் வைக்க சந்தர்ப்பம் அளித்தது, அதன்படி மனு மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும், ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.- Vidivelli