ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்களை உபசரித்த அநுராதபுர முஸ்லிம்கள்
தேவாலயத்தையும் பள்ளிவாசலையும் இணைத்த சமாதான பாலம்
கயான் யத்தேஹிகே
மூன்று தசாப்தகால யுத்தமும் பயங்கரவாதமும் சந்தேகம், வெறுப்புணர்வு மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி மனிதநேயத்தை இல்லாமல் செய்துவிட்டது. இதன் விளைவாக இன மற்றும் மத ரீதியில் பிளவுகள் ஏற்பட்டன. ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை சந்தேகத்துடன் பார்த்தது. இனவாத நோக்கம் கொண்ட சிலர் இதனை கையாண்டதோடு, முரண்பாடுகளையும் உருவாக்கினர்.
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையற்ற தன்மையை குறைப்பதற்காக யுத்தத்தின் பின்னரான காலத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், சாம்பலின் கீழ் புகைந்துகொண்டிருக்கும் தீப்பொறியைப் போல இனவாதம் புகைந்து கொண்டிருந்தது. அதனை பற்றவைக்க ஒரு சிறிய சம்பவம் போதுமானது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் சற்றும் எதிர்பாராத வகையில் பயங்கரவாதிகளால் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பிய மற்றும் சந்தேகமும் அவநம்பிக்கையும் மீண்டும் சரிசெய்யப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
சில பயங்கரவாத குழுக்களால் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் பின்னர், நாட்டிலுள்ள சகல முஸ்லிம் மக்களும் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்பட்டனர். மற்றும் சந்தேகத்துடன் நடத்தப்பட்டனர். எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் மக்களின் செயற்பாடுகளை தடுப்பதற்காக சமூக ஊடகங்களை தடைசெய்யவேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. முஸ்லிம் மக்களின் கடைகளுக்குச் செல்வதை சிங்கள மக்கள் நிராகரிக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது. சமூகங்கள் மீண்டும் பிரிந்துசென்றன. ஒரு முக்கியமான கட்டத்தில் ஒற்றுமை மற்றும் இணக்கத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் அவசியம். இன ஒற்றுமைக்கான சிறந்த திட்டமொன்று அநுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டதை அவதானித்தோம். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்த தினத்தன்று அநுராதபுரம் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக குழு உறுப்பினர்கள், அங்குள்ள புனித ஜோசப் தேவாலயத்திற்குச் சென்றதோடு, பக்தர்களை உபசரித்தனர். பௌத்த சமூகத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
முன்னாளர் மாகாண சபை உறுப்பினரும் புனருதய நிகழ்ச்சித்திட்டத்தின் தலைவருமான ஜயலத் பண்டார செனவிரத்னவின் தலைமையில் இந்நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பு, வேவா பெந்தி ரட மற்றும் மதங்களுக்கிடையிலான கூட்டமைப்பின் பெண்கள் முன்னணி (Women’s Front of Weva Bendi Rata and Inter – religious) ஆகியன இந்நிகழ்ச்சித்திட்டத்துடன் கைகோர்த்தன.
“30 வருட கால யுத்தத்தால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டோம்” என ஜயலத் பண்டார குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “தெற்கிலுள்ள ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களை விட, அநுராதபுரத்திலுள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். யுத்தம் காரணமாக, சமாதானமும் நல்லிணக்கமும் வெறும் வார்த்தைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது. சமுதாயத்தில் அதனை செயற்பாட்டு ரீதியில் நாம் காணவில்லை. இந்த வார்த்தைகளுக்கு நாம் உயிர்கொடுக்க வேண்டும். சந்தேகத்தையும் அச்சத்தையும் வெறுப்புகளையும் ஊக்குவிக்கும் பலர் உள்ள நிலையில், எமது செயற்பாடுகள் மிக முக்கியமானவை.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்கள் அச்சமடைந்தனர். பேருந்தில் ஒரு முஸ்லிம் நபரின் அருகில் அமர்வதற்கு சிங்கள மக்கள் பயந்தனர். முஸ்லிம் மக்களின் கடைகளில் பொருட்கள் வாங்குவதை சிங்கள மக்கள் பலர் புறக்கணித்தனர். இந்த இடைவெளியை குறைப்பதற்காக ஏதாவது செய்ய விரும்பினேன். ஏதேனும் செய்யவேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து தேவாலயத்திலிருந்து திரும்பும் கிறிஸ்தவ மக்களை முஸ்லிம்கள் உபசரிப்பது சிறந்ததென கருதினேன். மக்கள் மத்தியில் சமாதானத்தை கட்டியெழுப்பும் ஒரு முன்னெடுப்பாக இது அமையுமென எதிர்பார்த்தேன்” என்றார்.
அநுராதபுரம் புனித ஜோசப் தேவாலயத்தைச் சேர்ந்த அருட்தந்தை திலீப் மற்றும் எரந்த ஆகியோருடன் திரு. செனவிரத்ன கலந்துரையாடினார். அதன் பின்னர், இத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் அநுராதபுரம் ஜும்மா பள்ளிவாசலின் தலைமை மௌலவி மொஹமட் கையூம் தலைமையிலான பள்ளிவாசல் நிர்வாக குழுவினருடன் இணைந்தார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் வருட நினைவேந்தலின்போது அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் கடுமையான பாதுகாப்பின் கீழ் இருந்தன” என செனவிரத்ன குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை யாராவது குழப்ப முயற்சிக்கலாம் என அஞ்சினோம். அவ்வாறு இடம்பெற்றால் நல்லிணக்க செயற்பாட்டிற்கான சகல முயற்சிகளும் வீணாகிவிடும். ஆகையால், இந்நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக நாம் விளம்பரம் செய்யவில்லை. தேவாலய ஆராதனையில் கலந்துகொண்டு திரும்பிய மக்களுக்கு முஸ்லிம்கள் பால் ஆகாரம் கொடுத்து உபசரித்தனர். இந்த உபசரிப்பு, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு இடையே நல்லுறவை கட்டியெழுப்பியது. கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய வணக்கஸ்தலங்களின் மதத் தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, கலந்துரையாடி, தமது உறவை மேம்படுத்திக்கொண்டனர். தற்போதைய சூழ்நிலையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான கூடுதல் நிகழ்ச்சித்திட்டங்கள் அவசியம்” என்றார்.
அநுராதபுரம் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் உறுப்பினர் எம்.பி. சமத் அவர்களும் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு பலத்த ஆதரவை வழங்கினர். “சஹரான் மற்றும் அவரது குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் பின்னர், சகல முஸ்லிம்களையும் மக்கள் சந்தேகத்துடனேயே பார்த்தனர். ஒருசிலரே தீவிரவாதிகள் என்ற உண்மையை மறந்து, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் நோக்கி விரல்நீட்டினர். இந்த நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் மற்றும் ஏனைய சமூகத்தினர் வாழ்கின்றனர். நாம் ஒரு தேசமாக வளர்ச்சியடைய விரும்பினால், இச்சமூகங்கள் அனைத்தும் கைகோர்க்க வேண்டும். ஒருசிலர் தமது அரசியல் இலாபங்களுக்காக இந்த ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
தேஷ்யே குருனன்சேலாகே கெதர என்பது எனது குடும்பப் பெயராகும். இது சிங்கள குடும்பப் பெயர். நாம் பிரிந்துசென்று போராடினால் எமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த நாட்டை பாதுகாத்து தக்கவைத்துக்கொள்ள முடியுமா? ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் உருவாக்கப்பட்ட சிங்கள – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான இடைவெளி இன்னும் காணப்படுகின்றது. எமது உறவுகளை மேம்படுத்திக்கொள்ள எமது இரண்டு சமூகங்களும் தியாகங்களை செய்ய வேண்டும். இரு தரப்பும் சிறிய விடயங்களிலிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டுமென நான் கருதுகின்றேன். ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில் பங்கேற்ற கிறிஸ்தவ மக்களின் துயரங்களை நாம் பகிர்ந்துகொண்டோம். சமாதான விரும்பிகளாக, மக்கள் சகோதரத்துவத்தை பகிர்ந்துகொள்ள ஒன்றுபட்டால் மாத்திரமே நாம் இனவாதிகளை தோற்கடிக்க முடியும். இது ஒரு சிறிய முயற்சி என்றாலும், பிரதான சக்திகள் இனவாதத்தை பரப்புகின்றதன் பின்னணியில் நாட்டின் சகல இடங்களிலும் இதுபோன்ற சிறு மாற்றுத்திட்டங்களை நாம் முன்னெடுப்பது அவசியம். எமது எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கு அது மிகவும் அவசியமாகும்.“ என சமத் மேலும் கூறுகிறார்.
நன்றி journo.lk
Vidivelli