காதி நீதிமன்ற முறை பொருத்தமில்லையெனில் குடும்ப நீதிமன்றங்கள் குறித்து சிந்திக்கலாம்
ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் நீதியமைச்சருக்கு பிரத்தியேக கடிதம்
ஏ.ஆர்.ஏ.பரீல்
காதி நீதிமன்ற கட்டமைப்பினுள் இடம்பெறும் முறைகேடுகள், துஷ்பிரயோகம் காரணமாக காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்கிறோம். அதனால் காதி நீதிமன்ற முறைமையை மேம்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் முஸ்லிம் சட்டத்தைப் பற்றிய அறிவைக் கொண்ட, பொறுப்பான, தகுதிவாய்ந்தவர்களை காதிநீதிபதிகளாக நியமியுங்கள் என நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உலமாக்கள் மூவரினால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித், அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அஷ்ரப், அஷ்ஷெய்க் முயீஸ் புகாரி என்போர் கையொப்பமிட்டு நீதியமைச்சருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக நாம் நியமிக்கப்படுவதற்கு முன்பு சில முக்கிய விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை ஏற்கனவே தீர்மானம் மேற்கொண்டிருந்ததால் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி எம்மால் ஆலோசனைகள் முன்வைக்கப்படவில்லை.
ஒரு சமூகத்திற்கு காதிநீதிமன்ற முறையை வழங்குவது அனைத்து குடிமக்களுக்குமான சமத்துவக் கொள்கையை மீறும் என்று அமைச்சரவை கருதினால் அனைத்து சமூகங்களின் தனியார் சட்டங்களும், குடும்பம் தொடர்பான சட்டங்களும் ஒரு சிறப்பு அமைப்பின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என நாங்கள் முன்மொழிகிறோம். ‘குடும்ப நீதிமன்றங்கள்’ என்று அழைக்கப்படும் நீதிமன்றங்கள் ஏனைய நாடுகளிலும் மிக வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது.
இந்த நீதிமன்றம் அனைத்து சமூகங்களின் தனியார் சட்டங்களுக்கும் தேவையான விதிகளை உள்ளடக்கி ஒரு விசாரணை முறையைக் கொண்டிருக்கும் அதே நேரம் அனைத்து தரப்பினரின் கண்ணியம், மரியாதை மற்றும் தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பதாய் அமையும். மேலும் ஒரு தம்பதி விவாகரத்து வழக்கை தாக்கல் செய்வதற்கு முன்னர் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்றமுறையில் மத்தியஸ்தம் மற்றும் சமூக செயல் முறைகள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் கையாள தேவையான பயிற்சிகள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் குடும்ப விவகாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
திருமண வயதெல்லை
திருமண வயதெல்லை 18 என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் விருப்பத்துடன் பாலியல் செயல்களில் ஈடுபடுவது சட்டபூர்வமானது என்று சட்டம் கூறுகிறது. திருமணத்திற்கான குறைந்த பட்ச வயது 18 ஆக உயர்த்தப்படுவதால் 18 வயதுக்குக் குறைந்த பாலியல் சம்பந்தமான நடவடிக்கைகள் சட்டவிரோதமாகவும், தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட வேண்டுமென நாம் முன்மொழிகிறோம்.
பலதார மணம்
அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் சுன்னா மற்றும் இஸ்லாமிய நீதித்துறை ஆகியவற்றின் அடிப்படையில் தான் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் அமைந்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பலதார மணம் அனுமதிக்கப்படுகிறது. எனவே அனைத்து விதமான துஷ்பிரயோகங்களையும் அகற்றும் வண்ணம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் இப்பலதார மணத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
ஒரு சமூகத்திற்கு மாத்திரம் இத்தகைய அனுமதி வழங்குவது அனைத்து குடிமக்களினதும் சமத்துவத்தின் கொள்கையை மீறும் என்று அமைச்சரவை கருதினால், பொது திருமண சட்டத்திலும் பலதார திருமணங்களுக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli