எம்.எப்.எம்.பஸீர்
புலஸ்தினி மகேந்திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்து மர்மமாக உள்ள ஒரு பெண். நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான சாராவுக்கு என்ன நடந்தது என்பது விடை காணப்படாத கேள்வியாக தொடர்கிறது.
கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்துக்கொண்ட தேசிய தெளஹீத் ஜமா அத் தலைவனாக செயற்பட்ட சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான கும்பலினால் 8 தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பிலான விசாரணைகளிலேயே சாரா தொடர்பில் முதலில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. குறிப்பாக கட்டுவாபிட்டிய தேவாலய குண்டுவெடிப்பு சம்பவத்தின் குண்டுதாரியின் மனைவி என அடையாளம் காணப்பட்ட சாரா, அந்த குண்டுதாரியை காதலித்து, மதம் மாறி அவனை திருமணம் செய்திருந்தார். ( அவரது திருமணம் குறித்த சர்ச்சைகளை இக்கட்டுரை ஆராயவில்லை)
இந் நிலையில், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்களை நடாத்திய குண்டுதாரிகளான சஹ்ரானினதும் , ஹஸ்தூனினதும் மனைவிமார் உட்பட மேலும் பலர் சாய்ந்தமருது – வெலிவேரியன் பகுதியில் வீடொன்றில் மறைந்திருப்பது தெரியவரவே, அதனை சுற்றி வளைத்த போது, அங்கு இருந்த தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து தமது உயிர்களை மாய்த்துக்கொண்டிருந்தனர். அதனையடுத்து இராணுவத்தினர் முன்னெடுத்த தேடுதலில், சஹ்ரானின் மனைவி ஹாதியாவும், அவரது மகளும் படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் சிகிச்சைகளிடையே சஹ்ரானின் மனைவியிடம் முன்னெடுத்த விசாரணைகளில் சி.ஐ.டி. சிறப்புக் குழு பல்வேறு தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.
அதன்படி, குறித்த சாய்ந்தமருது வீடு சுற்றிவளைக்கப்படும் போது அங்கு இருந்தவர்கள் யார் யார் என்பதை சி.ஐ.டி. வெளிப்படுத்தியது. கொழும்பிலிருந்து அவர்கள் சாய்ந்தமருதுக்கு செல்லும் வழியே, குருணாகல் மாவட்டம் – கிரிஉல்ல பகுதி துணிக்கடையில் அடுத்த கட்ட தாக்குதலுக்கு என சந்தேகிக்கப்படும் வெள்ளை ஆடைகளை கொள்வனவு செய்யும் சி.சி.ரி.வி. காட்சிகளும் அந்த தொடர் விசாரணைகளில் மீட்கப்பட்டன. அந்த சி.சி.ரி.வி. காட்சிகளிலும் சாரா உள்ளிட்டவர்கள் தெளிவாக விசாரணையாளர்களால் அடையாளம் காணப்பட்டனர்.
இவ்வாறான பின்னணியில், சட்டத் தேவைக்காக சாய்ந்தமருது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்களின் ஆள் அடையாளத்தை நிரூபிக்க, சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்கு மூலத்தினை அடிப்படையாக கொண்டு டி.என்.ஏ. பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதாவது, சம்பவ இடத்திலிருந்து ஸ்தல தடயவியல் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட உயிரியல் கூறுகள், குண்டு வெடிக்கச் செய்யும் போது வீட்டில் இருந்தவர்கள் என சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டவர்களின் இரத்த உறவுகளிடம் பெறப்பட்ட உயிரியல் கூறுகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டன.
இதன்போது ஹாதியாவின் வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைவரினதும் டி.என்.ஏ.க்கள் கண்டறியப்பட்டு அவர்களது இறப்பு அறிவியல் ரீதியில் உறுதி செய்யப்பட்ட போதும், ஹாதியா பெயர் குறிப்பிட்ட சாரா தொடர்பில் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைகள் தோல்வியடைந்தன. ( ஹாதியாவின் வாக்கு மூலத்தை தவிர வேறு சுயாதீனமான சாட்சிகள் ஊடாகவும் அவ்வீட்டில் இருந்தவர்கள் யார் என்பதை விசாரணையாளர்கள் கண்டறிந்திருந்தனர்)
இதனையடுத்து அது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சாராவின் தாயின் டி.என்.ஏ. மாதிரிகளை பெற்றே, சம்பவ இடத்திலிருந்த உயிரியல் கூறுகளுடன் அது ஒப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் சாய்ந்தமருது வீட்டில் குண்டு வெடிக்கச் செய்யும் போது சாரா அங்கிருந்ததாக சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் கண்கண்ட சாட்சியும், சாரா சாய்ந்தமருது வீட்டுக்கு சென்றமைக்கான அறிவியல் தடயங்களும் இருக்கும் நிலையில், குண்டு வெடிப்பின் பின்னர் அவருக்கு என்ன ஆனது என்ற தெளிவான விம்பம் இதுவரை விசாரணையாளர்களிடம் இல்லை.
இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் இடம்பெற முன்னர், இந்தியாவின் உளவுப் பிரிவொன்றூடாக அது குறித்த தகவல்கள் இலங்கையுடன் பகிரப்பட்டிருந்தன. அதன்படி, சாரா அந்த உளவுப் பிரிவின் முகவராக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக கலந்துரையாடலுக்கு உள்ளாகின.
ஏப்ரல் 21 தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய கும்பலுக்கு தலைவனாக செயற்பட்டதாக நம்பப்படும் சஹ்ரான் ஹாஷீம், அவரது சகோதரர் ரில்வான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமா அத்தின் சிரேஷ்ட தலைவராக கருதப்படும் நெளபர் மெளலவி ஆகியோர் மிக நெருங்கிய தொடர்புகளை பேணிய, இந்திய மாநில உளவுத் துறை ஒன்றின் அபூ ஹிந்த் எனும் பெயரால் அறியப்படும் நபர் தொடர்பில் சி.ஐ.டி. சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, தற்கொலை தாக்குதல் இடம்பெறப்போகிறது என்பதையும், இலக்குகளையும் அபூ ஹிந்த் அறிந்திருந்திருக்கலாம் என பரவலான சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அந்த தகவல்கள் சாரா ஊடாக பரிமாற்றப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகமும் இல்லாமல் இல்லை.
தற்கொலைதாரி சஹ்ரான் ஹாஷீமின் மனைவி பாத்திமா ஹாதியாவிடம் ஆணைக் குழு சாட்சியம் பெற்ற போது, அபூ ஹிந்த் எனும் ஒருவருடன் சஹ்ரானுக்கு 2017 அரையாண்டிலிருந்து தொடர்புகள் இருந்தமை வெளிப்படுத்தப்பட்டதாக அவ்வறிக்கை கூறுகிறது.
இந் நிலையில் அபூ ஹிந்த் தொடர்பில், தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத பிரபல பயங்கரவாத விவகாரம் தொடர்பிலான சர்வதேச நிபுணர் ஒருவர் மிக ரகசியமான சாட்சியம் ஒன்றினை வழங்கியுள்ளதாக ஆணைக் குழுவின் அறிக்கை கூறுகின்றது. குறித்த நிபுணரின் சாட்சியத்துக்கு அமைய அபூ ஹிந்த் என்பது இந்திய மாநில உளவுத் துறை ஒன்று வடிவமைத்த கதாபாத்திரமாகும்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சிரியாவுக்கு செல்லும் இந்தியர்கள் இலங்கைக்கு வந்து செல்வது தொடர்பிலான விடயங்களை ஆராயும் உளவு நடவடிக்கை தொடர்பில் அந்த உளவுப் பிரிவு அபூ ஹிந்த் எனும் கதா பாத்திரத்தை ஈடுபடுத்தியுள்ளதாக குறித்த நிபுணர் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக் குழுவின் அறிக்கை கூறுகின்றது.
ஏப்ரல் 21 முதல் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் தொடர்பிலும் குறித்த மூலத்தின் ஊடாகவே தகவல் தேசிய உளவுச் சேவைக்கு கிடைத்துள்ள நிலையில், அதன் பிரகாரமே கொச்சிக்கடை தேவாலயம் அருகே குண்டு நிரப்பப்பட்ட வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்கு மூலத்தின் பிரகாரம், சஹ்ரான் உள்ளிட்ட தற்கொலைதாரிகள் எங்கு தாக்குதல் நடாத்தப் போகிறார்கள் என்பது இறுதிவரை இரகசியமாக இருந்ததாக கூறபப்டுகிறது. ஹாதியா கூட அதனை அறிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் அந்த தற்கொலை கும்பல், தாக்குதலுக்கான சத்தியப் பிரமாணம் செய்யும் வீடியோ சாராவின் கையடக்கத் தொலைபேசியில் இருந்ததாகவும், அதனை அவர் ஹாதியாவுக்கு காட்டியதாகவும் ஹாதியாவின் வாக்கு மூலம் ஒன்று கூறுகிறது. அது ஹஸ்தூன் ஊடாக அவருக்கு கிடைத்திருக்கலாம் என ஹாதியாவின் வாக்கு மூலம் கூறும் நிலையில், சாய்ந்தமருது வீட்டில் இருக்கும் போது சாரா அடிக்கடி தொலைபேசி அழைப்பில் இருந்தமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சாரா தொடர்பில் எந்த தகவலும் இதுவரை இல்லை.
இவ்வாறான பின்னணியிலேயே, தற்கொலை தாக்குதல்களின் பின்னரான காலப்பகுதியில், சாராவை தாம் கண்டதாகவும், களுவாஞ்சிக்குடி முன்னாள் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் அவரைக் கண்டதாகவும் இரு சாட்சியாளர்கள் ஊடாக, தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தகவல் கிடைத்திருந்தது.
அதன்படி அவ்விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டு, களுவாஞ்சிக் குடி பொலிஸ் நிலைய முன்னாள் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் சாராவின் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இன்றுவரை அவ்விருவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்பில் உள்ளனர். எனினும் சாரா பற்றிய மர்மம் தொடர்கிறது.
கடந்தவாரம் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சாரா தொடர்பில் இரு முறை டி.என்.ஏ. பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இரண்டினதும் பெறுபேறுகளும் ஒரே முடிவை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மூன்றாவது முறையாக டி.என்.ஏ. பரிசோதனை ஒன்றினை முன்னெடுப்பது தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்று வருவதாகவும் கூறினார்.
இவ்வாறான நிலையில், சாராவை தாக்குதலின் பின்னர் கண்டதாக முன் வைக்கப்பட்டுள்ள இரு சாட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளதாகவும், சாரா உயிருடன் இருக்கிறார் என்பதற்கான எந்த சான்றுகளும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொது மக்கள் பதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவ்வாறு கூறினாலும், சாரா இறந்துவிட்டார் என முடிவுக்கு வரவும் விசாரணையாளர்களிடம் எந்த சான்றுகளும் இல்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகர அளித்த சாட்சியங்களில் சாய்ந்தமருது – வெலிவேரியன் பகுதியில் தற்கொலைதாரிகள் கும்பல் குண்டை வெடிக்கச் செய்து இறந்த பின்னர் நடாத்தப்பட்ட சோதனைகளில் அவுஸ்திரேலிய சிம் அட்டைகள் மீட்கப்பட்டிருந்தமை தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் முழுமையான அனைத்து அறிக்கைகள், பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலங்களையும் படித்து ஆராய்ந்த, முன்னாள் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் நினைப்பதைவிட பாரிய சதித் திட்டம் ஒன்று உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் சாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் அங்கு அவர் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் தகவல்கள் வெளிப்பட்டிருப்பினும் அவை எவையும் சாட்சிகள் ஊடாக உறுதி செய்யப்படவில்லை.
சஹ்ரான் கும்பலுடனேயே இருந்து சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலின் பின்னர் இறந்ததாக எந்த அறிவியல் தடயங்களும் இல்லாத, கட்டுவாபிட்டி தேவாலய தாக்குதல்தாரியின் மனைவி சாரா ஜெஸ்மின் குறித்த விசாரணைகளையும் இடை நிறுத்தாது உண்மைகளை வெளிப்படுத்த தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு தனது இறுதி அறிக்கையின் 17 ஆம் அத்தியாயம் ஊடாக பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறானதோர் பின்னணியில் சாரா உயிருடன் இருக்கிறாரா?, அவ்வாறு இருப்பின் எங்கே உள்ளார்? அவர் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் எவ்வாறான பங்களிப்பினை அளித்தார் போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்படும் போது மட்டுமே, தாக்குதலின் பின்னணியில் உள்ள ‘ மாஸ்டர் மைன்ட்’ யார் என்பதை நெருங்க முடியும்.
தற்கொலை தாக்குதல்கள் தொடர்பிலான முக்கிய விடயங்களை வெளிப்படுத்த முடியுமான சாரா விவகாரம் விடையின்றி தெளிவற்றதாக தொடரும் நிலையில் ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், அதற்கு முன்னர் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றதாக கூறப்படும் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் 881 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 724 பேர் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டதாகவும் ஏனையோர் தாக்குதலுக்கு முன்னரான பல்வேறு அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பொலிஸாரின் தகவல் பிரகாரம், இந்த தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் 2019 ஏப்ரல் மாதம் அவ்வந்த பொலிஸ் நிலையங்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சி.ஐ.டி.யினரிடம் கையளிக்கப்பட்டன.
அது முதல் இந்த தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் 724 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 227 பேர் விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 83 பேர் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 205 மில்லியன் ரூபா வரையிலான பணம், தங்க நகைகள், மாணிக்கக் கற்கள் பொலிஸாரினால் இவ்விசாரணைகளில் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 100 வங்கிக் கணக்குகளில் உள்ள 134 மில்லியன் ரூபா பணம் வரை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் தொடர்பில் 9800 வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 21 ஆயிரம் தொலைபேசி இலக்கங்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
1000 ஏக்கர் வரையிலான நிலம் பெளதீக ரீதியாக பொலிஸ் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன. கேகாலை, புத்தளம் மாவட்டங்களில் இவ்வாறான நிலங்கள் பொலிஸ் பொறுப்பில் உள்ளன.
இது இவ்வாறிருக்க இந்த விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் போதே, தற்கொலை குண்டுதாரிகளுக்கு தலைமை வகித்த சஹ்ரான் ஹஷீம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அடிப்படைவாத நடவடிக்கைகளை திட்டமிட்டு பரப்பியமை தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டது. எனவே பொலிஸார், தாக்குதல் சம்பவங்களுக்கு மேலதிகமாக 2018 ஆம் ஆண்டு முதல் அடிப்படைவாதத்தை வளர்க்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டது.
இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு அடிப்படைவாத வகுப்புக்களை அவர் நடாத்தி இருந்தார். அந்த வகுப்புக்களில் பங்கேற்று, தற்கொலை தாக்குதல்கள் நடாத்த ‘பையத்’ எனும் உறுதி மொழி எடுத்த 84 ஆண்கள், 7 பெண்கள் இதுவரை விசாரணைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் முகப்புத்தகம், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் ஊடாக அடிப்படைவாத நடவடிக்கைகளை ஊக்குவித்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தாக்குதல் நடாத்தப்படுவதற்கு முன்னர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த, அடிப்படைவாத நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவி ஒத்தாசை அளித்த 23 ஆண்கள் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 2018 ஆம் ஆண்டு முதல் சஹ்ரான் ஹஷீமின் அடிப்படைவாத நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வெளிநாடுகளில் இருந்து நிதியளித்த, ஆதரவளித்த 15 பேர் கட்டார், டுபாய், குவைட் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மொத்தமாக இதுவரை 800 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் கடந்த வாரம் இந்த தகவல்களை வெளியிட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் செயற்பாடுகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் கீழ் இடம்பெற்று வந்தன. அதற்காக சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் 54 பேர் உதவி வந்தனர்.
எது எப்படியோ, முன்னாள் சட்ட மா அதிபர் வெளிப்படுத்திச் சென்ற, தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பாரிய சதி விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக உணர உணர முடியவில்லை. – Vidivelli