(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்கள் உள்ளடங்கிய காணிகளை கையகப்படுத்திக் கொள்வதற்காக இனந்தெரியாத சக்திகள் செயற்பட்டு வருகின்றன. இவ்வாறான காணிகளை இச் சக்திகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக நிரந்தரமான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென முகுது மகாவிகாரை அதிபதி வரகாபொல இந்திர சிறி தேரர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்பட்டு வரும் தொல்பொருள் பிரதேசங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘அருகம் குடா கரையோரத்தில் உள்ள வனபாதுகாப்பு திணைக்களம் மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் என்பன காணி அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் அரசியல் அதிகாரத்துடன் தொடர்புடைய நபர்கள் அரச அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து இந்த காணி கொள்ளையில் சூட்சகமான முறையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் உள்ளன எனவும் தேரர் தெரிவித்தார்.
கொவிட்19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள இச்சந்தர்ப்பத்தில் குடாகல்லி, அருகம்பை, பசரச்சேனை, கடொலான உட்பட்ட காணிகள் துப்புரவு செய்யப்பட்ட வருகிறது. மரங்கள் வெட்டப்படுகின்றன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனபாதுகாப்பு திணைக்களம் என்பனவற்றுக்கு ஏற்கனவே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இது இரண்டாவது சஹ்ரானின் வருகையோ என எனக்கு சந்தேகமாக உள்ளது. தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் இந் நிலைமையை கவனத்தில் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து வணக்க ஸ்தலங்களுக்கும் ஒவ்வோர் பன்சலை நிர்மாணிக்கப்பட வேண்டுமென நான் சிபாரிசு செய்கிறேன்.
அனைத்து தொல்பொருள் பிரதேசங்களையும் உள்ளடக்கி தொல்பொருள் வலயமாக பெயரிட்டு எல்லை அடையாளப்படுத்தப்பட வேண்டும். எல்லைக் கற்கள் நடப்படவேண்டும். பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்து இடங்களிலும் இடி விழுந்தால் கூட அறியாத வகையில் உறங்கிக்கொண்டிருக்கும் அதிகாரிகள் சேவையில் இருந்து அகற்றப்பட வேண்டும். செயற்திறன் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பும் இக்கோரிக்கை அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்டது.
முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் பொலிஸில் முறையிட்டாலும் அதனால் எதுவித பலனுமில்லை. பொலிஸார் இவ்வாறு அசமந்தப் போக்காக செயற்படக்கூடாது. பிரதேசங்களின் சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை செயற்படுத்தும் அரசியல் சக்திகள் இருக்கின்றன. இயங்கி வருகின்றன. அவர்களுக்கு எதிராக பேசினால் தங்கள் பதவி நட்சத்திரங்கள் இழக்கப்படுவோம், இடமாற்றம் செய்யப்படுவோம் என்ற பயம் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மதிப்புள்ள காணிகளை இரகசியமாக அழிக்கும் சக்திகள் தலையெடுக்கலாம்’ என்றார்.- Vidivelli