தீவிரவாத சிந்தனைகளிலிருந்து இளைஞர்களை பாதுகாக்க சிறுபான்மை கட்சிகள் முன்வரவில்லை
எம்.எச்.முஹம்மதின் நினைவு தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் உரை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மறைந்த முன்னாள் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலர் தேசிய அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் பெற்று நாட்டுக்கும், சமூகத்துக்கும் பாரிய சேவையாற்றியிருக்கிறார்கள். மக்களின் சமூகத்தின் தேவைகளை இனங்கண்டு அவர்களது எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்பட்டிருக்கிறார்கள். இதனாலே இளைஞர்கள் தீவிரவாத கொள்கைகளின்பால் செல்லவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.முஹம்மதின் 100 ஆவது நினைவு தினம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், காலம் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.எச். முஹம்மதின் அரசியல் வாழ்க்கை பின்பற்றப்பட வேண்டியதொன்றாகும். முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சராக பதவி வகித்து முஸ்லிம் சமூகத்தின் பாராட்டுதல்களைப் பெற்றவராவார். சமூகத்துக்காக சேவை செய்வதற்காக தனியான இன ரீதியிலான அரசியல் கட்சி தேவை என அவர் கருதவில்லை. அவர் இனரீதியிலான அல்லது சமய ரீதியிலான அரசியற் கட்சியொன்றினை உருவாக்கிக் கொள்ளவில்லை. இதில் அவர் நம்பிக்கை கொண்டிருக்கவுமில்லை. அவர் எமது நாட்டின் தேசிய அரசியல் கட்சியொன்றின் மூலமே சேவையாற்றினார்.
இவர் போன்று எமது நாட்டில் மேலும் சிலர் செயற்பட்டுள்ளனர். இவர்களில் எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சராக நீண்ட காலம் சேவையாற்றிய மற்றும் ஏ.சி.எஸ். ஹமீதைக் குறிப்பிடலாம். அவர் இன ரீதியான, சமய ரீதியான அரசியல் கட்சியை சார்ந்தவராக இருக்கவில்லை. அவர் தேசிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல உறுப்பினராக இருந்து சேவையாற்றியவர். மற்றும் மாக்கான் மாக்காரின் குடும்பத்தையும் இங்கு குறிப்பிட்டுக் கூறலாம்.
இவ்வகையில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்மதின் அரசியல் வாழ்க்கை பின்பற்றப்பட வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் நாட்டில் இயங்கிவரும் பல்வேறு அரசியல் கட்சிகள் இன, மத ரீதியிலான அரசியல் கட்சிகள் என்பன நாட்டின் நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியில் பல்வேறு இன உறுப்பினர்கள் பதவி வகித்து சேவையாற்றியிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் தேசிய ரீதியில் ஆற்றிய சேவைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அவரது உயரிய சேவைகள், செயற்பாடுகள் என்பன பாராட்டத்தக்கனவாகும். அவரது சேவைகள் தீவிரவாதத்துக்கு எதிராகவே இருந்தன. தீவிரவாதத்துக்கு வித்திடப்படவில்லை. நீண்ட காலம் பொரல்லை தொகுதியின் அங்கத்தவராக இருந்து அனைத்து சமூகத்துக்கும் பாரிய சேவைகளைச் செய்துள்ளார். பாமர மக்களின் தேவைகளை உணர்ந்து இனங்கண்டு அவர் சேவையாற்றினார். மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் அறிந்திருந்தார். மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டதால் இளைஞர்கள் தீவிரவாதத்துக்கு உட்படவில்லை.
எம்.எச்.முஹம்மதின் சில சேவைகளை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுக் கூறுவது அவசியம் என்பதனாலேயே அவர் பற்றிய விபரங்களை நான் தெரிவித்தேன்.
நாட்டிலுள்ள சிறுபான்மை கட்சிகள் இளைஞர்களின் மனதை வெற்றி கொண்டு செயற்படுவதிலிருந்தும் தூரமாயிருக்கிறார்கள். இந்நிலைமை தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு காரணமாகும். எனவே இந்நிலைமையை உணர்ந்து சிறுபான்மை கட்சிகள் செயற்பட வேண்டும் என்றார்.-Vidivelli