கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
பழைய பல்லவி
‘தனது எல்லைகளைப் பாதுகாக்க இஸ்ரவேலுக்கு உரிமையுண்டு’ என்ற பல்லவியை ஒவ்வொரு பலஸ்தீனப் போர் தொடங்கும்போதும் அமெரிக்கா தொடக்கம் அனைத்து மேற்கு நாடுகளின் தலைவர்களும் பாடுவதுண்டு. இம்முறையும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் அதைத்தான் பாடினார். ஆனால் அவர்களுள் எவராவது எப்போதாவது எங்கேயாவது அந்த எல்லைகள் எவை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்களா? இல்லவே இல்லை. ஏனெனில் இஸ்ரவேலின் எல்லை இன்னும் விரிவடைந்துகொண்டே செல்கிறது. ஒவ்வொரு போருக்குப் பின்னும் இஸ்ரவேல் புதிதாக அரபு நிலங்களைக் கைப்பற்றி அங்கே யூதர்களைக் குடியேற்றி அதன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டே செல்கிறது. மேற்கு நாடுகள் அதனை ஆதரித்துக்கொண்டே இருக்கின்றன. சுருங்கக் கூறினால், உதுமானியப் பேரரசை முதலாவது உலகப் போருடன் சின்னாபின்னமாக்கிக் கூறுபோட எடுக்கப்பட்ட முயற்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. இஸ்ரவேலூடாக அந்த முயற்சிகள் தொடர்கின்றன. கடந்தகால ஐரோப்பிய வரலாற்றை அறிந்திராதவர்களுக்கு இதனை விளங்கிக் கொள்வது கஷ்டமாக இருக்கலாம். அதனை இங்கே சுருக்கமாக விளக்குவோம்.
மேற்கின் இரு ஆறாப் புண்கள்
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பா விழித்தெழுந்து முஸ்லிம்களின் உலக ஆதிக்கத்தை முறியடிக்க முற்படும் வரையிலும் ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் ஓர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி உலக நாகரிகத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். அதன் பின்னரும்கூட இருபதாம் நூற்றாண்டில் முதலாவது உலகப்போர் முடியும் வரையிலும் உதுமானியப் பேரரசு ஐரோப்பாவின் எழுச்சிக்கும் உலக ஆக்கிரமிப்புக்கம் ஒரு சவாலாக விளங்கியது. முஸ்லிம்களின் நாகரிகம் வளர்ந்திராவிட்டால் ஐரோப்பாவே பதினாறாம் நூற்றாண்டில் விழிப்புற்றிருக்குமா என்பது வேறு விடயம். ஆனாலும், அந்த மகோன்னத வரலாற்றை எப்படியாவது மூடிமறைத்து முஸ்லிம்களின் நாகரிகத்தை உலகத்தின் ஓர் அழிவுப்பாதையாகச் சித்தரிப்பதற்காக வரலாற்று ஆய்வுகள் என்ற போர்வையில் பல வெளியீடுகள் இப்போது வெளிவருகின்றன. எனினும் உண்மைகள் மிதப்புக் கட்டை போன்றவை. எப்படித்தான் அவற்றை நீருக்குள் அழுத்த முயன்றாலும் இறுதியில் அவை மேலெழுந்து மிதந்தே தீரும்.
இந்த நீண்ட வரலாற்றுக்குள் ஒழிந்திருக்கும் இரண்டு உண்மைகளை இங்கே நினைவுகூரல் வேண்டும். ஒன்று, பலஸ்தீனம் நபி இப்றாகிமின் வழிவந்த யூதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று சமயங்களினதும் கேந்திரத்தலம். முஸ்லிம்களின் இரண்டாவது கலிபா உமர் இப்னு கத்தாப் 637இல் பைசாந்தியரிடமிருந்து பலஸ்தீனத்தைக் கைப்பற்றியது தொடக்கம் 1099இல் அதாவது முதலாவது சிலுவை யுத்தத்தில் ஐரோப்பியரின் கைகளுக்குள் அது கைமாறி அதன் பின்னர் 1187இல் சலாகுதீன் ஐயூபினால் மீட்கப்பட்டு இன்றுவரை பலஸ்தீனம் முஸ்லிம்களின் கைளிலேயே இருப்பது மேற்கு நாடுகளின் கண்களுக்குள் முள்ளாய் குத்துகிறது. 1948இல் ஐ. நா. சபையில் பலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. ஆனால் கிறித்தவர்களின் பிபிலிய வாக்கியங்களின் பிரகாரம் இஸ்ரவேல் ஜெருசலத்தைக் கைப்பற்றியபின்னர்தான் ஈசா மீண்டும் பிறப்பார் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ஆகவே பலஸ்தீனத்தை இஸ்ரவேல் கைப்பற்ற எடுக்கும் முயற்சிகளை மேற்குலகு என்றுமே கண்டிக்கப் போவதில்லை. மறைமுகமாகவாவது அதற்கு ஆதரவு வழங்கும்.
இரண்டாவது உண்மையும் முதலாவதைப் போன்று கிறித்துவம் சம்பந்தப்பட்டதே. எவ்வாறு பலஸ்தீனம் முஸ்லிம்களின் கைகளுக்குள் வீழ்ந்ததோ அதே போன்று கிழக்கு உரோம சாம்ராஜ்யத்தின் தலைநகரான கொன்ஸ்தாந்திநோப்பிலும் 1453இல் உதுமானிய கலிபா முகம்மதின் படைகளால் கைப்பற்றப்பட்டு இன்று துருக்கியின் இஸ்தாம்புலாக இருப்பது மேற்குலகுக்கு ஓர் ஆறாப்புண். அத்துடன் அங்கே உரோம சக்கரவர்த்தி முதலாவது ஜஸ்ரினியன் நிர்மாணித்த ஹெகியா சோபியா என்ற தேவாலயத்தை துருக்கி அண்மையில் ஒரு பள்ளிவாசலாக மாற்றியமை இப்புண்ணை இன்னும் ஆழமாக்கியுள்ளது.
இவை இரண்டையும்விட இன்னும் எத்தனையோ சம்பவங்கள் முஸ்லிம் உலகுக்கும் மேற்குலகுக்கும் இடையே வளர்ந்த சிக்கலான வரலாற்றுறவை விளங்கிக்கொள்ள உதவும். அவற்றையெல்லாம் பட்டியலிடுவதானால் ஒரு நூலையே எழுதி விடலாம். ஆனால் இந்த இரண்டு உண்மைகளையும் பின்னணியாகக் கொண்டு அவற்றிலிருந்து மேற்குலகு கற்ற பாடம் என்ன என்பதை அறியவேண்டும். ஏனெனில், அந்தப் பாடம்தான் இன்றுவரை இவ்விரு உலகுகளுக்குமிடையே உள்ள உறவினுக்கு அத்திவாரமாக அமைகின்றது. அந்த அத்திவாரத்தில் கட்டப்பட்டதே மத்தியகிழக்கு அரசியல் ஒழுங்கும் அதில் இஸ்ரவேலின் செயற்பாடுகளும்.
இஸ்லாமிய அச்சமும் அதனைப்
போக்க உபாயமும்
முஸ்லிம்களை, அதிலும் முஸ்லிம் மத்திய கிழக்கை, ஒன்றாக இணையவிட்டு அன்று இஸ்லாம் தோற்றுவித்த அறிவுத் தாகத்தையும் விழிப்புணர்வையும் அவர்களிடம் மீண்டும் மிளிர இடமளித்தால் ஒரு பலம்பொருந்திய வல்லரசே அங்கு உருவாகலாம் என்ற அச்சம் மேற்கினை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அவ்வாறு நடந்தால் அது மேற்கின் உலக ஆதிக்கத்தை நிச்சயம் பாதிக்கும் அல்லவா? அந்தப் பாடத்தைத்தான் அன்றைய வரலாறு அவர்களுக்குப் புகட்டியது. உமையாக்களின் ஆட்சி பிரான்சின் எல்லைவரை படரவில்லையா? அதைத்தடுத்து நிறுத்தத்தானே 833இல் பொய்ற்றியோஸ் யுத்தம் உமையாக்களின் தளபதி அப்துல் ரகுமானின் படைக்கெதிராக நடைபெற்று அப்படை தோற்கடிக்கப்பட்டது? உமையாக்களின் வாரிசான இன்னுமொரு அப்துல் ரகுமான்தானே அந்தலூஸையும் (ஸ்பானியா) கைப்பற்றி அதனை உலகின் ஜொலிக்கும் ஓர் ஆபரணம் என வருணிக்கும் அளவுக்கு ஓர் ஒப்பற்ற கலாசாரச் சோலையாக மாற்றினார்? அப்பாசியர்களோ ஐரோப்பாவை ஓர் இருண்ட கண்டமாகக் கருதி ஐரோப்பியரை மடமையின் உறைவிடமென ஒதுக்கவில்லையா? உதுமானியப் படைகள் ஐரோப்பாவுக்குள் ஊடுருவி பல பிரதேசங்களை தமது ஆட்சியின்கீழ் கொண்டுவரவில்லையா? இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் பதினாறாம் நூற்றாண்டில் விழிப்படைந்த ஐரோப்பா முஸ்லிம்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் முயற்சிகளை துரிதமாக மேற்கொண்டது.
அந்த முயற்சிகளின் ஓர் அத்தியாயம்தான் நாடு கண்டுபிடித்தல் என்ற இயக்கமும். உதாரணமாக, கொலம்பஸ் அமெரிக்காவை இந்தியாவென்று நினைத்துச் சென்றது உண்மையிலேயே நாடு கண்டுபிடிக்க அல்ல, அங்கே முஸ்லிம்கள் வாழ்கிறார்களெனக் கேள்வியுற்று அவர்களைக் கொன்று குவித்துக் கிறித்துவத்தைப் பரப்புவதற்காகவே, என்று அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வு நிறுவியுள்ளது. அதேபோன்று வஸ்கொடகாமாவின் இந்தியக் கண்டுபிடிப்பும் முஸ்லிம்களின் கடல் ஆதிக்கத்தை முறியடிப்பதற்காகவே ஏற்பட்டது. இவ்வாறான ஒரு முஸ்லிம் எதிர்ப்புப் போராட்டத்தின் உச்ச முயற்சியே அன்றைய உதுமானியப் பேரரசை பிரித்தானியாவும் பிரான்சும் ருஷ்யாவும் சேர்ந்து கூறுபோட்டு, தேசியம் என்ற போர்வையில் சில புதிய நாடுகளை அதற்குள் உருவாக்கி அப்பேரரசைச் சின்னாபின்னமாக்கிய வரலாறு. அதனைத் தொடர்ந்து அப்புதிய நாடுகளெல்லாம் (சவூதி அரேபியாவைத்தவிர) மேற்கின் குடியேற்ற நாடுகளாகின. இருந்தும் பலஸ்தீனத்தையும் இஸ்தாம்புலையும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
முஸ்லிம் பேரரசைச் சீரழித்து சுதந்திர நாடுகளை அங்கே உருவாக்கி அவற்றை மேற்கின் ஆதரவாளர்களாக வளர்த்துவிட்ட போதிலும் அவை மீண்டும் ஒரு நாள் இஸ்லாம் என்ற குடையின்கீழ் ஒன்று திரளாதென்பதற்கு என்ன ஆதாரம்? எனவே அவர்களுக்கு மத்தியில் முஸ்லிம் அல்லாத, அதேசமயம் மிக்க பலமுள்ள, ஒரு நாட்டை அங்கே உருவாக்கிவிடுதல் நல்லதல்லவா? இந்தச் சதியின் விளைவால் உருவாக்கப்பட்டதே இன்றைய இஸ்ரவேல். அந்தச் சதியின் பிரதான சூத்திரதாரிதான் பிரித்தாள்வதிலே சரித்திரப்புகழ்பெற்ற பிரித்தானியா.
அத்துடன், இஸ்ரவேலை அரபு மக்களின் நடுவே நுழைத்துவிட்டதால் மேற்கு நாடுகள் அதுவரை சுமந்த ஒரு குற்ற உணர்வையும் மறப்பதற்கும் அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதாவது, பல நூற்றாண்டுகளாக யூதர்களை ஏசுநாதரின் கொலைகாரர்கள் என்றும் பொருளாதாரச் சுரண்டர்கள் என்றும் பழி சுமத்தி அவர்களைப் பலவழிகளிலும் துன்புறுத்தி நாடோடிகள்போல் உலகெலாம் அலையவிட்டு இறுதியாக ஹிட்லர் நச்சுப்புகையாலும் பட்டினியாலும் அவர்களைக் கொன்று குவித்தபோதும் மௌனிகளாய் இருந்தமை மேற்கு நாட்டவர்களுக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அந்த உணர்வை மறப்பதற்கு நாடற்ற ஓர் இனத்துக்கு நாடொன்றை உருவாக்கிக் கொடுப்பது சிறந்ததெனக் கருதி இஸ்ரவேலை பலஸ்தீன மக்கள் மத்தியில் புகுத்தினர். ஆனாலும் ஐரோப்பியர் யூதர்களுக்கு இழைத்த துன்பங்களுக்கு மத்தியிலெல்லாம் நேசக்கரம் நீட்டி யூதர்களை தம்முடன் வாழச்செய்தவர்கள் முஸ்லிம்கள். அந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர்தான் பலஸ்தீனர்கள். அவர்களைத்தான் நன்றிமறந்த இஸ்ரவேல் இன்று கொன்று குவிக்கிறது.
போராட்டமே ஒரே வழி
பலஸ்தீன மக்கள் தங்களுக்கு இருக்கின்ற சொற்ப நிலத்தையாவது பாதுகாக்கும் முகமாகத் தொடர்ந்து போராடுகிறார்கள். அதைவிட அவர்களுக்கு வேறு வழி இல்லை. அந்தப் போராட்டத்தின் அவலத்தைத்தான் கடந்த சில நாட்களாக உலகம், அதிலும் குறிப்பாக மேற்கு நாடுகள், பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன. வழமைபோல் அவர்கள் பார்வையில் குற்றம் இஸ்ரவேல்மேல் அல்ல, ஹமாஸ் என்னும் தீவிரவாதிகள்மேல் என்று கூறப்படுகின்றது. ஹமாஸின் நூற்றுக்கணக்கான ஏவு கணைகள் இஸ்ரவேலின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பதால் இஸ்ரவேல் தன்னைப் பாதுகாக்க காசாவினைக் குண்டுபோட்டுத் தகர்க்கிறதாம். எத்தனை முறைதான் இந்தப் பாடலைக் கேட்பதோ? முதலில் சில வரலாற்று உண்மைகளைப் புரிந்து கொள்வது அவசியம்.
ஹமாஸ் தீவிரவாத இயக்கமா?
பலஸ்தீனர்களின் உரிமைகளைப்பற்றியும் அவர்களின் சுதந்திரத்தைப்பற்றியும் அரபு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் பாராமுகமாக இருந்ததைக்கண்ட பலஸ்தீன புத்திஜீவிகள் தாமாகவே தமது உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராடத் தொடங்கினர். அதற்காகப் பல இயக்கங்கள் அவர்களிடையே தோன்றலாயின. அவற்றுள் ஜோர்ஜ் ஹபாஷ் தலைமையில் உருவாகிய பலஸ்தீன விடுதலை மக்கள் முன்னணியும் யசீர் அரபாத் தலைமையில் உருவான அல்-பத்தா என்ற பலஸ்தீன விடுதலை இயக்கமும் முக்கியமானவை. இவ்விரு இயக்கங்களுக்குமிடையே ஏற்பட்ட சித்தாந்த ரீதியிலான வேறுபாடுகளால் அவற்றின் போராட்ட உத்திகளும் வேறுபடலாயின. ஈற்றில் அல்-பத்தா இயக்கமே பலஸ்தீன மக்களின் தலையாய போராட்ட இயக்கமாக உலகெங்கும் கருதப்பட்டது. இதனால் அல்-பத்தாவை அழிப்பதே இஸ்ரவேலின் பிரதான நோக்கமாக மாறியது. அந்த இயக்கத்தைத்தான் ஒரு தீவிரவாத இயக்கமென இஸ்ரவேலும் அதற்கு ஆதரவான மேற்கு நாடுகளும் படம்பிடித்துக் காட்டின.
அது மட்டுமல்ல அரபு நாடுகளும்கூட அல்-பத்தாவுக்குப் பயந்தன. ஏனெனில் ஒரு முறை அரபாத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அல்-பத்தாவின் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் அரபு நாடுகளுக்கு ஊடாகவே தொடரும் என்று கூறியமை அரபுநாடுகளின் தலைவர்களை கதிகலங்க வைத்தது. எனவே, பலஸ்தீன மக்களிடையே அல்-பத்தாவுக்கிருந்த செல்வாக்கை குறைப்பதற்காக அதற்கெதிராக இன்னுமோர் இயக்கத்தை இஸ்ரவேல் உருவாக்க முனைந்தது. அந்த முனைப்பின் விளைவே ஹமாஸ்.
கால் ஊனமுற்று பார்வையும் குறைவான பலஸ்தீனிய ஷேக் அஹ்மத் யாசின் (1936–-2004) ஓர் இமாமும் அரசியல்வாதியுமாவார். செய்யத் குதுபுவின் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் பலஸ்தீனக் கிளையினை 1973இல் ஆரம்பித்தவரும் அவரே. அவர் உருவாக்கிய முஜாமா அல்-இஸ்லாமிய என்ற தர்ம ஸ்தாபனம் பல நன்கொடைகளை அரபு நாடுகளிலிருந்து பெற்று பலஸ்தீன மக்களின் தேவைகளைக் கவனித்துவந்ததால் அது அம்மக்களிடையே செல்வாக்கு நிறைந்த ஓர் இயக்கமாக வளரலாயிற்று. அந்த இயக்கத்திலிருந்துதான் 1987இல் வெடித்த முதலாவது பலஸ்தீன இந்திபாதா அல்லது கிளர்ச்சியுடன் உருவாகியது ஹமாஸ். ஆகவே அல்-பத்தாவுக்கு எதிராக ஹமாஸ் உருவாகுவதற்கு முதலில் ஆதரவு வழங்கியது இஸ்ரவேல் என்பதை மறுக்க முடியாது.
அல்-பத்தா இயக்கம் காலவோட்டத்தில் அதன் விடுதலைப் போராட்ட உணர்வுகளை பதவிக்காகவும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் ஈடுவைத்து அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இடமளித்து, அரபு நாடுகளின் இஸ்ரவேலுடனான உறவுக்கும் தலையாட்டத் தொடங்கியதால் பலஸ்தீன மக்கள் அவ்வியக்கத்தின்மேல் வைத்திருந்த நம்பிக்கையை படிப்படியாக இழக்கலாயினர். இதனால் 2009இல் நடந்த பலஸ்தீனப் பாராளுமன்றத் தேர்தலில் மொத்தம் 132 ஆசனங்களில் 76 ஆசனங்களை ஹமாஸ் இயக்கம் வென்று அமெரிக்காவையும் இஸ்ரவேலையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனே எழுந்தது ஹமாஸூக்கெதிரான தீவிரவாத இயக்கமென்ற அமெரிக்க-இஸ்ரவேல் கூட்டுப் பிரச்சாராம். எப்படியாவது பலஸ்தீனத்தில் ஹமாஸ் அரசாங்கம் அமைப்பதைத் தடுப்பதே இந்தப்பிரச்சாரத்தின் நோக்கம். அதன் விளைவுதான் மேற்குக் கரையில் அல்-பத்தாவும் காசாவில் ஹமாஸூம் தனித்தனியே ஆளவேண்டி வந்த வரலாறு. இப்போது கூறுங்கள் வாசகர்களே, பலஸ்தீனத்தில் ஜனநாயகம் வளரவிடாமல் தடுத்தது ஹமாஸா அமெரிக்காவா? ஹமாஸ் தீவிரவாத இயக்கமென்றால் அதனை தீவிரவாதியாக்கியது யார்? பலஸ்தீனர்களா அல்லது இஸ்ரவேலும் அமெரிக்காவும் அவற்றின் நேச நாடுகளுமா?
இந்த நாடகத்தை விளங்கிக் கொண்டால் பலஸ்தீனம் முற்றாக ஒரு நாள் அகன்ற இஸ்ரவேலுக்குள் அடக்கப்படும்வரை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இஸ்ரவேலின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு வழங்கிக்கொண்டே இருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவ்வாறு அடக்கப்பட்டபின் பலஸ்தீன மக்களின் நிலை அவுஸ்திரேலியா ஆதிவாசிகளின் நிலமைக்கும் கீழே தள்ளப்படுவது நிச்சயம். இந்த நிலையில் உலக முஸ்லிம்கள் உணரவேண்டிய இன்னுமோர் கசப்பான உண்மையும் உண்டு.
ஐயோ! அரபு நாடுகளே
இஸ்ரவேல் போராயுத பலமுள்ள ஒரு நாடு. அது மட்டுமல்ல, அதற்குத் தேவையான ஆயுதங்களை அந்த நாடே உற்பத்தி செய்யக்கூடிய வல்லமையும் அதற்குண்டு. அதற்குத் தேவையான விஞ்ஞானிகளையும் வல்லுனர்களையும் விஞ்ஞான ஆய்வு கூடங்களையும் அந்த நாடு உற்பத்தி செய்துள்ளது. அதற்கேற்றவாறு அந்த நாட்டின் கல்வி அமைப்பும் அமைந்துள்ளது. எனவே அந்த நாட்டை எதிர்த்துப் போராடவேண்டுமானால் அதே வளங்களைக்கொண்ட நாடுகளாலேதான் முடியும்.
1948 இலிருந்து மூன்று தடவைகளிலாவது அரபு நாடுகள் இஸ்ரவேலுடன் மோதித் தோல்வியைத் தழுவின. ஆனால் அதன் பின்னராவது விஞ்ஞான ரீதியாகத் தமது நாடுகளை முன்னேற்றம் அடையச்செய்து இஸ்ரவேலுக்கீடாகத் தம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எந்த ஒரு அரபு நாட்டுக்காவது எழுந்ததுண்டா? அந்நிய நாடுகளிடமிருந்து போர்க்கருவிகளை விலைக்கு வாங்கினாலும் அவற்றை இயக்கும் திறமையாவது இந்த நாடுகளிடம் இருக்கின்றதா? இந்த நிலையில் இஸ்ரவேலை எதிர்த்துப் போராடுவது எப்படி?
உலக இஸ்லாமியக் கூட்டமைப்பில் 57 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலக சனத்தொகையில் முஸ்லிம்கள் இருபது சதவீதத்தினர் என்று பெருமையோடு கூறப்படுகிறது. ஆனால் எந்த ஒரு நாட்டுக்காவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ரத்து அதிகாரத்துடன் அங்கத்துவம் உண்டா? ஏன் இந்தப் பலஹீனம்? வறுமையே இதற்குக் காரணம் என்று நீண்டகாலமாகக் கூறிவந்தனர். ஆனால் 1980 களிலிருந்து இறைவனே அந்த வறுமையை விரட்ட வழிவகுத்ததுபோன்று எண்ணிக் கணக்கெடுக்க முடியாத அளவுக்கு எண்ணெய் வளத்தினால் மலைபோன்று பணம் வந்து குவிந்தது. அந்தப் பணத்தைவைத்து என்ன செய்தார்கள்? எத்தனை விஞ்ஞான ஆய்வுகூடங்களை அமைத்து எத்தனை விஞ்ஞானிகளையும் அறிவாளிகளையும் உருவாக்கினர்? உல்லாசபுரிகளையும் மாடமாளிகைகளையும் ஆடம்பர விடுதிகளையும் உருவாக்கிய அளவுக்கு ஏன் விஞ்ஞான கூடங்களையும் நூல்நிலையங்களையும் ஆய்வு நிலையங்களையும் அமைக்கவில்லை? அமைக்கப்பட்ட கல்விக் கூடங்களிலும் என்ன வகையான கல்வியைப் புகட்டினர்? சிந்தனையை மட்டந்தட்டி, சிந்தனையாளர்களையும் சிறையிலடைத்து, மரபுக்கல்வியையும் மரபுவாதிகளையும் வளர்த்துவிட்டதனால் எத்தனையோ முஸ்லிம் அறிஞர்களும் ஆய்வாளர்களும் மேற்கு நாடுகளுக்குப் படையெடுத்ததுதான் மிச்சம்.
அரபு நாடுகளுக்குப் பணம் குவியத்தொடங்கிய காலத்திலேதான் சீனாவும் இந்தியாவும் பொருளாதார, கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு தமது நாடுகளை முன்னேற்றத் தொடங்கின. இன்றைக்கு அந்த நாடுகளுக்கு நிகராக எந்த ஒரு முஸ்லிம் நாடாவது வளர்ச்சி பெற்றிருக்கின்றதா? சீனர்களுக்கும் இந்தியர்களுக்குமுள்ள சிந்தனாசக்தி முஸ்லிம்களுக்குக் கிடையாதா? முஸ்லிம்களின் அன்றைய அறிவு வளர்ச்சிக்கு என்ன நடந்தது? யார் அந்த வளர்ச்சிக்குத் தடைக்கல் போட்டனர்?
விஞ்ஞான, தொழில் நுட்ப அறிவை வளர்த்து ஆயுதபலத்துடன் உலக அரங்கின் முன்வரிசையில் நின்றுகொண்டு இஸ்ரவேலுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பதிலடி கொடுக்கக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பத்தை 1980களில் நழுவவிட்டபின் இப்போது அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்களை நடத்துவதனால் பலஸ்தீனம் காப்பாற்றப்படப் போவதில்லை. எண்ணெய் வளத்தாலும் வறிய நாட்டு மக்களின் வியர்வையினாலும் அன்றைய ஆயிரத்தோர் இரவுக் கனவுகளை நனவாக்கி ஜொலிக்கும் இன்றைய அரபு நாடுகள் இப்போது இஸ்ரவேலுடன் நட்புறவு கொண்டாடத் துடிப்பதை எவ்வாறு சரி காண்பதோ? எனவே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டியது இஸ்ரவேலுக்கு எதிராக அல்ல இந்த அரபு நாடுகளுக்கு எதிராகவே.
பலஸ்தீனத் துயர்
பலஸ்தீன மக்களே! உங்களின் தியாகங்களும் இழப்புகளும் வரலாற்றில் எங்குமே மறக்க முடியாத பெருமையும் சோகமும் கலந்த காப்பிய நிகழ்வுகள். ஒவ்வொரு முறையும் நீங்கள் நசுக்கப்பட்டு அழிக்கப்படும் போதெல்லாம் உங்களோடு சேர்ந்து போராட வேண்டியவர்கள் வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆறுதல் கூறிக்கொண்டு விலகி நிற்கின்றனர். சமாதானம் என்ற பெயரில் எதிரிக்கு வக்காலத்து வாங்குபவர்களாக அவர்கள் மாறியுள்ளதை நினைக்கும் போதெல்லாம் எத்தனையோ ஏழை நெஞ்சங்கள் உங்களுடன் சேர்ந்து குமுறுகின்றன. இது அவர்கள் உங்களுக்குச் செய்யும் துரோகம். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. உங்களின் எதிரிகள் உங்களை நசுக்குவதோடு மட்டும் ஆறுதல் அடையப் போவதில்லை. அவர்களின் எதிர்கால ஆக்கிரமிப்பு ஜோர்டானையும் எகிப்தையும் சிரியாவையும் இராக்கையும்கூட குறிவைத்துள்ளது. இதனாலேதான் அந்த நாடுகளையும் எழும்பவிடாமல் மேற்குலகு சீரழித்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் உதுமானியப் பேரரசைச் சின்னாபின்னமாக்கவென்று ஐரோப்பிய நாடுகள் முதலாவது உலகப் போருடன் ஆரம்பித்த சதி இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. பலஸ்தீனப் போராட்டம் அதன் இன்றைய அத்தியாயம். Vidivelli