(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சின் தீர்மானத்திற்கமைவாக 2021 ஆம் ஆண்டின் ஹஜ் கடமைக்காக இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரிகர் எவரையும் சவூதி அரேபியாவுக்கு அனுமதிப்பதில்லை என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக எவரேனும் ஹஜ் முகவர்களுக்கு கட்டணம் செலுத்தியிருந்தால் அதனை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ளுமாறு அரச ஹஜ் குழு அறிவித்துள்ளது.
அத்தோடு அவ்வாறு கட்டணம் செலுத்தி மீளப் பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் இருந்தால் அரச ஹஜ் குழுவைத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வருட ஹஜ் பதிவினை சவூதி ஹஜ் அமைச்சு கட்டுப்படுத்தியுள்ளது. இவ்வருடம் ஹஜ் கடமைக்கு 60 ஆயிரம் பேர் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளனர். சவூதி அரேபிய நாட்டவர்களும், சவூதி அரேபியாவில் வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளும் என மொத்தம் 60 ஆயிரம் பேரே ஹஜ் கடமைக்காக அனுமதிக்கப்படுவர் என சவூதி அரேபியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை காரணமாகவே இத்தீர்மானத்தை மேற்கெண்டதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. இலங்கையர்களுக்கு இலங்கையிலிருந்து இவ்வருட ஹஜ் கடமையை மேற்கொள்ள முடியாது என தேசிய அரச ஹஜ் கமிட்டியின் தலைவர் அஹ்கம் உவைஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அரச ஹஜ் குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் என்போர் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹர்தியை நேரில் சந்தித்து ஹஜ் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து இறுதியாக 2019ஆம் ஆண்டிலேயே 2800 பேர் ஹஜ் கடமையை மேற்கொண்டனர். அதன் பின்பு கொரோனா வைரஸ் காரணமாக சவூதி அரேபியா வெளிநாட்டவர்களை ஹஜ் கடமைக்காக அனுமதிக்கவில்லை.
இவ்வருடம் ஹஜ் கடமைக்காக அனுமதிக்கப்படவுள்ள 60 ஆயிரம் ஹஜ் யாத்திரிகர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அல்லது ஒரு தடுப்பூசி ஏற்றி 14 நாட்களைக் கடந்தவர்களாக அல்லது தடுப்பூசி ஏற்றி தொற்றிலிருந்தும் மீண்டவராக இருக்க வேண்டுமென சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு அறிவித்துள்ளது.- Vidivelli