ஜனாஸாக்களை அடக்க இடம் வழங்கியபோது இந்தளவு மரண வீதத்தை எதிர்பார்க்கவில்லை
தினம் 10-20 வரை ஜனாஸாக்கள் ; நேற்று வரை 660 ஜனாஸாக்கள் அடக்கம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 வைரஸ் தொற்று ஜனாஸாக்கள் அடக்கத்துக்காக எடுத்துவரப்படும் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. தினம் 10க்கும் 20க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான கொவிட் 19 ஜனாஸாக்கள் ஓட்டமாவடி மஜ்மா நகர் விஷேட மையவாடியில் அடக்கம் செய்யப்படுகின்றன. ஓட்டமாவடி–மஜ்மா நகரில் கொவிட் 19 ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு நாம் அனுமதி வழங்கியபோது இந்தளவுக்கு மரணவீதம் அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்கவேயில்லை ஓட்டமாவடியிலும் கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
கொவிட் 19 ஜனாஸாக்கள் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடியில் நேற்று வியாழக்கிழமை வரை 660 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து மட்டும் 7 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஓட்டமாவடியில் கொவிட் 19 தொற்று பரவியுள்ள நிலையில் 3 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாஞ்சோலை, மீராவோடை கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரிவுகளிலிருந்து எவரும் வெளியேறவோ, இப்பிரதேசங்களுக்கு எவரும் உட்பிரவேசிக்கவோ முடியாத அளவில் சுகாதார பிரிவு மற்றும் பொலிஸாரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஓட்டமாவடிக்கு வருகை தரும் ஜனாஸாக்களின் உறவினர்கள் தங்கி தொழுவதற்கும் அன்றாட கடமைகளை பூர்த்தி செய்வதற்கும் மையவாடிக்கு அப்பால் 800 மீற்றர் தூரத்தில் பிரதான வீதியில் இரு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கூடாரங்களை காத்தான்குடி நகரசபை தனது செலவில் அமைத்துள்ளது. பாதுகாப்பு பிரிவினர் இதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மையவாடிக்குள் பாதுகாப்பு பிரிவினர் அமர்ந்து தமது கடமைகளை முன்னெடுப்பதற்கும் காத்தான்குடி நகரசபை கூடாரமொன்றினை அமைத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மையவாடியைச் சுற்றியும், உள்ளேயும் வெளிச்ச வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மருதமுனையைச் சேர்ந்த கிராமசேவையாளர் ஒருவர் தனது செலவில் இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தில் கொவிட் 19 வேகமாகப் பரவி மரண வீதம் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் மக்கள் கூடுதல் அவதானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஓட்டமாவடி – மஜ்மா நகரில் கொவிட் 19 ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு நாம் அனுமதி வழங்கிய போது இந்தளவுக்கு மரணவீதம் அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்க வேயில்லை’ என்றார்.- Vidivelli