எம்.ஐ.அப்துல் நஸார்
வெறுப்புணர்வு காரணமாக நபரொருவரினால் பிக்கப் ரக ட்ரக் வாகனத்தினால் மோதிக் கொல்லப்பட்ட முஸ்லிம் குடும்பத்தின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த சனிக்கிழமை மாலை கனேடிய நகரமான லண்டனில் நூற்றுக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
ஜனாஸாத் தொழுகையினையடுத்து கனேடிய தேசியக் கொடி போர்த்தப்பட்ட பேழைகள் பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் துடைத்தழிக்கப்பட்டமை மிகவும் மனவேதனையளிக்கின்றது என மரணச்சடங்குகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக லண்டன் நகர முதல்வர் எட் ஹோல்டர் தெரிவித்தார்.
கனேடிய தேசியக் கொடி போர்த்தப்பட்ட பேழைகள் தென்மேற்கு ஒன்டாரியோவிலுள்ள இஸ்லாமிய மத்திய நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒரு மணி நேர இரங்கல் கூட்டம் தொழுகை மற்றும் சமயத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் அனுதாப உரைகளுடன் முடிவுக்கு வந்தது.
ஒட்டுமொத்த கனேடிய தேசமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற உண்மை அவர்களது ஜனாஸா பேழைகள் கனடாவின் அழகிய தேசியக் கொடியினால் போர்த்தப்பட்டிருப்பதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது என கனடாவிற்கான பாகிஸ்தான உயர்ஸ்தானிகர் ரஸா பஷீர் தரார் தெரிவித்தார்.
ஆறுதல்
மிகவும் கவலை தோய்ந்த ஒரு சமூகத்திற்கு ஒரு ஆறுதலை வழங்குகின்ற கடினமானதொரு முன்னெடுப்பாக இந்தத் தொழுகை அமையும் என சனிக்கிழமை இறுதிக் கிரியைகளுக்கு முன்னதாக, உள்ளூர் இமாம் ஒருவர், தெரிவித்திருந்தார்.
நாங்கள் உணர்வு ரீதியாக மிகவும் களைப்படைந்துள்ளோம் என நினைக்கின்றேன் என ஆரிஜி அன்வர் தெரிவித்தார். மிகக் கொடூரமான தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற விடயங்கள் அனைத்திற்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். சனிக்கிழமை சில விடயங்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கின்றோம்.
20 வயதான நதானியேல் வெல்ட்மென், கறுப்பு நிற பிக்கப் ரக ட்ரக் வண்டியினை ஓட்டிச் சென்று மோதியதில் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
சல்மான் அப்சால், 46, அவரது மனைவி மதிஹா சல்மான், 44, அவர்களது 15 வயது மகள் யும்னா அப்சால் மற்றும் சல்மான் அப்சலின் 74 வயதான தாய் தலாத் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதேவேளை 09 வயதான பயேஸ் அப்சால், கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் குணமடைந்து வருகின்றார்.
வெறுப்புணர்வு வெற்றி பெற
அனுமதிக்க மாட்டோம்
திட்டமிடப்பட்ட வெறுப்புணர்வுக் குற்றச் செயல் என பொலிஸாரால் தெரிவிக்கப்படும் படுகொலை செய்யப்பட்ட கனேடிய முஸ்லிம் குடும்ப உறுப்பினர்களைக் கௌரவிக்கும் அஞ்சலி நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அதில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கான மக்களோடு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவும் இணைந்து கொண்டார்.
இது ஒரு பாவச் செயல், ஆனால் இங்குள்ள மக்களின் கருணையும் அப்சால் குடும்பத்தினரின் உயிர்களின் கருணையும் எப்போதும் இருளை அகற்றும் என அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற லண்டன் முஸ்லிம் பள்ளிவாயல் படிக்கட்டுக்களில் மலர்களை வைத்த பின்னர் அங்கிருந்து மக்களுக்கு உரையாற்றியபோது தெரிவித்ததாக டொரொன்டோ ஸ்டார் தெரிவித்துள்ளது.
லண்டன் முஸ்லிம் பள்ளிவாயல் வாகனத் தரிப்பிட வளாகத்தில் மாலை 7.30 இற்கு முன்னதாக ஆரம்பமான அஞ்சலி நிகழ்வு முகநூலில் நேரடியாக அஞ்சல் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
ஜனாஸாத் தொழுகை நடைபெற்ற லண்டன் முஸ்லிம் பள்ளிவாயலின் நுழைவாயில் புற்தரையில் புதிய பூக்கள் வைக்கப்பட்டிருந்தன.
‘இது எமது நகரம்’ என கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய லண்டன் முஸ்லிம் பள்ளிவாயலின் தலைவர் பிலால் ரஹ்ஹால் தெரிவித்தார்.
‘உங்கள் தோலின் நிறம், உங்கள் மத நம்பிக்கை அல்லது நீங்கள் பிறந்த இடம் காரணமாக ஏனையோர் உங்களை வேறுவிதமாக சிந்திக்கத் தூண்டுவதற்கு அனுமதிக்காதீர்கள். இது எமது நகரம், நாங்கள் வேறெங்கும் செல்லமாட்டோம்’ எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய துக்கம்
இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெருந் துயரை ஏற்படுத்திய நிலையில் பல அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் அஞ்சலியில் பங்குபற்றி கவலையினைப் பகிர்ந்து கொண்டனர்.
• நுசைபா அல்-அஸீம் – லண்டன் முஸ்லிம் பள்ளிவாயலின் இரண்டாவது உப தலைவர் :
‘கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த முஸ்லிம் குடும்பம் நடந்த அதே பாதையில் தான் நானும் நடந்தேன். ஆனால் நான் நடந்து முடித்திருக்கவில்லை. நண்பர்களும் குடும்பத்தினரும் ஒருவருக்கொருவரும் சமூக வலைத்தளங்கள் மூலமும் தெரிவித்துக் கொள்வது போல, அது ஒரு விடயமல்ல, அது நானாகவும் இருந்திருக்க முடியும். அவர்கள் எங்களைச் சேர்ந்தவர்கள்’.
• கலாநிதி இன்கிரிட் மட்சன் – வெஸ்டேர்ன் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைத்துறையின் லண்டன் மற்றும் வின்ட்ஸர் சமூகத் தலைவர்.
வெறுப்புணர்வை விடவும் இறைவனின் கருணை, அன்பின் பிரதிபலிப்பினால் உங்கள் அனைவரையும் இன்று காணக்கூடியதாக உள்ளது. வெறுப்புணர்வினை தாண்டி எம்மால் வரமுடியும். இங்குள்ள உங்கள் மனதில் இன்னும் வெறுப்புணர்வு இருக்குமானால் உங்களுக்காக அதிகமதிகம் வேண்டுகின்றோம், உங்கள் மனங்கள் மாற வேண்டும் என வேண்டுகின்றோம். இங்குள்ள அன்புள்ளம் கொண்ட மக்களின் அன்பினை அதிகமதிகம் வெளிப்படுத்துவதற்கு, முழுமையான அன்பை நீங்கள் அறிந்து கொள்ளும் வரை உங்கள் கரங்களும் உங்கள் இதயங்களும் எங்களுக்கு வேண்டும்.
• நவாஸ் தாஹிர் – இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிரான உள்ளூர் பிரசார அமைப்பான ஹிக்மா அமைப்பின் தலைவர்.
நாம் தற்போது வெறுப்புணர்வுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த யுத்தத்தை எதிர்கொள்வதற்கு பிரிவுகளற்ற ஒற்றுமையே அவசியமாகும். அதற்குத் தேவை ஒத்துழைப்பு, அதற்குத் தேவை ஒருங்கிணைந்த தலைமைத்துவம்.
• எரின் ஓடூலே – சமஷ்டி பழமைவாத கட்சியின் தலைவர்.
ஏனைய அனைத்து கனேடியர்களையும் போன்று இந்தக் குடும்பமும் அதே பாதுகாப்பிற்கும், அச்சமின்றி சுதந்திரமாக இருப்பதற்கும் சுதந்திரமாக வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் உரித்துடையதாகும். அது அனைத்து கனேடியர்களுக்கும் யதார்த்தபூர்வமாக இருப்பதை உறுதி செய்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
• ஜக்மீட் சிங் – சமஷ்டி என்.டி.பி கட்சியின் தலைவர்.
முஸ்லிம் சமூகத்தின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தப் பயங்கரவாதச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஹிஜாப் அணிந்துள்ள என் சகோதரிகளுக்கும், தொப்பி அணிந்துள்ள என் சகோதரர்களுக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், அச்சத்திற்குள்ளாகாதீர்கள் என்பதுதான். நாம் நாமாக இருப்பதில் பெருமையடைவதற்காகவே டேர்பனையோ அல்லது ஹிஜாபையோ அணிகின்றோம்.
• அனடனாமி கோல் – சமஷ்டி பசுமைக் கட்சியின் தலைவர்.
எங்கெல்லாம் வேதனை இருக்கிறதோ, அவற்றை எமது செயற்பாடுகளால் சீர் செய்வோம். அவற்றை சீர்செய்யும் எமது செயற்பாடு என்பது, அவர்கள் யாராக இருக்கிறார்களோ அந்த நிலையிலேயே தமது அடையாளங்களுடன் அச்சமோ கவலையோ இன்றி வீட்டைவிட்டு வெளியில் செல்வதற்கு பாதுகாப்புள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாகும். எங்கெல்லாம் பிளவுகள் உள்ளதோ அங்கெல்லாம் ஒற்றுமையினை உறுதிப்படுத்துவோம்.
இன்றைய நாள் முடிவுறும் இத் தருணத்தில் நாம் எம்மைவிட்டு பிரிந்துள்ள இவர்களுக்காக நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் ‘வெறுப்புணர்வு ஒருபோதும் வெற்றிபெறாது’ என்பதாகும்
கனடா முழுவதிலுமுள்ள மாகாணங்களில் இஸ்லாமிய வெறுப்புணர்வுத் தாக்குதல்கள் தொடர்பான கவலைகள் அதிகரித்து வருவதோடு இனவாதம், வெறுப்புணர்வு வன்முறைகள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
2019ஆம் ஆண்டு முஸ்லிம்களை இலக்கு வைத்து 181 இஸ்லாமிய வெறுப்புணர்வுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு முந்தைய ஆண்டில் இடம்பெற்ற 166 தாக்குதல்களோடு பார்க்கையில் ‘மிகச் சிறிய அதிகரிப்பு’ காணப்படுவதாகவும் கனேடிய புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.Vidivelli