ஏ.ஆர்.ஏ.பரீல்
இலங்கையில் பிரபல ஊடகவியலாளராக பணியாற்றி பல்வேறு சவால்களை எதிர்கொண்டவரும், பின்பு இலங்கையிலிருந்து வஷிங்டனுக்கு குடிபெயர்ந்து மினசோட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றியவருமான காதிரி இஸ்மாயிலின் திடீர்மறைவு குறித்து சர்வதேச மட்டத்திலும், இலங்கையிலும் பெரும் எண்ணிக்கையிலானோர் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்.
காதிரி இஸ்மாயில் இலங்கையில் பிறந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் பயின்று BA சிறப்புப் பட்டம் பெற்றார். பின்பு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் MA, PHD பட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இவர் 1987 ஆம் ஆண்டு சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் பதவிக்கு விண்ணப்பித்தார். அப்போது அவர் சிறப்புப் பட்டதாரியாவார். சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இவருக்கு வாராந்தம் பத்தி எழுதுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை – இந்தியா உடன்படிக்கை, எல்ரிரிஈயின் யுத்தம், மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சி எனும் கால கட்டத்தில் இலங்கையில் அவரது ஊடகப் பணி தொடர்ந்தது.
எல்ரிரிஈ யினர் தாம் அரசுடனும், இந்திய அமைதிப்படையுடனும் செய்து கொண்ட உடன்படிக்கையை மிகவும் மோசமாக மீறிய காலமது. அதனால் இந்திய அமைதிப் படை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தனர். இந்நிலைமையில் இது தொடர்பான செய்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து சேகரித்து அனுப்புவதற்கு அவர் பணியாற்றிய ஊடக நிறுவனம் காதிரி இஸ்மாயிலை தெரிவு செய்தது. காதிரி இஸ்மாயிலும் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கு உடன்பட்டார். யாழ் சென்ற காதிரி, முதலாவது செய்தியை கொழும்பு, ஊடக நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தார். பின்னர்அவரிடமிருந்து கொழும்புக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அவர் எங்கிருக்கிறார்? அவருக்கு என்ன நடந்தது? அவர் இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு விட்டாரா? இல்லையேல் தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிபட்டுவிட்டாரா? என்று ஊடக நிறுவனம் தேடுதல்களைச் செய்தது.
இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் மூலம் காதிரி பற்றி அறிந்துகொள்ள அவர் பணியாற்றிய ஊடக நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவர் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காதிரி இஸ்மாயிலின் தந்தையான சட்டத்தரணடி சகீர் இஸ்மாயில், குறிப்பிட்ட ஊடக நிறுவனத்துக்கு கோபத்துடன் சென்றார். தனது மகன் தொடர்பான தகவல்களை வினவினார்.
பின்பு அவர் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இந்திய அமைதிப் படையினர் ஹெலிகொப்டரில் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளைத் தேடிச் சென்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது காதிரி இஸ்மாயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் டிரக் வண்டியில் பயணித்துள்ளார். துப்பாக்கி ரவையொன்று அவரது கழுத்தில் பாய்ந்து காயங்களுக்குள்ளாகியதால் அவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கழுத்தை ஊடறுத்துச் சென்ற துப்பாக்கி குண்டு காதிரி இஸ்மாயிலின் சுவாச குழாய்க்கு அருகில் தங்கி விட்டது. அக்குண்டினை அகற்றினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் இன்றேல் அவர் மாற்றுத் திறனாளியாவார் என வைத்தியர்கள் அறிவித்தனர்.
இவ்விபரம் கொழும்பு பத்திரிகை காரியாலயத்துக்கு அறிவிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் உதவியுடன் அவர் உடனடியாக ஆகாய மார்க்கமாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். அவர் மரணிக்கும் வரை கழுத்தில் அந்த துப்பாக்கி குண்டுடனேயே வாழ்ந்தார்.
பின்பு வாஷிங்டனில் வாழும் தனது உறவுமுறையான சகோதரருடன் வாழ்வதற்காக அவர் அங்கு சென்றார். 1997ஆம் ஆண்டு மினசோட்டா பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியராக (Professor) இணைந்து கொண்டார். அவர் இணைந்து கொண்ட திணைக்களத்தில் பல பதவிகளை வகித்ததுடன் தலைமைப் பதவியையும் வகித்தார்.
அன்று காதிரி இஸ்மாயில் தனது நண்பர்களைச் சந்திக்க வருவதாக அறிவித்திருந்தார். என்றாலும் அவருக்கு நண்பர்களைச் சந்திக்கக் கிடைக்கவில்லை. அவர் தம்மைச் சந்திக்க வராததால் நண்பர்கள் அவருக்கு தொலைபேசி அழைப்புகளை எடுத்தார்கள். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. அன்று மாலை நண்பர்கள் அவரைத் தேடி வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு அவரது உயிர் பிரிந்திருந்தது.
காதிரி இஸ்மாயில் பணியாற்றிய பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பீடாதிபதிகள் என பலரும் அவரது மறைவு குறித்து அனுதாபம் தெரிவிக்கிறார்கள். கவலை வெளியிட்டுள்ளார்கள்.
‘பேராசிரியர் க்வாதிரி இஸ்மாயில் வகுப்பறைக்குள்ளும், வெளியிலும் தாராள மனப்பான்மை கொண்டவர்’ என அவரது மாணவர்களில் ஒருவரான மொய்ப் சௌத்ரி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ‘அவர் பட்டதாரி மாணவர்களுக்காக குரல் கொடுப்பதில் அச்சம் கொள்ளாதவர். எனக்கு அவர் மிகவும் உதவி செய்துள்ளார். எமக்கு வழிகாட்டிய பேராசிரியரை மாணவர்களான நாம் இழந்துள்ளோம்’ எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.
‘காதிரியை பதவிக்காக தெரிவு செய்த குழுவில் நானும் ஒருவன். அவர் அறிவு கூர்மையுள்ளவர் என்பதை அவரது செயற்பாடுகள் மூலம் அறிந்துகொண்டேன். வருடாந்தம் அவரது கற்கை நெறிகளில் மாணவர்கள் பெரிதும் நன்மையடைந்தார்கள். அவரை நாம் இழந்துவிட்டோம்.’ என ஆங்கிலதுறையின் தலைவர் அன்ட்ரூ எல்பென்பில் தெரிவித்துள்ளார்.
காதிரி அறிவுத் திறன் மிக்கவர். சிந்தனையாளர். வியக்கத்தக்க அர்ப்பணிப்புக் கொண்ட ஆசிரியர். தாராளமனப்பான்மை கொண்டவர். அவரது மறைவு பல வகைகளிலும் பாரிய இழப்பாகும் என புவியியல், சூழல், சமூகவியல் துறை பேராசிரியர் வினே கிட்வானி தெரிவித்துள்ளார்.- Vidivelli