நாட்டின் தலைவர் மீது நம்பிக்கை இழந்துள்ளோம் அவர் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள், கப்பல் தீப்பற்றியமை உட்பட சமகால விவகாரங்கள் தொடர்பில் கடும் விசமர்சனங்களை முன்வைக்கிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்
ஏ.ஆர்.ஏ.பரீல்
கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாடொன்றில் கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்த முக்கிய கருத்துகளை தொகுத்து தருகிறோம்.
நமது நாட்டின் இன்றைய நிலை தொடர்பில் நாம் மிகவும் கவலைப்படுகிறோம். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. எமது கடல் எல்லையில் தீப்பற்றிய கப்பல் மாத்திரம் பிரச்சினையல்ல. இந்நாட்டில் ஆட்சியொன்று இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகின்றது. இலங்கை முக்கிய கேந்திர நிலையத்திலுள்ள ஒரு நாடு. இந்நாட்டை பாதுகாப்பதாக அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள். இது மிகவும் கவலைக்குரியதாகும்.
எமது எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் சிதைந்து போயுள்ளன. நாடு எங்கு செல்கிறது? நாட்டை யார் ஆட்சி செய்கிறார்கள். யார் தீர்மானம் மேற்கொள்கிறார்கள்? என்று எமக்குத் தெரியவில்லை . நாட்டில் நிச்சயமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் நாம் அனைத்து மக்களும் தயவு செய்து இந்தப் பயணத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று ஆட்சியாளர்களைக் கேட்க வேண்டியுள்ளது.
இருக்கும் வளங்களை விற்பனை செய்வது அபிவிருத்தியல்ல. இருக்கும் வளங்களை விற்பனை செய்வது இலகுவாகும். எமக்கு ஆத்ம திருப்தி என்று ஒன்று உள்ளது. இதனைப் பாதுகாப்பது அரசியல்வாதிகளின் கடமையாகும். இந்நிலையில் பல நாடுகளுக்கு எமது பூமியை பூஜை செய்ய வேண்டாம் என்று நாம் வேண்டிக் கொள்கிறோம். எமது ஆத்ம கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்பது நாட்டின் நன்மதிப்புக்கு எதிரானதாகும்.
எம்.சி.சி. உடன்படிக்கையை நாம் எதிர்த்த போது அதற்கு ஆதரவளித்த இந்நாட்டின் அரசியல்வாதிகள் இன்று அதனை விட மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுவது எமக்குத் தெரிகிறது. இது குறித்து நாம் கவலைப்படுகிறோம். இந்நாட்டில் பாரிய சதித்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் சதித்திட்டம் இருந்துள்ளதாக முன்னாள் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அந்த சதித்திட்டம் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். அவர் அப்படிக் கூறினால் அதன் பின்னணியை அவர் தேடிப் பார்க்க வேண்டும். இல்லையேல் அந்தப் பதவியை தற்போது ஏற்றுள்ள புதிய சட்டமா அதிபர் இது தொடர்பில் ஆராய வேண்டும். இந்நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவர் கடமைப்பட்டுள்ளார்.
தாக்குதலில் தொடர்புபட்டவர்கள் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருக்கும் சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் எதனை நடைமுறைப்படுத்த வேண்டும், எதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதைப் பரிந்துரைப்பதற்காக ஜனாதிபதி 6 அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றினை நியமித்தார். இது உங்களுக்கு ஒரு சட்டம், எங்களுக்கு ஒரு சட்டம் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஒரு நாடு ஒரு சட்டம் என்றே அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இன்று அந் நிலைமையில்லை. அதிகார பலமுள்ளவர்களுக்கு ஒரு சட்டம், சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம். இதனாலே குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசாரணை குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் உளவுச் சேவையின் முன்னாள் முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு சாராருக்கு ஒருவிதம், மறுசாராருக்கு வேறொரு விதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசு ஊடக சந்திப்புகளை நடத்துகிறது. ஒருவரை கைது செய்கிறார்கள். மறுதினம் விடுதலை செய்கிறார்கள். இதுவே இன்று நடைபெறுகிறது. 20 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற நடத்திய வித்தையை நாம் கண்டோம். இதுவொரு டீல் ஆகும். இன்று ஊழல் நிறைந்த ஆட்சியே உள்ளது.
நாம் 225 பிரதிநிதிகளை இதற்காகவா நியமித்தோம். வாக்களித்தோம். எமது கடல் எல்லையில் கப்பல் தீப்பற்றி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடல் வளம், மீன் உள்ளிட்ட உயிரினங்கள் அழிவுக்குள்ளான பின்பு ஆட்சியாளர்கள் கதை கூறுகிறார்கள். கப்பலில் தீ பரவிய உடனே அதனை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லவில்லை. அமைச்சர் சரியான பதிலொன்று கூறவில்லை.
எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எமது மீனவ சமூகமும் நாடுமே பாதிக்கப்படும். மீனவ சமூகங்கள் ஒன்றிணைந்து குறிப்பிட்ட கப்பல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுங்கள். நான் அதற்குத் தலைமை தாங்குகிறேன். மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாமென ஆட்சியாளர்களை வேண்டிக் கொள்கிறேன். இந்நாட்டில் பௌத்தர்களுடன் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமூக மக்கள் வாழ்கிறார்கள். எனவே ஏகாதிபத்திய ஆட்சி வேண்டாம். அதற்கு இடமளிக்க முடியாது. எமது வளங்களை எமது காணிகளை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பது நிறுத்தப்பட வேண்டும்.
இன்று விவசாயிகளுக்கு உரம் இல்லை. சாப்பாடு இல்லை. தொழில் இல்லை. வருமானம் இல்லை. தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு கூட அரசாங்கத்திடம் போதிய நிதியில்லை. இது ஆட்சியாளர்கள் மீதான சாபமா என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் பயணத்துக்கு தீர்வொன்று தேவை. இலங்கையின் காணிகள், வளங்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்கப்படுகின்றன. இவற்றை விற்பதற்கு நாம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆணை வழங்கவில்லை. நாம் நாட்டை ஆட்சி செய்வதற்கு தலைவர் ஒருவரையே தேர்தல் மூலம் நியமித்தோம். அந்தத் தலைவர் மீது இன்று நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. எனவே நான் மக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன். இதனை அங்கீகரிக்க வேண்டாம்.
எமது கலாசாரம், மதங்கள் மற்றும் சூழ்நிலை, வளங்களைப் பாதுகாப்பவர்களாக ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும். மக்கள் மகிழ்வாக குடும்பத்துடன் வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். நல்லாட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும். பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கங்களும் நாட்டைக் காட்டிக் கொடுத்ததையே செய்துள்ளன. இவ்வாறான ஆட்சியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்காதீர்கள். ஆட்சியாளர்கள் தமது மோசமான பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நாடு கொள்கை, கலாசார, சமய, பொருளாதார துறையில் பின் நோக்கிச் செல்கிறது. மக்கள் பக்கம் இருந்து தீர்மானம் மேற்கொள்ளும் தலைவர்களே நாட்டுக்குத் தேவை. நாடு இன்று பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் தமது தற்போதைய போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமனம் பெற்ற 6 பேர் கொண்ட அமைச்சரவை குழுவினால் எதுவும் நடைபெறவில்லை. இந்த அமைச்சரவை குழு யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை தீர்மானிப்பதற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டது.
இதனால் இந்நாட்டில் இரு சட்டங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. அதிகார பலம், செல்வாக்கு உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் மற்றும் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமும் என இரு வேறு சட்டங்கள் நடைமுறையிலுள்ளன. எனவே நாட்டில் சட்டம் முறையற்ற விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த தற்போதைய நிலைமை குறித்து நாம் கவலையடைகிறோம். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படாமை குறித்து நாம் இந்த அரசுக்கு எதிராக செயற்படுவோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான பொறுப்புதாரிகளை இனங்காணுவதற்கான விசாரணைகள் எவ்வித அக்கறையுமின்றி நடைபெறுகிறது. இது தொடர்பில் எமக்குத் தெளிவில்லை. எனவே இவ்விவகாரம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கடிதமொன்று அனுப்பி வைத்துள்ளேன்.
முன்னாள் சட்டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரியொருவர் இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் யாரென அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இத்தாக்குதல் தொடர்பான சில விடயங்கள் இதுவரை விசாரணை செய்யப்படவில்லை என்பது தெரிகிறது. முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனுடன் தொடர்புடைய சில இஸ்லாமிய நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடையவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்ட அரசியல்வாதிகள் தொடர்பில் இன்னும் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. அத்தோடு விசாரணை மேற்கொண்டு ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் இன்னும் முறையாக விசாரணை செய்யப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இறுதியாக குண்டினை வெடிக்கச் செய்து கொண்ட ஜெமீல் என்பவர் இராணுவ அதிகாரியொருவரை சந்தித்துள்ளதாக சாட்சியங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் யார்? இந்த தாக்குதலில் அவர் ஜெமீலுடன் தொடர்புபட வேண்டியது ஏன்? என்பது தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் கூட முறையாக விசாரணை செய்யப்படவில்லை? இந்த இராணுவ அதிகாரி யார்.? இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பர்னாந்து பாராளுமன்றத்தில் இந்தக் கேள்வியை எழுப்பினார். இந்தக் காரணிகள் விசாரணை செய்யப்பட வேண்டுமென்றாலும் அது நடைபெறவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு பயங்கரவாதிகள் மட்டக்களப்பில் குண்டுகளை வெடிக்கச் செய்து கொண்டனர். அங்கு பலியானவர்களின் உடற்பாகங்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கையின் படி சாரா ஜெஸ்மினின் உடற்பாகங்கள் அங்கு இருக்கவில்லை. அறிக்கையின் படி சம்பவத்தின் போது சாரா அங்கு இருக்கவில்லை. அப்படியென்றால் அவர் எங்கே? இது தொடர்பிலும் தெளிவாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. என்றாலும் உடற்பாகங்கள் தோண்டப்பட்டு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார் என்ற பொய்யை உறுதிப்படுத்துவதற்கு விசாரணையாளர்கள் முயற்சித்து வருகிறார்கள். உடற்பாகங்களை தோண்டி எடுத்தோம். சாரா அங்கிருந்துள்ளார் என்று கூற முயற்சிக்கிறார்கள்.
சி.ஐ.டி.யும் இது தொடர்பில் முறையாக விசாரணைகள் மேற்கொள்வதில்லை. தாக்குதல் தொடர்பில் முறையாக விசாரணை நடத்துமாறு கோரி நான் நீதிமன்றம் சென்றேன். இதுபற்றி ஆராய இரு சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நீதிமன்றுக்கு அறிவித்தார். என்றாலும் அந்த இரண்டு குழுக்களுக்கும் என்ன நடந்தது என்பது கூட எமக்குத் தெரியவில்லை. இதற்குக் காரணம் அவர்களும் அரசியல் நிகழ்ச்சி நிரலின்படி பணியாற்றுவதேயாகும். அதனால் குறிப்பிட் சி.ஐ.டி குழுக்கள் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அத்தோடு பொலிஸ் மாஅதிபர் மீதும் எமக்கு நம்பிக்கையில்லை.
விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொலிஸ் மா அதிபர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தாலும் அவர் இது தொடர்பில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை. அத்தோடு தாக்குதலை தடுக்க முடியாமற் போனமை தொடர்பாக சட்டமா அதிபர் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புக்கு பொறுப்பான சில முக்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியிருந்தார். இவர்களால் இத்தாக்குதலைத் தடுத்திருக்க முடியும். என்றாலும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவில்லை. ஜனாதிபதி நியமித்த 6 அமைச்சர்கள் கொண்ட குழு வெறும் கண்துடைப்பாகும்.
இரண்டாவது நடவடிக்கையாக நாம், முன்னாள் சட்டமாஅதிபர் குறிப்பிட்டவாறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்காக, இனங்காணுவதற்காக சர்வதேச நீதிமன்றின் உதவியை நாட வேண்டியுள்ளது. பிரதான சூத்திரதாரியை அறிய வேண்டியது அவசியமாகும். கத்தோலிக்க ஆலயங்கள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையில் தொடர்புகள் உள்ளமையினால் எங்களால் சர்வதேச ரீதியில் நடவடிக்கை மேற்கொள்வது இலகுவாக உள்ளது.
எங்களுக்கு சர்வதேச நாடுகளுடன் தொடர்புகள் உள்ளன. மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்களை நேரடியாக தொடர்பு ு கொள்ளும் சக்தியும் எம்மிடம் உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவுள்ளோம். ஏனென்றால் எந்தவொரு கத்தோலிக்கரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படவில்லை. நாங்கள் இஸ்லாமியர்களைப் பாதுகாக்க முயற்சித்தோமே அவர்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படவில்லை. கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் அவர்களைப் பாதுகாப்பதற்கே முயற்சித்தோம். முஸ்லிம்களுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் இடம்பெறா வண்ணம் நாம் பாதுகாத்தோம். நாம் தொடர்ந்தும் அவர்களைப் பாதுகாப்போம். நாம் தொடர்ந்தும் முஸ்லிம்களை மதிக்கிறோம். அதனால் எமது மக்களை இவ்வாறு பலியெடுத்ததற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக பக்கசார்பற்ற நேர்மையான விசாரணைகளை மேற்கொள்வது அவசியமாக உள்ளது. இது முஸ்லிம்களுக்கு எதிராகவல்ல பயங்கரவாதத்திற்கு எதிரானதாகும்.
எனவே நாம் வெளிப்படையான விசாரணைகளைக் கோருகிறோம். உண்மையில் என்ன நடந்தது? இந்த மக்கள் ஏன் கொலை செய்யப்பட்டார்கள்? ஏன் அங்கவீனர்களாக்கப்பட்டார்கள்? இதற்குக் காரணம் என்ன? அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் நான் இங்கு தெரிவித்தவைகள் அனைத்தையும் குறிப்பிடவில்லை. என்றாலும் குறிப்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli