கிழக்கில் புதிதாக 73 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகின்றன

பட்டியல் ஆளுநர் ஊடாக அமைச்சுக்கு அனுப்பி வைப்பு என்கிறார் மாகாண கல்விப் பணிப்பாளர்

0 1,151

கிழக்கு மாகாணத்தில் மேலும் 19 பாடசாலைகள், தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாகாணக் கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், இவற்றையும் உள்ளடக்கியதாக 73 பாடசாலைகளின் பெயர்ப்பட்டியல் கிழக்கு மாகாண ஆளுனர் மூலம் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கிழக்கில் மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக் தரமுயர்த்துவது தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து வினவிய போதே கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் ‘விடிவெள்ளி’க்கு இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே 54 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக சிபாரிசு செய்யப்பட்ட போதிலும் மேலும் 19 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு, மொத்தமாக 73 பாடசாலைகளாக இப்பட்டியல் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இப்பட்டியல் தற்போது ஆளுநர் அவர்களால் உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு முன்னதாக கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே 40 தேசிய பாடசாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது 73 பாடசாலைகள் புதிதாக தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்படுகின்ற நிலையில் கிழக்கில் மொத்தமாக 113 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக இயங்கவுள்ளன.

புதிதாக தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளுக்கு தலா 2 மில்லியன் வீதம் கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்டமாக 21 மில்லியன் நிதி மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியினை கல்வி அமைச்சினால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு முற்பணமாக வழங்கியுள்ளோம். ஏனைய 19 பாடசாலைகளுக்குமான அனுமதி கல்வி அமைச்சிலிருந்து கிடைத்தவுடன் அநேகமாக அடுத்த வாரம் அப் பாடசாலைகளுக்கும் முற்பண நிதியாக வழங்கவுள்ளோம். அதேவேளை, அடுத்த இரு வருட காலத்துக்கு புதிய கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது. ஆனால் வேறு விடயங்களுக்கு நிதி ஒதுக்கீடு தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

ஒரு மாகாணப்பாடசாலையைத் தேசியப் பாடசாலையாக மாற்றுவதானால் குறிப்பாக மாகாணக்கல்விப் பணிப்பாளரின் சிபாரிசும், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோரின் இணக்கமும், ஆளுநரின் அனுமதியும் கட்டாயமானதாகும். இந்த நடைமுறையைப் பின்பற்றி முதல் 54 பாடசாலைகளுக்கான அனுமதி இவ்வருட ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதியும், ஏனைய 19 பாடசாலைகளுக்கான அனுமதி இம்மாதம் 09 ஆம் திகதியும் ஆளுநரால் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமுலாக்கலில் முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் என பாடசாலைகள் தரம் பிரித்து அமுலாக்கும் திட்டம் முன்னர் இருந்தது. எனினும் அனைத்துப் பாடசாலைகளையும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் தீர்மானம் கடந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்டதன் பின்பே 54 பாடசாலைகளின் பட்டியல் வெளியிடப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.