(எம்.ஐ.அப்துல் நஸார்)
வடமேற்கு பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் பணியாளர்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மர்தான் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை போலியோ தடுப்பு மருந்து வழங்கும் குழுவினருக்கு பாதுகாப்பு அளித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை முடிந்து பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பொலிசார் இருவரும் கொல்லப்பட்டதோடு, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். போலியோ தடுப்பு மருந்து வழங்கும் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் போலியோ நோயை முற்றாக ஒழிப்பதற்காக நாடு தழுவிய திட்டத்தினை பாகிஸ்தான் ஆரம்பித்து இரண்டு நாட்களுக்கு பின்னர் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.
சுமார் 260,000 முன்னிலை பணியாளர்களின் உதவியுடன் ஐந்து வயதிற்குட்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவதே இந்த வாராந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
போலியோ தடுப்பு மருந்து செயற்பாடு ஒரு மேற்கத்திய சதித்திட்டத்தின் ஒரு பகுதி எனத் தெரிவித்து பாகிஸ்தான் போராளிகள் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் பணியாளர்கள் மீதும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸார் மீதும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.
2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்க கமாண்டோக்களால் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கண்டுபிடிப்பதற்கான சூட்சுமமாக சிஐஏ இனால் ஒரு போலி ஹெபடைடிஸ் தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்படது என்பது தெரியவந்ததை அடுத்து இந்த தாக்குதல்கள் அதிகரித்தன.
கடந்த ஜனவரியில், மாகாணத்தில் இதேபோன்றதொரு துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டார். கடந்த மார்ச் மாதத்தில், எல்லைப் பகுதிகளில் போலியோ தடுப்பு மருந்து திட்டத்தில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்களை துப்பாக்கிதாரிகள் கொன்றனர்.- Vidivelli